குடியரசுத் தலைவர் செயலகம்
மகாராஷ்டிராவின் ஷேகானில் தேசிய ஆரோக்கியத் திருவிழாவைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
ஆயுஷ் மருத்துவ முறைகள் மக்களின் ஆரோக்கியத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளன: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 2:26PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள ஷேகானில் தேசிய ஆரோக்கியத் திருவிழா, கண்காட்சி 2026-ஐ குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 25, 2026) தொடங்கி வைத்தார். ஆயுஷ் மருத்துவ முறைகளில் முக்கிய பங்களிப்பைச் செய்த ஆறு மூத்த மருத்துவர்களை அவர் பாராட்டி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது பாரம்பரியத்தில், ஒட்டுமொத்த ஆரோக்கியமே மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது என்றார். நாட்டை வலுப்படுத்துவதில் ஆரோக்கியமான மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். ஆயுஷ் மருத்துவ முறைகள் மக்களின் ஆரோக்கியத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளன என்று அவர் கூறினார். ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவ முறைகள் மக்களுக்கு சிறப்பாக பயனளித்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
நமது வயல்கள், சமையலறைகள், காடுகள் ஆகியவை மருத்துவ தாவரங்களையும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மூலிகைகளையும் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். மருந்துகளுக்கான மூலப்பொருட்களைப் பெறுவதற்கும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும் இந்த மதிப்புமிக்க செல்வத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் மிக முக்கியம் என்று அவர் தெரிவித்தார். மருத்துவ தாவரங்களை வளர்ப்பது விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மண் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்களிப்பதாக அவர் கூறினார். எனவே, ஆயுஷ் முறைகளை ஊக்குவிப்பது மக்களின் உடல், பொருளாதார ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் மன அழுத்தமில்லாத, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக யோகாவை ஏற்றுக்கொண்டு பயனடைந்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி, மருந்துகளின் தரப்படுத்துதல், தரக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் ஆயுஷ் அமைப்புகளின் அங்கீகாரத்தை மேலும் மேம்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். நவீன அறிவியல் தலையீடுகள், புதுமைகள், உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை மூலம் பாரம்பரிய மருத்துவ முறைகளை, மக்களுக்கு மேலும் எளிதில் கிடைக்கக் கூடியதாக மாற்றி, அவற்றை முழுமையான சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உருவாக்குவதில் நாம் வெற்றி பெற முடியும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
***
(Release ID: 2232642)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2232760)
வருகையாளர் எண்ணிக்கை : 14