பிரதமர் அலுவலகம்
பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
21 SEP 2025 6:09PM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! சக்தி வழிபாடு செய்யும் பண்டிகையான நவராத்திரி, நாளை தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! நவராத்திரியின் முதல் நாளிலிருந்து, தற்சார்பு இந்தியா இயக்கத்தை நோக்கி நாடு மேலும் ஒரு முக்கிய மற்றும் பெரிய அடியை எடுத்து வைக்கிறது. நாளை, செப்டம்பர் 22, நவராத்திரியின் முதல் நாள், சூரிய உதயம் ஆகும் வேளையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. ஒரு வகையில், நாளை முதல் நாட்டில் ஒரு ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடங்கப் போகிறது. இந்த ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா உங்கள் சேமிப்பை அதிகரிக்கும், மேலும் நீங்கள் விரும்பும் பொருட்களை மேலும் எளிதாக வாங்க முடியும். நமது நாட்டில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் – அனைவருக்கும் இந்த சேமிப்புத் திருவிழாவால் பெரும் நன்மை கிடைக்கும். அதாவது, இந்த பண்டிகைக் காலத்தில் அனைவருக்கும் இனிப்பான உணவு கிடைக்கும், மேலும் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆசீர்வாதம் கிடைக்கும். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் இந்த சேமிப்புத் திருவிழாவுக்காக நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக் கதையை விரைவுபடுத்தும், வணிகம் செய்வதை எளிதாக்கும், முதலீட்டை ஈர்க்கும் மேலும் ஒவ்வொரு மாநிலத்தையும் வளர்ச்சிக்கான பாதையில் சமமான பங்களிப்பை கொடுக்க வகை செய்யும்.
நண்பர்களே, இந்தியா 2017-ம் ஆண்டில் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை நோக்கி அடியெடுத்து வைத்தபோது, அது வரலாற்றில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாகவும், புதியதொரு வரலாற்றில் உருவாக்கமாகவும் அமைந்தது. பல தசாப்தங்களாக, நமது நாட்டு மக்கள், நாட்டின் வர்த்தகர்கள் நீங்கள் அனைவரும், பல்வேறு வரிகள் செலுத்த வேண்டியிருந்தது. சுங்க வரி, நுழைவு வரி , விற்பனை வரி கலால் வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி, சேவை வரி என நம் நாட்டில் இதுபோன்ற டஜன் கணக்கான வரிகள் இருந்தன. பொருட்களை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு அனுப்ப வேண்டுமானால், பல சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது, பல படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது, பல தடைகள் இருந்தன, மேலும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு வரிக் கட்டுப்பாடுகள் இருந்தன. 2014-ம் ஆண்டில் நாட்டு மக்கள் பிரதமர் பதவியை என்னிடம் ஒப்படைத்தபோது, அந்த ஆரம்ப நாட்களில், ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளியிடப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது, அதில் ஒரு நிறுவனத்தின் சிரமங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த நிறுவனம், பெங்களூரில் இருந்து 570 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐதராபாத்திற்கு அதன் பொருட்களை அனுப்ப வேண்டுமானால், அது மிகவும் கடினமாக இருந்தது என்றும், அதனால் அவர்கள் தங்கள் பொருட்களை முதலில் பெங்களூரிலிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பி, பின்னர் அதே பொருட்களை ஐரோப்பாவில் இருந்து ஐதராபாத்திற்கு அனுப்ப விரும்புவதாகவும் கூறியிருந்தனர்.
நண்பர்களே,
வரி மற்றும் சுங்கச் சாவடிகளால் அப்போது ஏற்பட்ட சிக்கலான நிலை இதுதான். லட்சக்கணக்கான இத்தகைய நிறுவனங்கள், லட்சக்கணக்கான நாட்டு மக்கள், பல்வேறு வகையான வரிகளின் சிக்கலில் சிக்கி தினசரி பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு பழைய உதாரணத்தை தான் நான் உங்களுக்கு நினைவுபடுத்தினேன். ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் போது ஏற்பட்ட செலவுகளையும் ஏழைகள் சுமந்தனர், மேலும் அது உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டது.
நண்பர்களே, இந்தச் சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால்தான், 2014-ல் நீங்கள் எங்களுக்கு வாய்ப்பளித்தபோது, பொதுநலன் மற்றும் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி-க்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம். ஒவ்வொரு பங்குதாரருடனும் விவாதித்தோம், ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு சந்தேகத்தையும் தீர்த்தோம், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு தீர்வைக் கண்டோம்; அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் சென்றதால், சுதந்திர இந்தியாவில் இவ்வளவு பெரிய வரிச் சீர்திருத்தம் சாத்தியமானது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளின் விளைவாகத்தான், நாடு டஜன் கணக்கான வரிகளிலிருந்து விடுபட்டது. மேலும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சீரான அமைப்பு உருவாக்கப்பட்டது. 'ஒரே நாடு - ஒரே வரி' என்ற கனவு நனவானது.
நண்பர்களே, சீர்திருத்தம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. காலங்கள் மாற மாற, நாட்டின் தேவைகள் உருவாகும்போது, அடுத்த தலைமுறைச் சீர்திருத்தங்களும் சமமான அவசியமாகின்றன. எனவே, நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலக் கனவுகளை மனதில் வைத்து, இந்த புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஜிஎஸ்டியில், இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு வரி அடுக்குகள்தான் இருக்கும். இதன் பொருள் என்னவென்றால், பெரும்பாலான அன்றாடப் பொருட்கள் மேலும் மலிவாக மாறும். உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு, பிரஷ்கள், பற்பசை, உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு - இதுபோன்ற பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் அல்லது ஐந்து சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும். முன்பு 12 சதவீத வரி விதிக்கப்பட்ட பொருட்களில், 99 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 100 சதவீதம், இப்போது 5 சதவீத வரி வரம்பிற்குள் வந்துள்ளது.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையை வென்று, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர், மேலும் இந்த 25 கோடி மக்கள் இன்று நாட்டில் புதிய நடுத்தர வர்க்கமாக ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் வகித்து வருகின்றனர். இந்த புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கென்று சொந்த ஆசைகள், சொந்தக் கனவுகள் உள்ளன. இந்த ஆண்டு, அரசு அவர்களுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு எனும் பரிசை அளித்தது.
ரூ.12 லட்சம் வருமானத்திற்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும்போது, அது நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். இப்போது ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கு இரட்டைப் பலன் கிடைக்கிறது. ஜிஎஸ்டி குறைப்பால், நாட்டின் குடிமக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவது இப்போது எளிதாக இருக்கும். வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, டிவி, குளிர்சாதனப் பெட்டி வாங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்கூட்டர், பைக் அல்லது கார் வாங்குவதாக இருந்தாலும் சரி, இவை அனைத்திற்கும் நீங்கள் குறைவாகச் செலவிட வேண்டியிருக்கும். பெரும்பாலான ஹோட்டல்களில் அறைகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால், நீங்கள் மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்களின் செலவும் மலிவாக மாறும்.
நண்பர்களே, ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து வணிகர்கள் சகோதர சகோதரிகள் கூட மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மிகவும் மும்முரமாக உள்ளனர். பல இடங்களில் முன்பு இருந்த விலை மற்றும் இப்போது உள்ள விலையைக் காட்டும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி விலக்கு ஆகியவற்றைச் சேர்த்தால், இந்த ஒரு ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மூலம் நாட்டின் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கும் மேல் சேமிக்கப்படும். அதனால்தான் நான் இதைச் சேமிப்பு கிடைக்கும் என்று சொல்கிறேன்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, நாம் தற்சார்புப் பாதையைப் பின்பற்ற வேண்டும். மேலும், இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான ஒரு பெரிய பொறுப்பு, நம்முடைய சிறு, நடுத்தர மற்றும் குடிசைத் தொழில்களுக்கு உள்ளது. நாட்டு மக்களுக்குத் தேவைப்படுபவை எதுவாக இருந்தாலும், முடிந்தவரை நம் நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்.
நண்பர்களே, ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு, விதிகள் மற்றும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுவதால், நமது சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள், மற்றும் குடிசைத் தொழில்களுக்குப் பெரும் நன்மை கிடைக்கும். அவற்றின் விற்பனை அதிகரிக்கும், மேலும் அவை குறைவான வரி செலுத்த வேண்டியிருக்கும், அதாவது அவற்றுக்கும் இரட்டைப் பலன் கிடைக்கும். எனவே, இன்று சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள், அல்லது குடிசைத் தொழில்கள் என உங்கள் அனைவர மீதும் நான் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறேன். இந்தியா செழிப்பின் உச்சியில் இருந்தபோது, இந்தியாவின் பொருளாதாரத்தின் முக்கிய அடிப்படை நம்முடைய, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் குடிசைத் தொழில்கள்தான் என்பதை நீங்களும் அறிவீர்கள். இந்தியாவின் உற்பத்தி, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம், மிகச் சிறந்ததாக இருந்தது. அந்தப் பெருமையை நாம் மீண்டும் பெற வேண்டும். நமது சிறு தொழில்கள் உற்பத்தி செய்யும் அனைத்தும், ஒவ்வொரு தரத்திலும் உலகின் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும், மிகச் சிறந்தவற்றிலும் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். நாம் தயாரிக்கும் அனைத்தும், உலகில் மிகச் சிறந்ததாக இருப்பதற்கான அனைத்து அளவுகோல்களையும் பெருமையுடனும், கவுரவத்துடனும் அடைய வேண்டும். நமது பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் இந்தியாவின் அங்கீகாரத்தை மேம்படுத்தவும், இந்தியாவின் பெருமையை அதிகரிக்கவும் நாம் பணியாற்ற வேண்டும்.
நண்பர்களே, சுதேசி என்ற மந்திரத்தால் நாட்டின் சுதந்திரம் எவ்வாறு பலமடைந்ததோ, அதேபோல சுதேசி என்ற மந்திரத்தால் நாட்டின் செழிப்பும் பலமடையும். இன்று, தெரிந்தோ தெரியாமலோ, பல வெளிநாட்டுப் பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன, அது நமக்கே தெரிவதில்லை. நம் சட்டைப் பையில் இருக்கும் சீப்பு வெளிநாட்டினுடையதா அல்லது இந்தியாவினுடையதா என்பது கூட நமக்குத் தெரிவதில்லை. இதிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். நமது இளைஞர்களின் உழைப்பும், நமது மகன்கள் மற்றும் மகள்களின் வியர்வையும் கலந்த, 'உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ' பொருட்களை நாம் வாங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் சுதேசியின் சின்னமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு கடையையும் சுதேசியால் அலங்கரிக்க வேண்டும். இது சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள், நான் சுதேசிப் பொருட்களை வாங்குகிறேன், நான் சுதேசிப் பொருட்களை விற்கிறேன் என்று பெருமையுடன் சொல்லுங்கள், இது ஒவ்வொரு இந்தியரின் மனப்பான்மையாகவும் மாற வேண்டும். இது நடக்கும்போது, இந்தியா வேகமாக வளரும். இன்று, அனைத்து மாநில அரசுகளுக்கும் நான் வலியுறுத்துவது என்னவென்றால், இந்த தற்சார்பு இந்தியா பிரச்சாரம், இந்த சுதேசிப் பிரச்சாரம் ஆகியவற்றைக் கொண்டு, தங்கள் மாநிலங்களில் உற்பத்தியை விரைவுபடுத்தி, முழு ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இதில் இணைய வேண்டும். முதலீட்டுக்கான சூழலை மேம்படுத்துங்கள். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முன்னேறும்போது, தற்சார்பு இந்தியாவின் கனவு நிறைவேறும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளரும், இந்தியாவும் வளரும். இந்த உணர்வுடன், இந்தச் சேமிப்புத் திருவிழாவிற்கு மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து எனது உரையை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் நவராத்திரி மற்றும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா நல்வாழ்த்துகள்! மிக்க நன்றி!
***
(Release ID: 2169274)
SS/VK/PD
(रिलीज़ आईडी: 2210779)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Malayalam
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada