உள்துறை அமைச்சகம்
சிஆர்பிஎஃப்-ன் 87-வது நிறுவன தின விழா - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
நக்சல் தீவிரவாத ஒழிப்பில் சிஆர்பிஎஃப் முக்கியப் பங்கு வகித்துள்ளது - மார்ச் 31-க்குள் நாடு நக்சலிசத்திலிருந்து விடுபடும்: திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 3:04PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (21.02.2026) அசாமின் குவஹாத்தியில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF - சிஆர்பிஎஃப்) 87-வது நிறுவன தின விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், 86 ஆண்டுகளாக, சிஆர்பிஎஃப் சிறந்த செயல்திறன், வீரம், பொறுமை, துணிச்சல், தியாகங்கள் ஆகியவற்றால் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது என்று கூறினார். சிஆர்பிஎஃப் இல்லாமல் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என்று அவர் தெரிவித்தார். நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க 2,270 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயர்ந்த தியாகத்தைச் செய்துள்ளனர் என்றும், அவர்களுக்கு முழு தேசமும் நன்றி தெரிவித்து அஞ்சலி செலுத்துகிறது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை, இடதுசாரி தீவிரவாதம், வடகிழக்குப் பகுதி வன்முறை ஆகிய மூன்று முக்கிய பிரச்சினைகள் தணிந்து இப்போது அமைதியை நிலைநாட்டுவதில் வெற்றி கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இந்த மூன்று இடங்களிலும், குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச் சூடுகள், அழிவுகள் ஆகியவை ஒரு காலத்தில் அதிகம் இருந்தன என்று அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது இந்த மூன்று பகுதிகளும் வளர்ச்சி மையங்களாக மாறி, முழு நாட்டின் வளர்ச்சியையும் முன்னோக்கிக் கொண்டு செல்கின்றன என்று அவர் கூறினார். சிஆர்பிஎஃப் வீரர்கள் செய்த தியாகம் இல்லாமல், இந்த மூன்று இடங்களையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார்.
1939-ம் ஆண்டு வெறும் 2 பட்டாலியன்களுடன் தொடங்கிய சிஆர்பிஎஃப், இப்போது 248 பட்டாலியன்கள், 3.25 லட்சம் பணியாளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்பாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் சிஆர்பிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
நாட்டின் 12 மாநிலங்களிலும் ஏராளமான மாவட்டங்களிலும் நக்சலைட் தீவிரவாதம் பரவியுள்ளதாகவும், இந்த அச்சுறுத்தலை வேரோடு அகற்றத் தீர்மானித்தபோது, சிஆர்பிஎஃப் படை வீரர்கள் இந்த முயற்சியில் மிக முக்கிய பங்கு வகித்ததாகவும் திரு அமித் ஷா கூறினார். இவ்வளவு பெரிய, சிக்கலான, கடினமான பணி வெறும் மூன்றே ஆண்டுகளில் முடிக்கப்பட்டது என்றும், சிஆர்பிஎஃப் வீரர்களின் பணியால், 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாடு நக்சல் தீவிரவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என்று நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார். நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை சிஆர்பிஎஃப் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231173®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231226)
வருகையாளர் எண்ணிக்கை : 20