தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் தளங்களில் காப்புரிமை பாதுகாப்பை உறுதிசெய்யும் பிரசார் பாரதி

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 4:37PM by PIB Chennai

பிரசார் பாரதி  தயாரிக்கும் அல்லது அதன் சார்பில் தயாரிக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் காப்புரிமை அதன் வசமே இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊடக தயாரிப்பு நிறுவனங்கள் காப்புரிமை மீறியதாக சமீபத்தில் எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், சமூக ஊடகங்கள் போன்ற இடைநிலை டிஜிட்டல் தளங்களில் தனிப்பட்ட பயனாளர்கள் மேற்கொள்ளும் காப்புரிமை மீறல்களை பிரசார் பாரதி தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மாநிலங்களவையில் உறுப்பினர் திரு திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தயாரிப்பு பணிகளை மற்றவர்களுக்கு துணை ஒப்பந்தமாக வழங்கியதாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதைத் தவிர்க்க தயாரிப்பு நிறுவனங்களுடன் செய்யப்படும் ஒப்பந்தங்களில் துணை ஒப்பந்தத்தை கட்டுப்படுத்தும் விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

தூர்தர்ஷன் மூலம்  “படைப்பளார் மையம் ” என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளடக்க படைப்பாளர்களை  இணைத்து, சமூகத்திற்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை பரப்புவதே நோக்கமாக உள்ளது.

இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் உள்ளடக்கங்கள் தரமானதாக இருக்க வேண்டும். மேலும் அவை பிரசார் பாரதியின் நிகழ்ச்சி மற்றும் விளம்பர விதிமுறைகளுக்கும், பொருந்தும் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட இருக்க வேண்டும். உள்ளடக்கப் படைப்பாளர்கள் குறைந்தது ஒரு முக்கிய சமூக ஊடக தளத்தில் நல்ல அளவு டிஜிட்டல் சென்றடைவை பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தொகை, நிகழ்ச்சியின் நேர அளவை அடிப்படையாகக் கொண்டு பிரசார் பாரதி நிர்ணயித்த விகிதப்படி வழங்கப்படும்.

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239926) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam