பாதுகாப்பு அமைச்சகம்
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் வலிமையாகவும் தயாராகவும் இருங்கள்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முக்கியப் பங்கு வகித்த என்சிசி மாணவர்களிடமிருந்து உத்வேகம் பெறுங்கள்: இளைஞர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவுரை
प्रविष्टि तिथि:
24 JAN 2026 1:50PM by PIB Chennai
"உலகம் நிச்சயமற்ற காலகட்டத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமது இளைஞர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் வலிமையாக இருந்து, ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்," என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நாடு முழுவதும் மாதிரிப் பயிற்சிகள் நடத்தப்பட்டபோது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த துணிச்சலான மற்றும் அர்ப்பணிப்புள்ள தேசிய மாணவர் படையினரிடமிருந்து (என்சிசி) உத்வேகம் பெறுமாறு அவர் இளைஞர்களை வலியுறுத்தினார். தில்லி கண்டோன்மென்ட்டில் நடைபெற்ற என்சிசி குடியரசு தின முகாமில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், அந்த நடவடிக்கையின் போது நாடு தனது ஆயுதப் படைகளுக்குப் பின்னால் அணி திரண்டபோது, தங்கள் பங்கை மிகச் சிறப்பாக ஆற்றிய தேசத்தின் இரண்டாவது தற்காப்புப் படை வீரர்கள் என்று என்சிசி -யினரை வர்ணித்தார். "இந்திய ஆயுதப் படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளை அழித்தன. இது பஹல்காமில் நடந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு தகுந்த பதிலடியாக இருந்தது. நமது வீரர்கள் தைரியத்துடனும் நிதானத்துடனும் செயல்பட்டனர். நம்மைத் தாக்கியவர்களை மட்டுமே நாம் குறிவைத்து அழித்தோம், வேறு யாரையும் அல்ல. அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் வலிமையாக இருந்ததாலேயே இது சாத்தியமானது," என்று அவர் கூறினார்.
மகாபாரதத்தின் அபிமன்யுவைப் போல, எந்த வகையான சக்கரவியூகத்திற்குள்ளும் நுழைந்து அதிலிருந்து வெற்றிபெற்று வெளிவரத் தெரிந்தவர்கள் இளைஞர்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் தேசத்தை வளர்ந்த பாரதமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்குப் பங்களிக்குமாறு அவர் இளைஞர்களை வலியுறுத்தினார். "இப்போது இளைஞர்களிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள ஒரு காலகட்டத்தில் நாம் நுழைந்துள்ளோம். அவர்கள் தேசத்தின் விலைமதிப்பற்ற சொத்துக்கள், நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் பொறுப்பைத் தாங்கியவர்கள்," என்று அவர் கூறினார்.
இளைஞர்களை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த ஊடகமாக என்சிசி திகழ்கிறது என்றும், அதன் மூலம் இளைஞர்கள் தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றும் திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். "இன்று உலகம் வசதியை விற்பனை செய்கிறது. வீடியோ கேம்கள், உணவு விநியோகம் மற்றும் இது போன்ற பிற விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வசதியைக் கொண்டு வருவதற்காகவே உள்ளன. அணிவகுப்புகள், பயிற்சிகள் மற்றும் முகாம்கள் மூலம், என்சிசி உங்களை அந்த வசதியான வட்டத்திலிருந்து வெளியே வர உதவுகிறது, ஒரு மாணவரை மனதளவில் வலிமையாக்குகிறது." கூடுதலாக, பேரிடர்களின் போது தங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவும் பல வாழ்க்கை திறன்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
என்.சி.சி மாணவர்களிடையே ஒழுக்கத்தையும் தேசபக்தியையும் வளர்ப்பதோடு, 'கவனக்குறைவு' என்ற சிக்கலைச் சமாளிக்கவும் உதவுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மேலும் கூறினார். மக்கள் எல்லாவற்றையும் உடனடியாகப் பெற விரும்பும் இந்தக் காலகட்டத்தில், என்.சி.சி வாழ்க்கையின் பெரிய போராட்டங்கள், தேசத்தின் பெரும் பொறுப்புகள் மற்றும் குணநலன் மேம்பாட்டிற்குத் தேவையான பொறுமை, தொடர்ச்சி மற்றும் கவனம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தக் கவனம், அவர்கள் ஆயுதப் படைகளில் சேர்ந்தாலும் சரி அல்லது மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் என ஆனாலும் சரி, அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
“நீங்கள் எப்போதும் ஒரு மாற்றுத் திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும், இன்று மழை பெய்தால், நாளை சூரியன் பிரகாசிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றிபெற, 'என் வழி அல்லது வேறு வழியே இல்லை' என்ற மனப்பான்மைக்கு அப்பால், ஒரு 'ராணுவ வழிமுறையை' மனதில் கொள்ளுங்கள்,” என்று அவர் மாணவர்களிடம் கூறினார்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் என்.சி.சி-யின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர், என்.சி.சி மூலம் பயிற்சி பெற்ற பலர் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர் என்று கூறினார். “பரம் வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் மனோஜ் பாண்டே மற்றும் கேப்டன் விக்ரம் பத்ரா ஆகியோர் என்.சி.சி மாணவர்கள். பிரதமர் திரு நரேந்திர மோடியும் நானும் கூட என்.சி.சி மாணவர்களாக இருந்தோம். மேலும் பலர் என்.சி.சி-யில் பட்டம் பெற்று நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளனர். 1965 மற்றும் 1971 போர்களின் போது, என்.சி.சி மாணவர்கள் இரண்டாவது பாதுகாப்புப் படையாகப் பயன்படுத்தப்பட்டனர். இதுதான் என்.சி.சி ஒவ்வொரு துறையிலும் ஆற்றியுள்ள முக்கியப் பங்கு,” என்று அவர் கூறினார்.
ஜனவரி 26 அன்று நாடு தனது 77-வது குடியரசு தினத்தைக் கொண்டாடவிருக்கும் நிலையில், அந்த நாள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான நாட்டின் உறுதியை வலுப்படுத்த ஒரு நினைவூட்டலாக அமைகிறது என்று திரு. ராஜ்நாத் சிங் கூறினார். “அரசியலமைப்பு என்பது வெறும் உரை மட்டுமல்ல, அது நமது சமூக, அரசியல், கலாச்சார மற்றும் பிற உரிமைகள் மற்றும் கடமைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். நமது அரசியலமைப்பு நம்மை எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அப்படிப்பட்ட மக்களாக நாம் மாற வேண்டும்,” என்று அவர் கூறினார். நாம் நமது அரசியலமைப்பைப் புரிந்துகொண்டு, நமக்கு வழங்கப்பட்ட கடமைகளையும் உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டும். இந்த முழுப் பிரச்சாரத்திலும் நமது என்.சி.சி. மாணவர்கள் கொடி ஏந்திச் செல்பவர்களாகப் பங்கு வகிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர், என்சிசியின் மூன்று பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்களால் வழங்கப்பட்ட பிரம்மாண்டமான 'மரியாதை அணிவகுப்பை' பார்வையிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218068®=3&lang=1
***
TV/PKV/RJ
(रिलीज़ आईडी: 2218127)
आगंतुक पटल : 21