பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாடு 2025-ல், பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2025 6:53PM by PIB Chennai

வணக்கம்!

தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு. எல். முருகன் அவர்களே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர். கே. ராமசாமி அவர்களே, பல்வேறு வேளாண்மை அமைப்புகளைச் சேர்ந்த அனைத்துப் பிரமுகர்களே, இங்கு வருகை தந்துள்ள மற்ற மக்கள் பிரதிநிதிகளே, எனது அன்புக்குரிய விவசாயச் சகோதர சகோதரிகளே, மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நம்முடன் இணைந்திருக்கும் நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை  தெரிவித்துக் கொள்கிறேன்.

 

முதலில், இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரிடமும் மற்றும் நாடு முழுவதுமுள்ள எனது விவசாயச் சகோதர சகோதரிகளிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நான் இங்கு வந்து சேர ஒரு மணிநேரம் தாமதமாகிவிட்டது. ஏனெனில், இன்று காலை நான் சத்ய சாய் பாபாவுக்காக நடந்த ஒரு நிகழ்ச்சிக்காகப் புட்டபர்த்தியில் இருந்தேன், அங்கு நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் நீடித்தது. அதன் காரணமாக இங்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதும் பலரும் காத்திருப்பதை நான் பார்க்கிறேன், எனவே உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன்.

 

பாண்டியன் அவர்களின் உரையை நான் கேட்டபோது, சிறு வயதிலேயே யாராவது எனக்குத் தமிழ் கற்பித்திருந்தால், அவரது பேச்சை நான் இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாமே என்று தோன்றியது. ஆனால், எனக்கு அந்த நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், நான் புரிந்து கொள்ள முடிந்த வரையில், அவர் ஜல்லிக்கட்டு பற்றிப் பேசியதுடன், கோவிட் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் குறிப்பிடுவதை என்னால் உணர முடிந்தது. பாண்டியன் அவர்களின் உரையை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எனக்கு அனுப்புமாறு ரவி அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். நான் அதைப் படிக்க விரும்புகிறேன். ஆனால், அவரது உணர்வுகளை என்னால் முழுமையாக உணர முடிந்தது, அது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் மேடைக்கு வந்தபோது, அங்கு கூடியிருந்த பல விவசாயச் சகோதர சகோதரிகள் தங்கள் கம்காக்களை (துண்டுகளை) அசைப்பதைக் கவனித்தேன். நான் வருவதற்கு முன்னரே பீகாரின் தென்றல் இங்கு வந்துவிட்டதைப் போல உணர்ந்தேன்.

 

அன்பான எனது விவசாயச் சகோதர சகோதரிகளே,

 

கோயம்புத்தூரின் இந்த புனித மண்ணில், முதலில் மருதமலை முருகனை வணங்குகிறேன். கோயம்புத்தூர் என்பது கலாச்சாரம், கருணை மற்றும் ஆக்கத்திறன் கொண்ட பூமி. இந்த நகரம் தென்னிந்தியாவின் தொழில்முனைவோர் வலிமையின் சக்தி மையமாகத் திகழ்கிறது. இதன் ஜவுளித் துறை நம் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்களிப்பை அளிக்கிறது. மேலும், கோயம்புத்தூர் இப்போது கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது, ஏனென்றால் அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இப்போது குடியரசு துணைத்தலைவராக இருந்து நம் அனைவருக்கும் வழிகாட்டுகிறார்.

நண்பர்களே,

இயற்கை விவசாயம் என்பது என் மனதிற்கு மிக நெருக்கமான ஒரு விஷயம். இந்த அற்புதமான தென்னிந்திய இயற்கை விவசாய உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்த தமிழ்நாட்டின் அனைத்து விவசாயச் சகோதர சகோதரிகளுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று முன்பு கண்காட்சியைப் பார்வையிடவும், பல விவசாயிகளுடன் உரையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சிலர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் முனைவர் பட்டம் (PhD) முடித்துவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். சிலர் நாசாவில் சந்திரயான் தொடர்பான மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு மீண்டும் விவசாயம் செய்ய வந்துள்ளனர். அவர்கள் தாங்களே சாகுபடி செய்வது மட்டுமல்லாமல், பல விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

 

இன்று, நான் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் போயிருந்தால், என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றை இழந்திருப்பேன் என்பதைப் பொதுவில் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று இங்கு நான் நிறைய கற்றுக்கொண்டேன். மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழ்நாட்டு விவசாயிகளின் துணிச்சலையும் அவர்களின் வலிமையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். இங்கு விவசாயச் சகோதர சகோதரிகள், வேளாண் விஞ்ஞானிகள், தொழில் கூட்டாளர்கள், புத்தொழில் முனைவோர் மற்றும் புதுமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

நண்பர்களே,

 

வரும் ஆண்டுகளில் இந்திய விவசாயத்தில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படுவதை நான் காண்கிறேன். இயற்கை விவசாயத்திற்கான உலகளாவிய மையமாக (Global Hub) மாறுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது. நமது பல்லுயிர்த்தன்மை ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது, மேலும் நம் நாட்டின் இளைஞர்கள் இப்போது விவசாயத்தை ஒரு நவீன, விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். இது நம் நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு அபரிமிதமான பலத்தை அளிக்கப் போகிறது.

எனது விவசாயச் சகோதர சகோதரிகளே,

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத் துறையும் மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. நமது விவசாய ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. விவசாயத்தை நவீனப்படுத்த, விவசாயிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய சாத்தியமான அனைத்து வழிகளையும் அரசாங்கம் திறந்துவிட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், கிசான் கடன் அட்டை (Kisan Credit Card - KCC) மூலம் விவசாயிகள் ரூபாய் 10 இலட்சம் கோடிக்கும் அதிகமான உதவியைப் பெற்றுள்ளனர். இந்த 10 லட்சம் கோடி ரூபாய் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு எண்ணிக்கை. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோரும் KCC திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட பிறகு, அவர்களும் இதனால் பெரும் பயனடைந்துள்ளனர். உயிர் உரங்களுக்கான (Bio-fertilizers) ஜி.எஸ்.டி.யைக் குறைத்ததும் விவசாயிகளுக்குக் கணிசமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது.

நண்பர்களே,

இங்கு இருந்தபடியே, நாட்டின் விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் அடுத்த தவணையைச் சற்று முன்பு நாங்கள் வெளியிட்டோம். நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 18,000 கோடி நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. இங்கும், தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான விவசாயிகள் பி.எம்-கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பணத்தைப் பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 4 இலட்சம் கோடி நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தொகை விவசாயிகளின் பல்வேறு விவசாயம் தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவியுள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ள கோடிக்கணக்கான விவசாயச் சகோதர சகோதரிகளுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பின்னால் இரண்டு இளம் பெண்கள் நீண்ட நேரமாகப் பதாகைகளை (Placards) ஏந்தி நிற்கிறார்கள். அவர்களின் கைகள் சோர்ந்துவிடும். பாதுகாப்புப் பணியாளர்கள் அந்தப் பதாகைகளை அவர்களிடம் இருந்து பெற்று என்னிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் வைத்திருக்கும் செய்தியை நான் மிகத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்வேன். தயவுசெய்து அதைப் பெற்று என்னிடம் கொண்டு வாருங்கள்.

இவ்வளவு நேரமாகக் கையை உயர்த்தி நின்று கொண்டிருந்தாய். நன்றி, மகளே.

நண்பர்களே,

இயற்கை விவசாயத்தின் விரிவாக்கம் என்பது 21-ம் நூற்றாண்டின் விவசாயத்திற்கான தேவையாகும். பல ஆண்டுகளாக, அதிகரித்து வரும் தேவை காரணமாக வயல்களிலும், விவசாயம் தொடர்பான பல துறைகளிலும் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு காரணமாக மண் வளம் குறைந்து வருகிறது, மண்ணின் ஈரப்பதம் பாதிக்கப்படுகிறது, இவற்றுடன் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கான செலவும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கான தீர்வு பயிர் பல்வகைப்படுத்தல் (Crop Diversification) மற்றும் இயற்கை விவசாயத்தில் உள்ளது.

நண்பர்களே,

நம் மண்ணின் வளத்தையும், நம் பயிர்களின் ஊட்டச்சத்து மதிப்பையும் மீட்டெடுக்க, நாம் இயற்கை விவசாயப் பாதையில் முன்னேற வேண்டும். இதுவே நமது நோக்கம் மற்றும் நமது அவசியம். அப்போதுதான் நாம் நமது பல்லுயிர்த்தன்மையை (Biodiversity) எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க முடியும். பருவநிலை மாற்றம் மற்றும் வானிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள இயற்கை விவசாயம் நமக்கு உதவுகிறது. இது நம் மண்ணை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது. இன்றைய நிகழ்வு இந்தப் பாதையில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கப் போகிறது.

நண்பர்களே,

 

இயற்கை விவசாயத்தைத் தழுவுவதற்கு, இந்திய விவசாயிகளுக்கு நமது அரசாங்கம் பெரும் ஊக்கத்தை அளித்து வருகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு, மத்திய அரசாங்கம் தேசிய இயற்கை விவசாய இயக்கத்தை (National Mission on Natural Farming) தொடங்கியது. ஏற்கனவே இலட்சக்கணக்கான விவசாயிகள் இதில் இணைந்துள்ளனர். இதன் நேர்மறையான தாக்கம் குறிப்பாகத் தென்னிந்தியா முழுவதும் தென்படுகிறது. இங்குத் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35,000 ஹெக்டேர் நிலம் இயற்கை மற்றும் அங்கக விவசாயத்தின் கீழ் உள்ளது

 

நண்பர்களே,

இயற்கை விவசாயம் என்பது இந்தியாவின் சொந்தக் கருத்துரு (Indigenous concept) ஆகும். நாம் இதை எங்கிருந்தும் இறக்குமதி செய்யவில்லை. இது நமது பாரம்பரியங்களில் இருந்து உருவானது. நமது முன்னோர்கள் இதை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கினர், மேலும் இது நமது சுற்றுச்சூழலுடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடியது. தென்னிந்திய விவசாயிகள் பஞ்சகவ்யா, ஜீவாம்ருதம், பீஜாம்ருதம், ஆச்சாதனா போன்ற இயற்கை விவசாயத்தின் பாரம்பரிய வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நடைமுறைகள் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, பயிர்களை இரசாயனம் இல்லாததாக வைத்திருக்கின்றன, மேலும் உள்ளீட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கின்றன.

நண்பர்களே,

இயற்கை விவசாயத்தை நாம் ஸ்ரீ அன்னம் - சிறுதானியங்களின் சாகுபடியுடன் இணைக்கும்போது, அது பூமித் தாயைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில், முருகப் பெருமானுக்குக்கூட தேனும் தினை மாவும்தேன் மற்றும் சிறுதானியங்களால் செய்யப்படும் புனிதமான பிரசாதமாகபடைக்கப்படுகிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள கம்பு மற்றும் சாமையும், கேரளாவிலும் கர்நாடகாவிலும் உள்ள ராகியும், தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள சஜ்ஜா மற்றும் ஜோன்னாவும் தலைமுறைகளாக நமது உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இந்த உயர் ஊட்டச்சத்து நிறைந்த உணவை (Superfood) உலகச் சந்தைகளைச் சென்றடையச் செய்ய நமது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கை விவசாயம் மற்றும் இரசாயனம் அற்ற விவசாயம் ஆகியவை இவற்றின் உலகளாவிய அங்கீகாரத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன. எனவே, இந்த மாநாட்டில் இந்தப் பொருள் தொடர்பான முயற்சிகள் நிச்சயமாக விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

நான் எப்போதும் ஒருபயிர்ச் சாகுபடிக்கு (Monoculture) பதிலாக பலபயிர்ச் சாகுபடியை (Multiculture agriculture) ஊக்குவித்து வந்துள்ளேன். இதற்கான பெரும் உத்வேகத்தை நாம் தென் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து பெறுகிறோம். நாம் கேரளா அல்லது கர்நாடகாவின் மலைப் பகுதிகளுக்குச் சென்றால், அங்குப் பல அடுக்கு விவசாயத்திற்கான (Multi-storey agriculture) உதாரணங்களைக் காணலாம். ஒரே வயலில், தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் மற்றும் பழச் செடிகள் இருக்கும். அவற்றிற்குக் கீழே, மசாலாப் பொருட்களும், கருமிளகும் பயிரிடப்படுகின்றன. இதன் பொருள், முறையான திட்டமிடலுடன் ஒரு சிறிய பகுதியில் பல பயிர்களை வளர்க்க முடியும் என்பதே. இதுவே இயற்கை விவசாயத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த விவசாய மாதிரியை நாம் அகில இந்திய அளவில் கொண்டு செல்ல வேண்டும். இந்த நடைமுறைகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு செயல்படுத்தப்படலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. உலகின் பழமையான, இன்றும் செயல்பாட்டில் உள்ள அணைகள் இந்தப் பகுதியில்தான் கட்டப்பட்டன. கலிங்கராயன் கால்வாய் இங்கு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள கோவில் குளங்கள் பரவலாக்கப்பட்ட நீர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு (Decentralized water conservation systems) ஒரு முன்மாதிரியாக விளங்கின. ஆற்று நீரை கட்டுப்படுத்தி அதை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதற்கான ஒரு அறிவியல் மாதிரியை இந்தப் பூமி உருவாக்கியது. இந்த பிராந்தியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மேம்பட்ட நீர்ப் பொறியியலை (Advanced water engineering) வெளிப்படுத்தியது. எனவே, நாட்டிற்கும் உலகிற்கும் இயற்கை விவசாயத்திற்கான தலைமைத்துவமும் இந்தப் பகுதியிலிருந்துதான் உருவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

ஒருவிக்சித் பாரதம்’ (வளர்ச்சியடைந்த இந்தியா)-விற்காக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து வருங்கால விவசாயச் சூழலியலை உருவாக்க வேண்டும். நாடு முழுவதுமுள்ள எனது விவசாயச் சகோதர சகோதரிகளையும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள எனது விவசாய நண்பர்களையும் ஒரு பருவத்தில் ஒரு ஏக்கரில் தொடங்கிப் பார்க்கும்படி வலியுறுத்துகிறேன். அதாவது, ஒரு பருவத்தில் ஒரே ஒரு ஏக்கரில் மட்டும் இயற்கை விவசாயத்தை முயற்சி செய்யுங்கள். உங்கள் நிலத்தின் ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்துச் சோதனை செய்யுங்கள். அதன் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு அதைப் பெருக்குங்கள், மூன்றாம் ஆண்டு மேலும் பெருக்குங்கள், தொடர்ந்து முன்னேறுங்கள்.

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக ஆக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். கிராமங்களுக்குச் செல்லுங்கள், விவசாயிகளின் வயல்களை உங்கள் ஆய்வகங்களாக ஆக்குங்கள். இயற்கை விவசாயத்தை அறிவியல் ஆதரவு பெற்ற இயக்கமாக நாம் மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தின் இந்தக் களப் பணியில் மாநில அரசுகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPOs) பங்கு மிகவும் முக்கியமானது.

 

கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் 10,000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) உருவாக்கப்பட்டுள்ளன. FPOs-களின் உதவியுடன், நாம் விவசாயிகளின் சிறிய குழுக்களை உருவாக்க முடியும். நாம் உள்ளூரிலேயே சுத்தம் செய்தல், பொட்டலமிடுதல் மற்றும் பதப்படுத்துதல் வசதிகளை வழங்க வேண்டும். -நாம் (e-NAM) போன்ற ஆன்லைன் சந்தைகளுடன் அவர்களை நேரடியாக இணைக்க வேண்டும். இது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான பலன்களைப் பெரிதும் அதிகரிக்கும்.

நமது விவசாயிகளின் பாரம்பரிய அறிவு, அறிவியலின் சக்தி, மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு ஆகியவை இணையும்போது, நமது விவசாயிகள் செழிப்படைவது மட்டுமின்றி, நமது பூமித் தாயும் ஆரோக்கியமாக இருப்பாள்.

நண்பர்களே,

இந்த மாநாடும், குறிப்பாக நமது விவசாயச் சகோதர சகோதரிகள் காட்டிய இந்தத் தலைமைத்துவமும், நாட்டில் இயற்கை விவசாயத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புதிய சிந்தனைகளும் புதிய தீர்வுகளும் இங்கிருந்து வெளிவரும். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

என்னுடன் சேர்ந்து கூறுங்கள்:

பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்! மிக்க நன்றி!

-----

(Release ID 2191803)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2242275) வருகையாளர் எண்ணிக்கை : 17