பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2025 8:32PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி
புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2025-ல் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் "நாளைய மாற்றத்தை நோக்கி" என்பதை எடுத்துரைத்தார். இந்துஸ்தான் டைம்ஸ் 101 ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி, மதன் மோகன் மாளவியா, கன்ஷ்யாம்தாஸ் பிர்லா போன்ற சிறந்த தலைவர்களின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது என்றும் கூறினார். "நாளைய மாற்றத்தை நோக்கி" விவாதிக்கும்போது, இந்தியாவில் நிகழும் மாற்றம் வெறும் சாத்தியக்கூறுகளைப் பற்றியது மட்டுமல்ல எனவும், அது வாழ்க்கை, மனநிலை என அனைத்தையும் மாற்றி அமைத்து, உண்மையான நம்பிக்கையை தேசத்திற்கு அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தில், அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் கூறினார். 21-ம் நூற்றாண்டின் நான்கில் ஒரு பங்கு ஏற்கெனவே கடந்துவிட்ட ஒரு கட்டத்தில் நாம் நிற்கிறோம் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த 25 ஆண்டுகளில் உலகம் நிதி நெருக்கடிகள், உலகளாவிய தொற்றுநோய், தொடர்ச்சியான போர்கள் உட்பட பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலைகள் அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த உலகிற்கு சவாலாக அமைந்துள்ளன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். நிச்சயமற்ற இந்த சகாப்தத்தில், இந்தியா தன்னம்பிக்கையால் முன்னேறுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். உலகம் மந்தநிலை பற்றிப் பேசும்போது, இந்தியா வளர்ச்சிக் கதையை எழுதுகிறது என்று அவர் கூறினார். உலகம் நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, இந்தியா நம்பிக்கையின் தூணாக மாறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா உயர் வளர்ச்சிக்கும் குறைந்த பணவீக்கத்துக்கும் உதாரணமாக உருவெடுத்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அதிக பணவீக்கம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்த ஒரு காலம் இருந்தது எனவும் ஆனால் இன்று அதே பொருளாதார வல்லுநர்கள் குறைந்த பணவீக்கம் குறித்துப் பேசுகிறார்கள் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல எனவும் அவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல என்றும் அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் நாடு கொண்டு வந்த அடிப்படை மாற்றங்களே இவற்றுக்கு காரணம் என்று பிரதமர் கூறினார். நாளைய மாற்றத்தைப் பற்றி விவாதிக்கும் அதே வேளையில், அது இன்று மேற்கொள்ளப்படும் பணிகளின் வலுவான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்றைய சீர்திருத்தங்களும் இன்றைய செயல்திறனும் நாளைய மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
அரசு செயல்படும் அணுகுமுறையை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்தியாவின் ஆற்றலின் பெரும்பகுதி நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது என்று குறிப்பிட்டார். இந்த பயன்படுத்தப்படாத ஆற்றல் அதிக பயன்படுத்தப்படும்போது, அது மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி என்று அவர் கூறினார். கிழக்கு இந்தியா, வடகிழக்குப் பகுதிகள், கிராமங்கள், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இப்போது அக்கறை செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மகளிர் சக்தி, இளைஞர்கள், கடல்சார் வலிமை, நீலப் பொருளாதாரம், விண்வெளித் துறை ஆகியவற்றின் முழுத் திறன் முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் இப்போது இந்தியா செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு தடைகள் அகற்றப்படும்போது, புதிய சிறகுகள் வானில் பறக்கும் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். 2025-ம் சீர்திருத்தங்களின் ஆண்டாக அமைந்தது எனவும் அதில் மிக முக்கியமானது அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி என்றும் அவர் குறிப்பிட்டார். அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்களின் தாக்கம் நாடு முழுவதும் காணப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு நேரடி வரி முறையிலும் ஒரு பெரிய சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் 12 லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டதாகவும் இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத ஒரு நடவடிக்கையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் இன்றைய பயணம் வளர்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல எனவும் மனநிலையில் மாற்றம், உளவியல் மறுமலர்ச்சி பற்றியது என்றும் பிரதமர் கூறினார். தன்னம்பிக்கை இல்லாமல் எந்த நாடும் முன்னேற முடியாது என்றும், துரதிர்ஷ்டவசமாக, காலனித்துவ மனநிலை இந்தியாவின் நம்பிக்கையை அசைத்தது என்றும் அவர் கூறினார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் இந்த காலனித்துவ மனநிலை ஒரு பெரிய தடையாக இருந்தது என்று பிரதமர் எடுத்துரைத்தார். கப்பல் கட்டுமானமாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு உற்பத்தியாக இருந்தாலும் சரி, இன்று ஒவ்வொரு துறையும் காலனித்துவ மனநிலையை விட்டுவிட்டு புதிய பெருமையை அடைந்து வருகின்றன என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். காலனித்துவ மனநிலையிலிருந்து நாடு முழுமையாக விடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டின் எதிர்காலத் தேவைகளைப் புரிந்துகொண்டு நிகழ்காலத்தில் தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அதனால்தான் இந்தியாவில் உற்பத்தி செய்வோம், தற்சார்பு இந்தியா, இயக்கங்களைப் பற்றி அடிக்கடி பேசுவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தால், இன்றைய இந்தியாவின் நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாளைய மாற்றத்திற்கான பயணம் என்பது ஏராளமான திட்டங்கள், கொள்கைகள், முடிவுகள், பொதுமக்களின் விருப்பங்கள், பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் பயணம் என்பதை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இது ஒரு தொடர்ச்சியான பயணம் எனவும், ஒரு தேசிய உறுதிப்பாடு என்றும் கூறினார். இந்த உறுதிமொழியில் அனைவரின் ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியும் அவசியம் என்பதை சுட்டிக் காட்டி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199902®=3&lang=2
***
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2240760)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam