சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு தழுவிய எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தைப் பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2026 6:26PM by PIB Chennai

இந்தியப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், கருப்பை வாய் புற்றுநோயை (Cervical Cancer) ஒழிப்பதிலும் ஒரு மைல்கல்லாக, நாடு தழுவிய எச்.பி.வி  தடுப்பூசி திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 28) காலை 11:30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கி வைக்கிறார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுடைய சுமார் 1.15 கோடி சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

ஆரம்பத்தில் மூன்று மாத காலத்திற்கு ஒரு சிறப்பு இயக்கமாக  இந்தத் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். அதன் பிறகு, வழக்கமான தடுப்பூசி போடும் நாட்களில் இது தொடர்ந்து கிடைக்கும். பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும்.

கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு:

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1.20 லட்சம் புதிய வழக்குகள் பதிவாவதோடு, சுமார் 80 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' (HPV) வகை 16 மற்றும் 18-ஆல் ஏற்படுகின்றன. இதைத் தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்க முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் பாதுகாப்பு:

இந்தத் திட்டத்தில் 'கார்டசில்' (Gardasil) என்ற தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் 2006 முதல் 50 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின்  வழிகாட்டுதலின்படி, 9 முதல் 20 வயதுடைய பெண்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமான பாதுகாப்பை வழங்குகிறது. இந்தியா ஏற்கனவே 160 நாடுகள் செயல்படுத்தி வரும் இந்தத் தடுப்பூசி வரிசையில் இப்போது இணைகிறது.

அரசு முன்னேற்பாடுகள்:

சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புடன் இணைந்து வெளிப்படையான முறையில் இந்தத் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களுக்குத் தேவையான மருந்துகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினருக்குப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான பெண் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, பெற்றோர்கள் தங்களின் 14 வயது மகள்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்தி, புற்றுநோய் இல்லாத எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

***

(Release ID: 2233632)

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233775) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Kannada