பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோட்டா விமான நிலையத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

1500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நவீன விமான நிலையம், வருங்காலத்தில் இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 3:44PM by PIB Chennai

கோட்டா விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.03.2026) காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், ராஜஸ்தான் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேறி வருகிறது எனவும், புதிய விமான நிலையம் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு ஊக்க சக்தியாக மாறும் என்றும் கூறினார்.

1,500 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த நவீன விமான நிலையம் வடிவம் பெறத் தொடங்கியுள்ள நிலையில், கோட்டா, பூண்டி, பரன், ஜலாவர் ஆகிய இடங்களுக்கு இன்று புதிய நம்பிக்கையின் நாள் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பகுதி மக்களுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட திரு நரேந்திர மோடி, இந்த நவீன விமான நிலையம் வரும் காலங்களில் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தைத் தரும் என்று குறிப்பிட்டார்.

விமான நிலையம் தொடர்பாக மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். விமானங்களுக்காக ஜெய்ப்பூர் அல்லது ஜோத்பூருக்கு பயணம் செய்வதில் உள்ள சிரமத்திலிருந்து மாறி, இந்த விமான நிலையம் தொடங்கப்படும்போது, பயணம் எளிதாகும் எனவும் கோட்டா உட்பட இந்தப் பகுதியில் வர்த்தகம் வேகமாக வளரும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்தப் பிராந்தியத்தின் சுற்றுலாத் திறனைப் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். மேம்படுத்தப்பட்ட விமான இணைப்பு இந்த பிராந்தியத்திற்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் எனவும் இதன் நேரடிப் பலன் இங்குள்ள இளைஞர்கள், வர்த்தகர்கள், உள்ளூர் பொருளாதாரத்திற்குக் கிடைக்கும்" என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் நவீனமயமாக்கலால் கோட்டாவில் ஏற்பட்டுள்ள ரயில் போக்குவரத்துப் புரட்சி குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மாநில நிர்வாகத்தையும், கோட்டா நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவைத் தலைவருமான ஓம் பிர்லாவையும் பிரதமர் பாராட்டினார்.

தேசிய அளவில் விமானப் போக்குவரத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், 2014-ல் 70 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை இப்போது 160-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். "இரட்டை இன்ஜின்" அரசின் செயல்பாடுகளையும், விரைவான முன்னேற்றத்தை அடைவதில் தெளிவான சாதனைகளையும் பிரதமர் குறிப்பிட்டார். ராஜஸ்தான், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு அதிக பலத்தை அளிக்கும் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2236337)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236389) வருகையாளர் எண்ணிக்கை : 71