பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பகுரும்பா த்வோ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

பகுரும்பா த்வோ சிறந்த போடோ மரபுகளைக் கொண்டாடுகிறது: பிரதமர்

போடோ அமைதி ஒப்பந்தம் பல வருட மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது - இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டுப் பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்: பிரதமர்

போடோ இளைஞர்கள் அசாமின் கலாச்சார தூதர்களாக உருவெடுத்து வருகின்றனர்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JAN 2026 8:11PM by PIB Chennai

குவஹாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் நடைபெற்ற போடோ சமூகத்தினரின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வான பகுரும்பா த்வோ 2026 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், அசாமின் கலாச்சாரத்தைக் காண்பதும், போடோ சமூகத்தினரின் மரபுகளைப் பார்ப்பதும் தமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம் என்று கூறினார். வேறு எந்த பிரதமரும் இவ்வளவு அடிக்கடி அசாமுக்கு வருகை தந்ததில்லை என்பதை எடுத்துக் கூறிய திரு நரேந்திர மோடி, அசாமின் கலை, கலாச்சாரம் ஒரு பெரிய தளத்தைப் பெற்று, பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை அவர் எடுத்துரைத்தார். பெரிய அளவிலான பிஹு விழாக்கள், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புதுதில்லியில் நடைபெற்ற பிரமாண்டமான போடோ மஹோத்சவம், பிற கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, இது தொடர்பாக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அசாமின் கலை, கலாச்சாரத்தின் தனித்துவமான மகிழ்ச்சியை அனுபவிக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை என்று பிரதமர் கூறினார். மீண்டும் ஒருமுறை பகுரும்பா விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது போடோ அடையாளத்தின் துடிப்பான கொண்டாட்டம் எனவும் அவர் கூறினார். இந்த நிகழ்வோடு தொடர்புடைய அனைவருக்கும், குறிப்பாக கலைஞர்களுக்கு திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

 

பகுரும்பா துவோ வெறும் பண்டிகை மட்டுமல்ல எனவும், போடோ பாரம்பரியத்தை போற்றுவதற்கும், போடோ சமூகத்தின் சிறந்த ஆளுமைகளை நினைவு கூர்வதற்கும் ஒரு விழா என்றும் பிரதமர் கூறினார். போடோபா உபேந்திர நாத் பிரம்மா, குருதேவ் காளிசரண் பிரம்மா, ரூப்நாத் பிரம்மா, சதீஷ் சந்திர பாசுமதரி, மொராதம் பிரம்மா, கனகேஸ்வர் நர்சாரி போன்றவர்களின் பெயர்களை அவர் நினைவு கூர்ந்தார். சமூக சீர்திருத்தம், கலாச்சார மறுமலர்ச்சி, அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றுக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் குறிப்பிட்டார். போடோ சமூகத்தின் அனைத்து சிறந்த பிரமுகர்களுக்கும் மரியாதை செலுத்துவதாகப் பிரதமர் கூறினார். அசாமின் பாரம்பரியம் இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது என்றும் அவர் கூறினார். இந்த அரசால், பகுரும்பா த்வோ போன்ற பிரமாண்டமான விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், பிஹுவுக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். அசாமி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும், போடோ மொழி அசாமின் கூடுதல் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், போடோவில் கல்வியை வலுப்படுத்த தனி இயக்குநரகம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்தை கண்டு மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாக அவர் கூறினார். ஒரு காலத்தில் வன்முறை நிலவிய சூழல் மாறி, இப்போது அமைதி நிலவுவதை அவர் குறிப்பிட்டார். இத்தகைய பிரமாண்டமான கொண்டாட்டம் அசாமின் சாதனை மட்டுமல்ல என்றும், இந்தியாவின் சாதனை என்றும், நாட்டின் ஒவ்வொரு நபரும் அசாமின் மாற்றத்தில் பெருமைப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

அசாம் மக்களும் போடோ சகோதர, சகோதரிகளும் தம் மீது நம்பிக்கை வைத்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளிடம் வளர்ச்சிக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் ஆசீர்வாதத்துடன் அந்தப் பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2020 போடோ அமைதி ஒப்பந்தம் பல ஆண்டு கால மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நம்பிக்கையை மீட்டெடுத்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு, பிரதான நீரோட்டத்தில் இணைய வழிவகுத்ததாக திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, போடோ பிராந்தியத்தில் கல்வியிலும் வளர்ச்சியிலும் புதிய வாய்ப்புகள் தோன்றியதாகவும், அமைதி அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது என்றும், மக்களின் முயற்சிகள் மிக முக்கியமான பங்கை வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

தங்களது அரசின் முயற்சிகளின் பலன்கள் இப்போது தெளிவாகத் தெரிகின்றன என்பதை எடுத்துரைத்த பிரதமர், திறமையான போடோ இளைஞர்கள் அசாமின் கலாச்சாரத் தூதர்களாக மாறி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கி, புதிய நம்பிக்கையுடன் கனவு கண்டு, அந்தக் கனவுகளை நனவாக்கி, அசாமின் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக உள்ளனர் என்பதை எடுத்துரைத்தார்.

 

திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தலைமையிலான மாநில, அரசு லட்சக்கணக்கான நிலங்களை ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவித்து, அசாமின் உரிமையுள்ள மக்களுக்கு மீட்டுத் தருவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

சமூகம் அதன் வேர்களுடன் இணைந்திருக்கும்போதும், சம வாய்ப்புகள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும்போதும் நேர்மறையான மாற்றம் தெரியும் என்று பிரதமர் கூறினார். அசாமின் நம்பிக்கை, திறன், முன்னேற்றம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு புதிய பலத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார். வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் அசாம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது எனவும் இந்த மாற்றத்தில் போடோலாந்தும் அதன் மக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்த மாபெரும் கொண்டாட்டத்திற்கு அனைவருக்கும் அவர் மீண்டும் ஒருமுறை தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

 

இந்த நிகழ்வில் அசாம் ஆளுநர் திரு லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனோவால், திரு பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2215698)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2242002) வருகையாளர் எண்ணிக்கை : 37