பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சியின் 131-வது அத்தியாயத்தில் 22.02.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 11:38AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.

மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.  பல நாடுகளின் தலைவர்கள், தொழில்துறையின் ஜாம்பவான்கள், புதுமைகள் படைப்போர், தொடக்கத்தொழில் துறையோடு தொடர்புடையவர்கள் எல்லாம் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க வேண்டி, பாரத் மண்டபத்தில் குழுமினார்கள்.  வரவிருக்கும் காலத்திலே செயற்கை நுண்ணறிவுச் சக்தியின் பயன்பாட்டினை உலகம் எந்தவகையில் மேற்கொள்ளும் என்ற வகையிலே இந்த உச்சிமாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நண்பர்களே,

உச்சிமாநாட்டின் போது உலகத்தலைவர்கள், தொழில்நுட்பத்துறையில் முன்னணி வகிப்போர் ஆகியோரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.  செயற்கை நுண்ணறிவின் கண்காட்சியிலே, உலகத்தலைவர்கள் ஏராளமான பொருட்களைக் காட்சிப் படுத்தினார்கள்.  இவற்றில் குறிப்பாக நான் இரண்டு விஷயங்கள் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  உச்சிமாநாட்டிலே இந்த இரு பொருட்களும் உலகெங்கிலிருந்தும் வந்திருந்த தலைவர்களை மிகவும் கவர்ந்தன.  முதல் பொருள் அமூலின் அரங்கத்தில் இருந்தது.  விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதிலே எப்படி செயற்கை நுண்ணறிவு உதவிகரமாக இருக்கிறது என்று இதிலே கூறப்பட்டிருந்தது.  மேலும் எப்படி 24 மணிநேர உதவியால், விவசாயிகள் தங்களுடைய கால்நடை மற்றும் விலங்குகளின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்கிறார்கள் என்பதும் விளக்கப்பட்டிருந்தது.

நண்பர்களே,

இரண்டாவது விஷயம் நம்முடைய கலாச்சாரத்தோடு தொடர்புடையது.  எப்படி செயற்கை நுண்ணறிவின் உதவியோடு நாம் நம்முடைய பண்டைய நூல்களை, நமது தொன்மையான ஞானத்தை, நமது கையெழுத்துப்படிகளை எப்படிப் பாதுகாத்து வருகிறோம், இன்றைக்கும் தலைமுறைக்கு உகந்தபடி அதைக் காத்து வருகிறோம் என்பதை உலகெங்கிலுமிருந்தும் வந்திருந்த தலைவர்கள் கவனித்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

நண்பர்களே,

கண்காட்சியின் போது வெளிப்படுத்தப்பட சுச்ருத சம்ஹிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல்படியாக, தொழில்நுட்பத்தின் துணை கொண்டு நாம் கையெழுத்துப்படிகளின் படத்தரத்தை மேம்படுத்தி அவற்றைப் படிக்க உகந்ததாக எப்படி ஆக்குகிறோம் என்பது ஒன்று.  அடுத்த கட்டமாக இந்தப் படங்கள் இயந்திரத்தால் படிக்கும் வகையிலான எழுத்துக்களாக மாற்றப்பட்டன.  அடுத்தபடியாக, இயந்திரம் வாயிலாகப் படிக்கக்கூடிய உரையை செயற்கை நுண்ணறிவின் மாதிரி படித்தது.  அதோடு கூடவே அடுத்தபடியாக தொழில்நுட்பத்தின் இந்த விலைமதிப்பில்லாத ஞானம் இந்திய மொழிகள் மற்றும் அந்நிய மொழிகளில் எப்படி மொழியாக்கம் செய்யப்படுகிறது என்பதும் செயல்படுத்திக் காட்டப்பட்டது.  பாரதநாட்டின் தொன்மையான ஞானம், நவீன வடிவத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ள உலகத் தலைவர்கள் மிகவும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.

நண்பர்களே,

இந்த உச்சிமாநாட்டிலே செயற்கை நுண்ணறிவுத் துறையிலே பாரதத்தின் அற்புதமான திறமைகளை உலகால் பார்க்க முடிந்தது.  இந்த வேளையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று செயற்கை நுண்ணறிவு மாதிரிகளும் வெளியிடப்பட்டன.  இதுவரையிலான மிகவும் பெரிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடாக இது இருக்கிறது.  இந்த உச்சிமாநாடு தொடர்பாக இளைஞர்களின் உற்சாகமும், ஊக்கமும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தன.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்த உச்சிமாநாட்டின் வெற்றிக்காக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே,

யார் விளையாடுகிறார்களோ அவர்கள் மேம்படுகிறார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு.  விளையாட்டுக்கள் நம்மை இணைக்கின்றன.  இப்போது நீங்கள் உலகக்கோப்பை டி20 ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.  ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கூட ஏதோ ஒரு சிறப்பான ஆட்டக்காரர் மீது உங்கள் கவனம் நிலைத்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  ஜெர்சி வேண்டுமானால் வேறோர் நாட்டினுடையதாக இருக்கலாம், ஆனால் பெயரைக் கேட்டவுடனேயே, அட, இவரு நம்ம நாட்டுக்காரரு இல்லையா என்று தோன்றும்.  அப்போது மனதின் ஓரத்தில் லேசாக ஒரு சந்தோஷம் மலரும்.  ஏனென்றால், அந்த விளையாட்டு வீரர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர், அவருடைய குடும்பம் வசிக்கும் அந்த நாட்டிற்காக விளையாடுகிறார் அவர்.  கானடா, அமெரிக்கா, ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளின் அணிகளில் இன்று பாரத வம்சாழியினர் விளையாடி வருகின்றார்கள்.  இவர்கள் தங்கள்தங்கள் நாடுகளுடைய மேல்சட்டைகளை அணிந்து கொண்டு களமிறங்குகிறார்கள், முழு ஈடுபாட்டோடு அந்த நாட்டின் பிரதிநிதிகளாக விளையாடுகிறார்கள்.  அந்த நாட்டவர்களுக்கு அவர்கள், அவர்கள் நாட்டுடைய நாயகர்களாக இருக்கின்றார்கள்.  ஆனால் அவர்களுடைய பெயர், அவர்களுடைய மொழி, அவர்களுடைய நடைமுறை ஆகியவற்றில் எங்காவது பாரதநாட்டு மணம் கண்டிப்பாக வீசும்.  கானடா அணியில் மிகவும் அதிக அளவிலே இந்திய வம்சாவழியினர் விளையாடுகிறார்கள்.  அணியின் கேப்டன் தில்ப்ரீத் பாஜ்வா பிறந்தது பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரிலே.  நவ்நீத் தாலீவால் சண்டீகர் நகரைச் சேர்ந்தவர்.  இந்தப் பட்டியலில் ஹர்ஷ் டாகர், ஸ்ரேயஸ் மோவா போன்ற பல பெயர்கள் உண்டு, இவர்கள் கானடா நாட்டோடு சேர்த்து, பாரதத்துக்கும் கௌரவம் ஈட்டித் தருகிறார்கள்.  அமெரிக்க அணியிலே பல முகங்கள் பாரத உள்நாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து வெளியானவை.  அமெரிக்க அணியின் கேப்டனான மோனாங்க் படேல், குஜராத்தின் 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் விளையாடியிருக்கிறார்.  மும்பையின் சௌரப், ஹர்மீத் சிங், தில்லியின் மிலிந்த் குமார் என இவர்கள் அனைவரும் அமெரிக்க அணியின் பெருமைகள்.  ஓமான் அணியிலே இன்று பல முகங்கள், முன்னதாக பாரதத்தின் பல்வேறு மாநிலங்களுக்காக விளையாடியவர்கள்.  ஜதிந்தர் சிங், விநாயக் சுக்லா, கரன், ஜய், ஆஷீஷ் போன்ற வீரர்கள், ஓமான் கிரிக்கெட்டின் பலமான தூண்கள்.  நியூசீலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியின் அணிகளிலும் பாரத வம்சாவழியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படி எத்தனையோ பாரத வம்சாவழியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுடைய நாட்டின் பெருமையை அதிகரித்து வருகிறார்கள்.  அங்கேயிருக்கும் இளைய விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார்கள்.  பாரதநாட்டுத் தன்மையின் சிறப்பு அம்சமே இதுதான்.  மேலும் தங்களுடைய கர்மபூமி, அதாவது எந்த நாட்டிலே வசிக்கிறோமோ அதன் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

 

எனதருமை நாட்டுமக்களே,

எந்தவொரு தாய்தந்தைக்கும் தங்களுடைய குழந்தைகளை இழப்பதை விடப் பெருந்துயரம் தரும் விஷயம் வேறொன்றும் இருக்க முடியாது.  சிறுவயதுக் குழந்தையை இழக்கும் துக்கம் இன்னும்கூட ஆழமாக இருக்கும்.  சில நாட்கள் முன்பாக, கேரளத்தின் இளம் குழந்தையான ஆலின் ஷெரின் ஆப்பிரகாமை நாம் இழந்து விட்டோம்.   வெறும் பத்து மாதங்களேயான இந்தச் சேய் நம் உலகை விட்டுப் பறந்து போனது.  கற்பனை செய்து பாருங்கள்!!  நெடிய வாழ்க்கை வாழ வேண்டிய குழந்தை, திடீரென முடிவுக்கு வந்தது.  எத்தனையோ கனவுகள்-சந்தோஷங்கள் எல்லாம் நிறைவேறாமல் கருகின.  அந்தக் குழந்தையின் பெற்றோர் கடந்திருக்கும் வலியையும், துயரையும், நம்மால் வார்த்தைகளில் அடைக்க முடியாது.  ஆனால் இத்தனை துக்கத்துக்கு இடையேயும் ஆலினுடைய தகப்பனாரான அருண் ஆப்பிரஹாமும், அவளுடைய தாய் ஷெரினும் மேற்கொண்ட ஒரு தீர்மானம், நாட்டுமக்கள் அனைவரின் இதயங்களிலும் அவர்களின்பால் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.  அவர்கள் ஆலினுடைய உடல் உறுப்புக்களைத் தானம் செய்யத் தீர்மானித்தார்கள்.  இந்த ஒரு தீர்மானத்தால் அவர்களுடைய எண்ணம் எத்தனை பெரியது, அவர்களுடைய ஆளுமை எத்தனை விசாலமானது என்பது தெளிவாகிறது.  ஒருபுறத்திலே தங்களுடைய மகளை இழந்து துக்கத்தில் வாடிக் கொண்டிருந்தார்கள், ஆனால் மறுபுறத்திலோ மற்றவர்களுக்கு உதவும் உணர்வு அவர்களுக்கு உள்ளே நிரம்பியிருந்தது.  இப்படிப்பட்ட ஒரு நாளை எந்த ஒரு குடும்பமும் சந்திக்கக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள்.  ஆலின் ஷெரின் ஆப்பிரஹாம் இன்று நம்மிடையே இல்லாமல் போனாலும் அவருடைய பெயர் தேசத்தின் மிகக்குறைவான வயதுடைய  உடல் உறுப்புதானம் செய்தோரின் பட்டியலில் சேர்ந்து விட்டது.  நண்பர்களே, இப்போதெல்லாம் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக யாருக்கு உறுப்புகளுக்கான தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன.  இதோடு கூடவே மருத்துவ ஆய்வுகளுக்கும் பேருதவியாக இருக்கிறது.  இந்தத் திசையிலே பல நிறுவனங்களும், மக்களும் அசாதாரணமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

நண்பர்களே,

கேரளாவின் ஆலினைப் போலவே, உறுப்பு தானம் வாயிலாக பலரும் மற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்கையை அளித்திருக்கிறார்கள்.  எடுத்துக்காட்டாக தில்லியின் லக்ஷ்மி தேவி அவர்கள் கடந்த ஆண்டு கேதார்நாத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டார்.  இதன் பொருட்டு இவர் 14 கி.மீட்டர் தொலைவு கால்நடையாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  இவருடைய இந்த யாத்திரையை இருதயமாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு பேராச்சரியத்தை அளிக்கலாம்.  இவருடைய இருதயம் வெறும் 15 சதவீதம் மட்டுமே செயல்பட்டு வந்தது.  தற்செயல் நிகழ்வாக இவருக்கு உறுப்புதானம் செய்த, இறந்த ஒருவருடைய இருதயம் கிடைத்தது.   இவருடைய வாழ்க்கையே பிறகு மாறிப்போனது.  மேற்கு வங்கத்தின் கௌராங்க் பேனர்ஜி அவர்கள் இருமுறை நாதூலா சென்றிருக்கிறார்.  இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இருப்பது.  இதில் விசேஷம் என்னவென்றால், இவர் இந்தச் சாதனையை நுரையீரல் மாற்றுக்குப் பிறகு மேற்கொண்டிருப்பது தான்.  ராஜஸ்தானின் சீகரைச் சேர்ந்த ராம்தேவ் சிங் அவர்களுக்கு சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.  இன்று சிறப்பான வகையிலே விளையாட்டுக்களில் இவர் ஈடுபட்டு வருகிறார். 

நண்பர்களே,

இப்படிப்பட்ட உத்வேகமளிக்கும் எடுத்துக்காட்டுகள் உங்களுக்கு ஏராளமானவை கிடைக்கும்.  யாரோ ஒருவருடைய நல்ல முன்னெடுப்பு, எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது என்பதைத் தான் இவையெல்லாம் மீண்டும் நிரூபிக்கின்றன.  இப்படிப்பட்ட பிரமாதமான செயலைச் செய்த இவர்கள் அனைவருக்கும் நான் என் இதயப்பூர்வமான போற்றுதல்களை அளிக்கிறேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே,

சுதந்திரத்தின் அமுதக்காலத்தின் போது செங்கோட்டையிலிருந்து நான் ஐந்து உறுதிப்பாடுகள் குறித்துப் பேசியிருந்தேன்.  அவற்றிலே ஒன்று, அடிமை மனோபாவத்திலிருந்து விடுதலை.  இன்று தேசம், அடிமைத்தனத்தின் அடையாளங்களைத் துறந்து, பாரதத்தின் கலாச்சாரத்தோடு இணைந்த விஷயங்களுக்கு மகத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கிறது.  இந்த நோக்கில், நமது குடியரசுத் தலைவர் மாளிகையும் கூட, ஒரு மகத்துவமான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது.  நாளை, அதாவது 23 ஃபிப்ரவரியன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் ராஜாஜி உற்சவம் கொண்டாடப்படும் சந்தர்ப்பத்திலே, குடியரசுத்தலைவர் மாளிகையின் மையப் பகுதியில், C. ராஜகோபாலாச்சாரி அவர்களுடைய உருவச்சிலை திறந்து வைக்கப்படும்.  இவர் தான் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தார்.  அதிகாரத்தைப் பதவியாக அல்லாமல், சேவையாகப் பார்த்த மனிதர்களில் ஒருவர் இவர்.  பொதுவாழ்விலே இவருடைய நடத்தை, ஒழுங்குமுறை மற்றும் சுதந்திரமான நிலைப்பாடு ஆகியன இன்றும்கூட உத்வேகம் அளிக்கவல்லவை.  துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரிட்டன் நாட்டு ஆட்சியாளர்களின் உருவச்சிலைகள் வைத்திருக்கப்பட்டன, ஆனால் தேசத்தின் மகத்தான திருமகன்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.  பிரிட்டிஷ் கட்டடக் கலைஞரான எட்வின் லுட்யன்ஸின் உருவச்சிலை கூட குடியரசுத்தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கிறது.  இப்போது இந்த உருவச்சிலையின் இடத்திலே ராஜாஜி அவர்களின் உருவச்சிலை வைக்கப்படும்.  ராஜாஜி விழாவின் போது, ராஜகோபாலாச்சாரி அவர்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியும் இடம்பெறும்.  இந்தக் கண்காட்சி ஃபிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறும்.  சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு நீங்களும் இதைக் கண்டிப்பாகக் காணுங்கள்.

என் மனம்நிறை நாட்டுமக்களே,

மனதின் குரலில், நான் டிஜிட்டல் கைது பற்றி விரிவான முறையிலே பேசியிருக்கிறேன்.  இதன் பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி தொடர்பாக நமது சமூகத்திலே கணிசமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், நமக்கருகே நடைபெறும் சில சம்பவங்கள் மன்னிக்க முடியாதவை.  அப்பாவி மனிதர்கள் டிஜிட்டல் கைது மற்றும் நிதி மோசடிக்கு இரையாக்கப்படுகிறார்கள்.  மூத்த குடிமக்களுடைய வாழ்நாள் சேமிப்புகள் சூறையாடப்பட்டன என்ற செய்தியை நாம் பலமுறை கேள்விப்படுகிறோம்.  குழந்தைக்களுக்கான பள்ளிக்கட்டணம் செலுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த பணம் கூட சில வேளைகளில் களவாடப்பட்டிருக்கிறது.  வியாபாரிகள் ஏமாற்றப்பட்டிருக்கும் செய்திகளையும் நாம் காண்கிறோம்.  யாரோ ஒருவர் தொலைபேசியில் அழைத்து, நான் ஒரு பெரிய அதிகாரி, நீங்கள் சில தகவல்களைப் பகிர வேண்டும் என்கிறார்.  அதன் பிறகு அப்பாவி ஜனங்கள் அவர்கள் கூறுவது போலவே நடந்து கொள்கிறார்கள்.  இப்படி இவர்கள் நடந்து கொண்டவுடனேயே இவர்களுடைய பல்லாண்டுக்கால கடினமான உழைப்பின் பணம் நொடிப்பொழுதிலே காணாமல் போகிறது.  பல வேளைகளில் அயல்நாடுகளில் அமர்ந்திருக்கும் குற்றவாளிகள் கூட இப்படிப்பட்ட சைபர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள், இவர்களைப் பிடிப்பது மிகவும் கடினமான செயல்.  ஆகையால் நீங்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும், எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், இது மிகவும் அவசியம். 

நண்பர்களே,

நீங்கள் அனைவரும்  KYC – Know Your Customer அதாவது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் செயல்முறை பற்றித் தெரிந்து வைத்திருப்பீர்கள் இல்லையா?   சில நேரங்களில் உங்களுடைய வங்கியிடமிருந்து KYC புதுப்பிக்குமாறோ, மீண்டும் KYC யை செய்யச் சொல்லியோ தகவல் வரும் போது மனதில் ஒரு கேள்வி எழும் – நான் தான் முன்பேயே KYC செய்தாகி விட்டதே, மறுபடிமறுபடி ஏன் செய்ய வேண்டும்?  தயவு செய்து ஆத்திரப்பட வேண்டாம் என்று நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன், இவை அனைத்தும் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாய் வைத்திருக்கவே செய்யப்படுகின்றன.  இப்போதெல்லாம் ஓய்வூதியம், காப்பீடு, மானியங்கள், யுபிஐ அனைத்துமே வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்களனைவரும் நன்கறிவீர்கள்.  இதன் காரணமாகத் தான் வங்கிகள் அவ்வப்போது மீண்டும் KYCயை செய்கிறார்கள், இதனால் உங்கள் வங்கிக் கணக்கு பாதுகாப்பாய் இருப்பதை உறுதி செய்யத்தான்.  இதிலும் கூட நீங்கள் ஒருவிஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  குற்றவாளிகள் மோசடி அழைப்பை விடுக்கும் போது, எஸ் எம் எஸ் அல்லது இணைப்பை அனுப்புகிறார்கள்.  ஆகையால் நாம் தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், அப்படி ஏமாற்றுபவர்களின் வலையிலே விழக்கூடாது.  KYC அல்லது மீண்டும் KYC என்பது உங்கள் வங்கியின் கிளை அல்லது அதிகாரப்பூர்வமான செயலி அல்லது அதிகாரப்பூர்வமான முறையில் மட்டுமே செய்ய வேண்டும்.  ஒரு முறை அனுப்பப்படும் கடவு எண் – ஓடிபி, ஆதார் எண் அல்லது வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்களை யாருக்கும் அளிக்க வேண்டாம், மிகவும் முக்கியமான விஷயம், உங்களுடைய கடவுச்சொல்லை அவ்வப்போது கண்டிப்பாக மாற்றி வரவும்.  ஒவ்வொரு பருவநிலையின் போது நமது உணவுப் பழக்கம் எப்படி மாறுகிறதோ, உடுத்தும் உடை மாறுகிறதோ, அதே போல சில நாட்களுக்கு ஒருமுறை உங்களுடைய கடவுச்சொல்லையும் கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்ற விதிமுறையையைப் பின்பற்றுங்கள்.

நண்பர்களே,

தற்போது தான் இந்திய ரிசர்வ் வங்கி இந்த விஷயங்கள் குறித்து நிதிசார் விழிப்புணர்வு இருவார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  நிதிசார் விழிப்புணர்வு பற்றிய இந்த இயக்கம் இப்போது ஆண்டு முழுவதும் நடைபெற்றுவரும்.  ஆகையால் இந்திய ரிசர்வ் வங்கியின் செய்திகளை கவனமாகப் பின்பற்றவும், உங்களுடைய KYCயை புதுப்பித்து வரவும்.

நினைவில் கொள்ளுங்கள் –

சரியான KYC, காலாகாலத்தில் மீண்டும் KYC செய்வது 

கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்கும்,

நிதிசார் விழிப்புணர்வுடைய குடிமகனாக மாறுங்கள்,

ஏனென்றால் நல்ல விவரமான குடிமக்களால் தான்  

பலமான தற்சார்புடைய பாரதம் உருவாகும்.

என் மனம்நிறை நாட்டுமக்களே,

நமது விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் மண்ணை வழிபடுபவர்கள்.  மண்ணை பொன்னாக ஆக்குவது என்றால் என்ன என்பதை நாம் நமது விவசாயிகளிடமிருந்து தான் கற்க வேண்டும், நமது இன்றைய விவசாயிகள் எல்லாம் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டின் துணையோடு பயணிக்கிறார்கள்.  நமது விவசாயிகள் விளைச்சல் மட்டுமல்ல, தரம், மதிப்புக்கூட்டுதல் மற்றும் புதிய சந்தைகள் மீதும் கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த உவப்பை அளிக்கிறது.   ஓடிஷாவின் ஹிரோத் படேல் என்ற ஒரு இளைய விவசாயியோடு தொடர்புடைய தகவல்கள் உண்மையிலேயே கருத்தூக்கம் அளிக்கவல்லவை.  கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் முன்புவரை இவர் தன்னுடைய தந்தையார் சிவ்சங்கர் படேலோடு பாரம்பரியமான முறையில் நெல் பயிர் செய்து வந்தார்; ஆனால், விவசாயத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினார்.  தனது வயலில் இருக்கும் குளத்தின் மீது இவர் பலமான வலைப்பின்னல் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மீது கொடியில் வளரக்கூடிய காய்கறிகளை விளைவித்தார், குளத்தின் நாலாபுறங்களிலும் வாழை, மாதுளை, தென்னை ஆகியவற்றை நட்டார், குளத்திலே மீன்களையும் வளர்க்கத் தொடங்கினார்.  அதாவது ஒரே இடத்திலேயே பாரம்பரியமான வேளாண்மை நடக்கிறது, காய்கறிகளும், பழங்களும், மீன்களும் வளர்க்கப்படுகின்றன.  இதனால் நிலம் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது, நீர் சேமிக்கப்படுகிறது, கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.  இன்று தொலைவான தூரத்திலிருந்தும் விவசாயிகள் இவருடைய மாதிரியைக் காண வருகிறார்கள்.

நண்பர்களே,

கேரளத்தின் திரிசூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலே ஒரே ஒரு வயலில் மட்டும் 570 வகையான நெல் பயிர் செய்யப்படுகின்றன.  இதிலே உள்ளூர் ரகங்களும் உண்டு, மூலிகை ரகங்களும் உண்டு, பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ரகங்களும் உண்டு.  இது வெறும் வயல் அல்ல, விதைகளின் மரபைப் பாதுகாக்கும் பேரியக்கம் ஆகும்.  நமது விவசாயிகளின் உழைப்பின் பலன் எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.  பாரதம் இன்று உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக ஆகி விட்டது.  15 கோடி டன்களுக்கும் மேலாக அரிசி உற்பத்தி என்பது சிறிய சாதனை அல்ல.  நாம் நமது தேவைகளை நிறைவேற்றி வருகிறோம், உலகின் உணவுக்கூடைக்கும் பங்களிப்பு அளித்து வருகிறோம். 

நண்பர்களே,

இப்போது விவசாய விளைபொருட்கள் விமானங்கள் வாயிலாகவும் அதிக சுலபமாக அயல்நாடுகளைச் சென்றடைகின்றன.  கர்நாடகத்தின் நஞ்ஜன்குடின் வாழையும், மைசூரூவின் வெற்றிலையும், இண்டி எலுமிச்சையும் மாலத்தீவுகளுக்கு அனுப்பப்பட்டன.  இந்த விளைச்சல் எல்லாம் தங்களுடைய சுவை மற்றும் தரத்திற்காக புகழ் பெற்றவை, இவற்றுக்குப் புவிசார் குறியீடும் கிடைத்திருக்கிறது.  நண்பர்களே, இன்றைய விவசாயி தரத்தையும் விரும்புகிறார், அளவையும் அதிகரிக்கிறார், தனது அடையாளத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.  நீங்கள் உங்கள் அருகே இப்படிப்பட்ட நூதனமான விவசாய சகோதர சகோதரிகள் இருந்து அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் கண்டிப்பாகத் தெரியப்படுத்துங்கள்.  ஏனென்றால் விவசாயி முன்னேறும் போது, நமது தேசமும் முன்னேறுகிறது.

என் கனிவான நாட்டுமக்களே,

கடந்த ஆண்டு, இதே நேரத்தில் மகாகும்பமேளாவின் அற்புதமான காட்சிகளை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பீர்கள்.  சங்கத்தின் கரையில் பெருகியோடிய மக்கள் சமுத்திரம், நம்பிக்கையின் அளவில்லாத பெருக்கு, மற்றும் முழுக்காட்டின் புனிதமான கணங்களில், ஏதோ பாரதம் தனது சனாதன விழிப்புணர்வால் ஞானம் பெற்றது போன்றதொரு உணர்வு.  நண்பர்களே, மகாகும்பமேளாவின் அதே பெருக்கு, அதே மாக மாதம், அதே சிரத்தையின் கீதம், வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பெருக்கெடுக்கும் போது, ஒரு புதிய அடையாளம் ஏற்படுகிறது.  அந்த அடையாளம் தான் கேரளத்தின் கும்பமேளா.

நண்பர்களே,

கேரள பூமியிலே, பாரதப்புழை நதிக்கரையின் திருநாவாயிலே பல நூறாண்டுகள் பழமையான பாரம்பரியம் இருந்து வருகிறது, அதுதான் மாமாங்கம்.  இதைப் பலர் மகாமக மஹோத்சவம் அல்லது கேரளத்தின் கும்பமேளா என்றும் அழைக்கிறார்கள்.  மாக மாதத்தின் போது பவித்திரமான நதியிலே நீராடி, அந்தக் கணத்தை வாழ்க்கையின் மறக்கவொண்ணா நினைவாக ஆக்குவதுதான் இதன் ஆன்மா.  காலப்போக்கிலே இந்தப் பாரம்பரியம் காணாமல் போனது.  கிட்டத்தட்ட 250 ஆண்டுக்காலமாக இந்த ஏற்பாடு முன்னர் நடந்த அந்தக் கோலாகலத்தோடும், மகோன்னதத்தோடும் நடக்கவில்லை.  ஆனால் இன்று நம்முடைய பாரம்பரியத்தை மீண்டும் அடையாளம் கண்டுவரும் நமது தேசத்திலே, வரலாறு மீண்டும் மாறத் தொடங்கியிருக்கிறது.  இந்த முறை எந்தவொரு பெரிய அறிவிப்பும் இல்லாமல் கேரளத்தின் கும்பமேளா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.  இதற்கென எந்தவொரு சிறப்பான செய்திப்பரப்பும் செய்யப்படவில்லை.  மக்கள் வாய்மொழி வாயிலாக ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டார்கள், செவிவழிச் செய்தியாக தகவல் பரிமாறப்பட்டது, பார்த்துக் கொண்டிருக்கும் போதே பக்தர்கள் திருநாவாயா வரத் தொடங்கினார்கள். 

நண்பர்களே,

மகாகும்பமாகட்டும், கேரளத்தின் கும்பமேளாவாகட்டும் அல்லது வெறும் நீராடும் திருநாளாகட்டும்.  இது நமது பண்டைய நினைவுகளின் விழிப்பு.  இது கலாச்சாரத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தல்.  வடக்கு முதல் தெற்கு வரை, நதிகள் வேறாக இருக்கலாம், கரைகள் வேறாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கையின் பெருக்கு ஒன்றுதான், இதுதான் பாரதம். 

நண்பர்களே,

நமது தேசத்திலே சிலர் எப்போதும் மக்களின் இதயங்களில் குடிகொண்டிருப்பார்கள், அவர்கள் சமூகநலனுக்காக செயலாற்றியவர்களாக இருப்பார்கள்.  தங்களுடைய நற்காரியங்கள் வாயிலாக மக்களுக்கு முதன்மை அளித்திருப்பார்கள்.  அம்மா ஜெயலலிதா அவர்கள், மக்கள் நேசிக்கும் இப்படிப்பட்ட ஒரு தலைவர்.  பிப்ரவரி 24ஆம் தேதி இவருடைய பிறந்த நாளாகும்.  தமிழ்நாட்டு மக்களுக்கு இவரிடம் இருக்கும் ஈடுபாடு எந்த அளவுக்கு ஆழமானது என்றால், இன்றும்கூட நான் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இது நன்கு தெரிகிறது.  அம்மா ஜெயலலிதா அவர்களின் பெயரை நான் குறிப்பிட்டவுடனேயே, தமிழ்நாட்டு மக்களின் முகங்கள் மலர்கின்றன.  நமது தாய்க்குலம் குறிப்பாக அவருடன் ஆழமாக இணைந்திருக்கிறது.  இதற்கான காரணம் என்னவென்று சொன்னால், அரசு அதிகாரத்தில் இருந்த வேளையிலே, இவர் பெண்கள்-தாய்மார்கள்-சகோதரிகளுக்காக பாராட்டுக்குரிய பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீராக வைத்திருக்க சிறப்பான வழிமுறைகளைக் கடைப்பிடித்தார்.  அவரிடத்திலே தேசபக்தி உணர்வு மிகவும் செறிவாக இருந்தது.  இதோடு கூடவே, பாரதத்தின் கலாச்சாரப் பாரம்பரியம் மீதும் அவருக்கு மிகுந்த பெருமிதம் இருந்தது.  அம்மா ஜெயலலிதா அவர்களுடனான என்னுடைய ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு உரையாடலும் எனது மனதிலே இன்றும்கூட நன்கு பசுமையாகப் பதிந்திருக்கின்றன.  அவர் குஜராத்திலே 2002 மற்றும் 2012ஆம் ஆண்டிலே நடந்த என்னுடைய பதவியேற்பு விழாவிலே கலந்து கொண்டார்.  நாங்கள் இருவரும் எங்களுடைய மாநிலங்களின் முதல்வர்களாக அப்போது இருந்த வேளையில், நல்லாளுகை போன்ற விஷயங்களில் அடிக்கடி எங்களுக்கிடையே உரையாடல் நடைபெற்று வந்தது.  அவருடைய எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது, கருத்துக்கள் மிகவும் நிறைவாக இருந்தன.  இதுதான் அவருடைய மிகப்பெரிய சிறப்பு.  பல ஆண்டுகள் முன்பாக அவர் பொங்கல் திருநாளன்று மதிய உணவு அருந்த சென்னைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  அவருடைய அந்த நட்புணர்வை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.  ஒருமுறை மீண்டும் நான் அவருக்கு என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

ஜெயலலிதா அவர்களுக்கு என் நினைவாஞ்சலிகள்.

சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும்.

எனதருமை நாட்டுமக்களே,

இப்போது நான் நம்முடைய அழகான, அன்பான, சின்னஞ்சிறு புத்திசாலிக் குழந்தைகளோடு பேச இருக்கிறேன், இந்தக் குழந்தைகளின் தேர்வுகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  நீங்கள் எல்லோரும் இந்த மாதத் தொடக்கத்திலே, பரீக்ஷா பே சர்ச்சா-தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், அதிலே நீங்கள் ஏதாவது கற்றிருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்.  ஆனால் மறுபடி நான் உங்களிடம் கேட்கிறேன், படிக்கும் வேளையில் அதிக அழுத்தம்-டென்ஷன் கொள்ளாமல் தானே இருக்கிறீர்கள்?!

என் கண்மணிக் குழந்தைகளே, நீங்கள் அனைவரும் exam warriors - தேர்வுப் போர்வீரர்கள்.  நீங்கள் அனைவரும் முழு ஈடுபாட்டோடு தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.  ஆங்… இப்படிப்பட்ட சமயத்திலே மனதில் கொஞ்சம் சந்தேகம் எழுவது இயல்பானதுதான்.  படித்ததெல்லாம் நினைவில் இருக்குமா இருக்காதா என்று சில சமயம் தோன்றும்.  சில சமயம், நேரம் குறைந்துபட்டால் என்ன ஆவது என்றும் தோன்றும்.  இன்னும் சில சமயங்களில், நான் தனியாக இருக்கிறேனே என்றும் தோன்றும்.  நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய மதிப்பு என்னவென்பதை உங்களுடைய தேர்வுத்தாள் மதிப்பெண் தீர்மானம் செய்யாது.  ஆகையால் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.  நீங்கள் படித்ததை, முழுமனத்தோடு எழுதுங்கள்.  எது தெரியவில்லையோ, அந்த ஒரு கேள்வி உங்கள் மனதில் பரவி வியாபிக்க விடாதீர்கள்.  மேலும் ஒரு விஷயம், உங்களுடைய பெற்றோர், உங்களுடைய ஆசிரியர்களோடு தொடர்ந்து உரையாடி வாருங்கள்.  அவர்கள் உங்களுடைய மதிப்பெண்களால் அல்ல, உங்களுடைய முயற்சியால் உங்களை அடையாளம் காண்பார்கள், உங்களுடைய உழைப்பால் மகிழ்வார்கள்.  நீங்கள் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவீர்கள், உங்களுடைய வாழ்க்கையிலும் வெற்றிகளின் புதிய சிகரங்களைத் தொடுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

நண்பர்களே,

இப்போது ரமலான் நடைபெற்று வருகிறது.  நான் இந்தப் புனிதமான மாதத்தில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  சில நாட்களுக்குப் பிறகு ஹோலிப் பண்டிகையும் வரவிருக்கிறது.  அதாவது வண்ணங்கள், வண்ணப்பொடிகள், சந்தோஷம்-கொண்டாடம் நிறைந்த சூழல் வரவிருக்கிறது.  நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பம், உங்கள் சுற்றத்தாரோடு சந்தோஷமாக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழுங்கள்.  அப்புறம்….. சில மந்திரங்களை எப்போதும் நினைவில் வைத்திருங்கள், அதாவது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பது, ஊக்கமளிப்பது, சரிதானே?  நமது ஹோலிப் பண்டிகைகளாகட்டும், வேறு எந்தப் பண்டிகையாகட்டும், பலவகையான அயல்நாட்டுப் பொருட்கள் நுழைந்து விட்டன.  இவற்றை நமது பண்டிகைகளிலிருந்து விலக்கி வையுங்கள், ஹோலியிடமிருந்து தள்ளி வையுங்கள், சுதேசியைக் கைக்கொள்ளுங்கள்.  நாம் சுதேசிப் பொருட்களை வாங்கும் போது, நமது தேசத்தை தற்சார்புடையதாக ஆக்கும் இயக்கத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.

நண்பர்களே,

ஒவ்வொரு மாதமும் மனதின் குரலுக்காக எனக்கு ஏராளமான கடிதங்கள்-ஆலோசனைகள் வருகின்றன.  நீங்கள் அனுப்பும் செய்திகளால் தேசத்தின் அனைத்து மூலைகளில் கூட மறைந்திருக்கும் அற்புதமான திறமைகள் பற்றித் தெரிய வருகிறது.  சுயநலத்தைத் தாண்டி, சமூகத்திற்காக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பல உள்ளெழுச்சியளிக்கும் சம்பவங்கள் எல்லாம் உங்கள் வாயிலாக நாடெங்கிலும் இருக்கும் மக்கள் வரை சென்று சேர்கின்றது.  நீங்கள் இப்படியே உங்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.  உங்களுடைய தகவல்களுக்காக நான் காத்திருப்பேன்.  மீண்டும் ஒருமுறை உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தாருக்கும், வரவிருக்கும் அனைத்து பண்டிகைகளுக்குமான பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

***

(Release ID: 2231424)

AD/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231467) வருகையாளர் எண்ணிக்கை : 27