பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஓமனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் இடையே பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 DEC 2025 2:45PM by PIB Chennai

வணக்கம்! அஹ்லான் வா சஹ்லான் (Ahlan wa sahlan)!

உங்களின் இளமைத் துடிப்பும் ஆற்றலும் இங்குள்ள சூழலை உண்மையிலேயே உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த மண்டபத்திற்குள் இடவசதி இல்லாத காரணத்தால், அருகிலுள்ள மற்றுமொரு மண்டபத்தில் திரைகள் வாயிலாக இந்த நிகழ்ச்சியை நேரலையில் கண்டு கொண்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் மனதார வரவேற்கிறேன். இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தும், இந்த மண்டபத்திற்குள் நுழைய முடியாமல் போனது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

நண்பர்களே,

எனக்கு முன்னால் ஒரு 'குட்டி இந்தியா'வை நான் காண்கிறேன்; இங்கு ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

அனைவரும் நலமா...?

மலையாளம் பேசுபவர்கள் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் குஜராத்தி பேசும் மக்களும் இங்கு பெருமளவில் உள்ளனர்.

நலமா? பாகுன்னாராசென்னாகித்திராகேம் சோ?

 

நண்பர்களே,

இன்று நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இங்கே கூடியுள்ளோம். இன்று நாம் நமது நாட்டை, நமது  இந்தியாவை  கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே,

இந்தியாவில், நமது பன்முகத்தன்மை என்பது நமது கலாச்சாரத்தின் வலுவான அடித்தளமாகும். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒரு புதிய வண்ணத்தைச் சேர்க்கிறது, ஒவ்வொரு பருவமும் ஒரு கொண்டாட்டமாக மாறுகிறது, மேலும் ஒவ்வொரு பாரம்பரியமும் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டுவருகிறது.

அதனால்தான், இந்தியர்கள் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும், அந்த இடத்தின் பன்முகத்தன்மையை நாம் மதிக்கிறோம். உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்கிறோம். அதே உணர்வைத்தான் இன்று நான் ஓமனிலும் காண்கிறேன்.

இந்தப் புலம்பெயர் இந்தியச் சமூகம், சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பிற்கு ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறது.

நண்பர்களே,

இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கு சமீபத்தில் மற்றுமொரு அற்புதமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நீங்கள் அறிந்திருக்கலாம், யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தீபாவளி பண்டிகையை 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரிய' பட்டியலில் சேர்த்துள்ளது.

இனி, தீபாவளித் திருவிளக்கு நமது இல்லங்களை மட்டுமல்ல, உலகம் முழுவதையுமே ஒளிரச் செய்யும். இது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணமாகும். தீபாவளிக்கு கிடைத்துள்ள இந்த உலகளாவிய அங்கீகாரம், நாம் பகிர்ந்து கொள்ளும் ஒளியைக் கவுரவிக்கிறது; அந்த ஒளி நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தைப் பரப்புகிறது.

நண்பர்களே,

இன்று நாம் அனைவரும் இந்தியா - ஓமன் இடையிலான "நட்புத் திருவிழாவை" (மைத்ரி பர்வ் ) கொண்டாட இங்கே கூடியிருக்கிறோம்.

(மைத்ரி) என்பது: M - Maritime heritage (கடல்சார் பாரம்பரியம்) A - Aspirations (ஆக்கபூர்வமான விருப்பங்கள்) I - Innovation (புதுமைப்படைப்பு) T - Trust and technology (நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பம்) R - Respect (பரஸ்பர மரியாதை) I - Inclusive growth (அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி)

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த "மைத்ரி பர்வ்" நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பையும், நமது பகிரப்பட்ட வரலாற்றையும் மற்றும் நமது வளமான எதிர்காலத்தையும் கொண்டாடுகிறது. இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் பல நூற்றாண்டுகளாக அன்பான மற்றும் துடிப்பான உறவை அனுபவித்து வருகின்றன.

இந்தியப் பெருங்கடலின் பருவக்காற்றுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு வழிகாட்டின. லோத்தல், மாண்ட்வி மற்றும் தம்ரலிப்தி போன்ற துறைமுகங்களிலிருந்து நமது முன்னோர்கள் மரப்படகுகளில் மஸ்கட், சூர் மற்றும் சலாலா ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தனர்.

மேலும் நண்பர்களே,

மாண்ட்வி மற்றும் மஸ்கட் நகரங்களுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்புகளை நமது தூதரகம் ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தியுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், அந்தப் புத்தகத்தைப் படித்து உங்கள் ஓமானிய நண்பர்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன்.

பள்ளியில்தான் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம்  கொடுப்பார்கள் என்று பார்த்தால், இங்கேயும் மோடி ஜி வீட்டுப்பாடம் கொடுத்துவிட்டாரே என்று இப்போது நீங்கள் நினைக்கலாம்,!

நண்பர்களே,

இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் வெறும் நிலப்பரப்பால் மட்டுமல்ல, தலைமுறைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இந்தப் புத்தகம் காட்டுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த உறவுகளின் மிகப்பெரிய பாதுகாவலர்களாக நீங்கள் அனைவரும் விளங்குகிறீர்கள்.

நண்பர்களே,

"இந்தியாவை அறிவோம்வினாடி வினா போட்டியில் ஓமனிலிருந்து மக்கள் பங்கேற்றது குறித்து நான் அறிந்தேன். ஓமனிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். உலக அளவில் ஓமன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், நான் இப்போதே கைதட்ட மாட்டேன். ஓமன் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும்! இன்னும் அதிகமானோர் இதில் இணைந்து, இன்னும் பெரிய அளவில் பங்கேற்பதைக் காண நான் விரும்புகிறேன். இந்தியக் குழந்தைகள் இதில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, உங்கள் ஓமானிய நண்பர்களையும் இந்த வினாடி வினா போட்டியில் சேர நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

நண்பர்களே,

வர்த்தகத்தில் தொடங்கிய இந்தியா - ஓமன் உறவு, தற்போது கல்வி மூலம் மேலும் வலுவடைந்து வருகிறது. ஓமனிலுள்ள இந்தியப் பள்ளிகளில் சுமார் 46,000 மாணவர்கள் பயின்று வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதில் ஓமனில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர்.

ஓமனில் இந்தியக் கல்விமுறை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

நண்பர்களே,

மறைந்த சுல்தான் காபூஸ் அவர்களின் முயற்சி இல்லாமல் இந்தியப் பள்ளிகளின் வெற்றி சாத்தியமாகி இருக்காது. மஸ்கட் இந்தியப் பள்ளி உள்ளிட்ட பல இந்தியப் பள்ளிகளுக்குத் தேவையான நிலம் மற்றும் அனைத்து உதவிகளையும் அவர் வழங்கினார். மாண்புமிகு சுல்தான் ஹைதம் அவர்கள் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

இங்குள்ள இந்தியச் சமூகத்திற்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவிற்கும், பாதுகாப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

'தேர்வு குறித்த கலந்துரையாடல்' (Pariksha Pe Charcha) நிகழ்ச்சி பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஓமனிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தேர்வினை மனஅழுத்தம் இன்றி எதிர்கொள்வதற்கு வழிகாட்டும் இந்த விவாதங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

ஓமனில் வசிக்கும் இந்தியர்கள் அடிக்கடி இந்தியாவிற்குப் பயணம் செய்கிறார்கள்; அத்துடன் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் உடனுக்குடன் அறிந்து வருகிறார்கள். இந்தியா ஒரு புதிய உத்வேகத்துடன் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் நேரில் கண்டு வருகிறீர்கள். இந்த வேகம் எங்களின் நோக்கங்களைப் பிரதிபலிப்பதோடு, எங்களின் செயல்பாடுகளிலும் தெளிவாகத் தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்புதான் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகின. நீங்கள் அறிந்திருக்கலாம், இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதன் பொருள், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது என்பதாகும். உலகம் முழுவதும் சவால்களைச் சந்தித்து வரும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள்கூட சில சதவீத வளர்ச்சியை அடையவே போராடி வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. இது இன்றைய இந்தியாவின் வலிமையை உணர்த்துகிறது.

நண்பர்களே,

இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு முனையிலும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பணியாற்றி வருகிறது. கடந்த பதினொரு ஆண்டுகளில் அடைந்த சில புள்ளிவிவரங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; இவை நிச்சயம் உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இங்கு பெருமளவிலான மாணவர்களும் பெற்றோர்களும் கூடியிருப்பதால், நான் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையிலிருந்து தொடங்குகிறேன். கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியாவில் ஆயிரக்கணக்கான புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.

ஐஐடி-களின் எண்ணிக்கை பதினாறிலிருந்து இருபத்தி மூன்றாக உயர்ந்துள்ளது. பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 13 ஐஐஎம்-கள்  மட்டுமே இருந்தன; இன்று அவை 21-ஆக உயர்ந்துள்ளன. அதுபோலவே, எய்ம்ஸ் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வெறும் ஏழு மட்டுமே இருந்தன; இன்று இந்தியாவில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 400-க்கும் குறைவாகவே இருந்தது; இன்று நாடு முழுவதும் சுமார் 800 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக நமது கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சூழலை இன்று நாம் தயார் செய்து வருகிறோம். இதில் 'புதிய கல்விக் கொள்கை' மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கொள்கை மாதிரியின் ஒரு பகுதியாக, 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'பிஎம் ஸ்ரீபள்ளிகள் நிறுவப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் விரிவடையும் போது, அங்கே வெறும் கட்டிடங்கள் மட்டும் கட்டப்படுவதில்லை; தேசத்தின் எதிர்காலமே வலுப்படுத்தப்படுகிறது.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சியின் வேகமும் அளவும் கல்வியில் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் தெளிவாகத் தெரிகிறது. கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் திறன் (Solar energy capacity) முப்பது மடங்கு அதிகரித்துள்ளது; மேலும் சோலார் மாட்யூல் உற்பத்தியானது பத்து மடங்கு வளர்ந்துள்ளது. இவ்வாறு இந்தியா பசுமை வளர்ச்சியை நோக்கி அதிவேகமாக முன்னேறி வருகிறது.

இன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய நிதித் தொழில்நுட்பம் அமைப்பின் தாயகமாகவும், உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராகவும் மற்றும் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.

நண்பர்களே,

இன்று இந்தியாவிற்கு வருகை தரும் எவரும் நமது நவீன உள்கட்டமைப்பைக் கண்டு வியப்படைகிறார்கள். கடந்த 11ஆண்டுகளில், உள்கட்டமைப்பு வசதிகளுக்காக நாம் ஐந்து மடங்கு கூடுதல் முதலீடு செய்துள்ளதால் தான் இது சாத்தியமானது.

விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. இன்று தேசிய நெடுஞ்சாலைகள் முந்தைய வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் கட்டப்பட்டு வருகின்றன; ரயில் பாதைகள் விரைவாக அமைக்கப்பட்டு வருகின்றன, மேலும் ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

இந்தப் புள்ளிவிவரங்கள் வெறும் சாதனைகள் மட்டுமல்ல; இவை வளர்ந்த பாரதம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய படிகளாகும். இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இந்தியா துணிச்சலான முடிவுகளை எடுக்கிறது, விரைவாகச் செயல்படுகிறது, லட்சிய இலக்குகளைப் பின்பற்றுகிறது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிவுகளை வழங்குகிறது.

நண்பர்களே,

மற்றொரு பெருமைக்குரிய விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்று இந்தியா, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்தியாவின் 'யுபிஐஎன்பது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பாகும். இந்தப் பரிமாற்ற முறையின் அளவை உங்களுக்கு விளக்குவதற்கு ஒரு சிறிய உதாரணத்தைக் கூறுகிறேன்.

நான் இங்கு வந்து சுமார் 30 நிமிடங்கள் ஆகின்றன. இந்த 30 நிமிடங்களில் மட்டும், இந்தியாவில் சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடந்துள்ளன. இந்தப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய வியாபாரிகள் வரை இந்தியாவில் அனைவரும் இந்த பணப்பரிவர்த்தனை முறையுடன் இணைந்துள்ளனர்.

நண்பர்களே,

இங்கு ஏராளமான மாணவர்கள் இருக்கிறீர்கள், உங்களுடன் மற்றொரு சுவாரஸ்யமான உதாரணத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா நவீன 'டிஜிலாக்கர்முறையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்போது, மதிப்பெண் சான்றிதழ்கள் நேரடியாக மாணவர்களின் டிஜிலாக்கர் கணக்குகளில் பதிவேற்றப்படுகின்றன. பிறப்பு முதல் முதிர்வயது வரை, அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்தையும் டிஜிலாக்கரில் சேமித்து வைக்க முடியும். இதுபோன்ற பல டிஜிட்டல் அமைப்புகள் இன்று இந்தியா முழுவதும் வாழ்க்கை முறையை எளிதாக்குவதை  உறுதி செய்கின்றன.

நண்பர்களே,

இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் அதிசயத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நிலவின் தென் துருவத்தை அடைந்த உலகின் முதல் நாடு இந்தியா தான். அதுமட்டுமின்றி, ஒரே விண்கலத்தில் 104 செயற்கைக்கோள்களை ஏவி நாம் சாதனை படைத்துள்ளோம்.

இந்தியா இப்போது 'ககன்யான்திட்டத்தின் கீழ் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. விண்வெளியில் இந்தியாவுக்கு என்று சொந்தமான விண்வெளி நிலையம் அமையப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நண்பர்களே,

இந்தியாவின் விண்வெளித் திட்டம் என்பது அதன் எல்லைகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல; ஓமனின் விண்வெளி விருப்பங்களுக்கும் நாம் ஆதரவளித்து வருகிறோம். ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளி ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டோம். இஸ்ரோ  அமைப்பு, 'இந்தியா - ஓமன் விண்வெளி இணையதளத்தைஉருவாக்கியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஓமன் நாட்டு இளைஞர்களும் இந்த விண்வெளி கூட்டாண்மையின் மூலம் பயனடைவதை உறுதி செய்வதே எங்களின் தொடர்ச்சியான முயற்சியாகும்.

இங்கு கூடியிருக்கும் மாணவர்களுடன் மற்றுமொரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இஸ்ரோ அமைப்பு 'யுவிகாஎன்ற சிறப்புத் திட்டத்தை நடத்தி வருகிறது; இது ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை விண்வெளி அறிவியலுடன் இணைக்கிறது. ஓமன் நாட்டு மாணவர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குவதே எங்களின் தற்போதைய முயற்சியாகும்.

ஓமனிலிருந்து சில மாணவர்கள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்குச் சென்று அங்கு சிறிது காலம் செலவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஓமன் இளைஞர்களின் விண்வெளி விருப்பங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்.

நண்பர்களே,

இன்று இந்தியா தனது சொந்த சவால்களுக்கு மட்டும் தீர்வுகளைக் கண்டறியவில்லை; அந்தத் தீர்வுகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதிலும் பணியாற்றி வருகிறது.

மென்பொருள் மேம்பாடு  முதல் ஊதிய மேலாண்மை வரை, மற்றும் தரவு பகுப்பாய்வு  முதல் வாடிக்கையாளர் சேவை வரை, பல உலகளாவிய பிராண்டுகள் இந்தியாவின் திறமையின் வலிமையால் முன்னேறி வருகின்றன.

பல தசாப்தங்களாக, இந்தியா தகவல் தொழில்நுட்பம்  மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் உலகளாவிய மையமாகத் திகழ்கிறது. இப்போது, உற்பத்தியையும்  தகவல் தொழில்நுட்பத்தின் வலிமையுடன் ஒருங்கிணைத்து வருகிறோம். இதற்குப் பின்னால் உள்ள தத்துவம் 'வசுதைவ குடும்பகம்' - அதாவது 'உலகம் ஒரே குடும்பம்' - என்பதிலிருந்து ஈர்க்கப்பட்டது. இதுவே 'இந்தியாவில் உருவாக்குவோம், உலகிற்காக உருவாக்குவோம்' என்ற கருத்தாக்கத்தில் பொதிந்துள்ளது.

நண்பர்களே,

தடுப்பூசிகளாக இருந்தாலும் சரி அல்லது தரமான மருந்துகள் என்றாலும் சரி, உலகம் நம்மை 'உலகின் மருந்தகம்என்று அழைக்கிறது. இந்தியாவின் மலிவான மற்றும் உயர்தர சுகாதாரத் தீர்வுகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றி வருகின்றன.

கொரோனா  காலத்தில், இந்தியா சுமார் 30 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அனுப்பியது. ஏறத்தாழ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகள் ஓமன் நாட்டு மக்களுக்குப் பயன்பட்டது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

நினைவில் கொள்ளுங்கள், மற்ற நாடுகள் அனைத்தும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு நேரத்தில், இந்தியா இந்தப் பணியை மேற்கொண்டது. நாம் உலகத்தைப் பற்றி அக்கறை கொண்டோம். இந்தியா தனது 140 கோடி குடிமக்களுக்குச் சாதனை நேரத்தில் தடுப்பூசி செலுத்திய அதே வேளையில், உலகளாவிய தேவைகளையும் பூர்த்தி செய்தது.

இதுதான் இந்தியாவின் மாதிரி  21-ஆம் நூற்றாண்டில் உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கும் மாதிரி இது. எனவே, இன்று இந்தியா 'மேட் இன் இந்தியா' சிப்புகளைத் தயாரிக்கும் போதும், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் தீவிரமாகப் பணியாற்றும் போதும், அது மற்ற நாடுகளுக்கும் நம்பிக்கையைத் தருகிறது. இந்தியாவின் வெற்றி தங்களுக்குமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் கொண்டு வரும் என்று மற்ற நாடுகள் நம்புகின்றன.

நண்பர்களே,

நீங்கள் ஓமனிலே கல்வி பயின்று, அங்கேயே பணியாற்றி வருகிறீர்கள். வரும் ஆண்டுகளில், ஓமன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சியிலும் நீங்கள் மிக முக்கியப் பங்கு வகிப்பீர்கள். உலகிற்குத் தலைமை தாங்கப்போகும் தலைமுறை நீங்கள் தான்.

நண்பர்களே,

ஓமனில் வசிக்கும் இந்தியர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, ஓமன் அரசு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. இந்திய அரசும் உங்கள் வசதிக்காக முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. ஓமன் நாடு முழுவதும் பதினொரு தூதரக சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில், ஒவ்வொரு உலகளாவிய நெருக்கடியின் போதும், இந்தியர்களுக்கு உதவ நமது அரசு மிக விரைவாகச் செயல்பட்டுள்ளது. உலகில் இந்தியர்கள் எங்கு வாழ்ந்தாலும், நமது அரசு ஒவ்வொரு அடியிலும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறது. இந்திய சமூக நல நிதி, பிரத்யேக உதவி இணையதளங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல முன்முயற்சிகள் அவர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இந்தப் பிராந்தியம் முழுவதுமே இந்தியாவிற்கு ஒரு சிறப்புமிக்க இடமாகும்; அதில் ஓமன் நமக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா-ஓமன் உறவானது தற்போது திறன் மேம்பாடு, டிஜிட்டல் கற்றல், மாணவர் பரிமாற்றம் மற்றும் தொழில்முனைவு போன்ற பகுதிகளுக்கும் விரிவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்களிடையே புதிய கண்டுபிடிப்பாளர்கள்  உருவாகி, வரும் ஆண்டுகளில் இந்தியா-ஓமன் உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இங்குள்ள இந்தியப் பள்ளிகள் தங்களது 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளன. இப்போது, அடுத்த 50 ஆண்டுகளுக்கான இலக்குகளை நோக்கி நாம் முன்னேற வேண்டும். எனவே, ஒவ்வொரு இளைஞரிடமும் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்:

பெரிய கனவு காணுங்கள். ஆழமாகக் கற்றுக் கொள்ளுங்கள். துணிச்சலுடன் புதியவற்றைப் படையுங்கள்.

ஏனென்றால், உங்கள் எதிர்காலம் என்பது உங்களது தனிப்பட்ட எதிர்காலம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிர்காலமாகும்.

 

உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான மற்றும் வளமான எதிர்காலம் அமைய மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

-----

(Release ID: 2205805)

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2212332) வருகையாளர் எண்ணிக்கை : 28