உள்துறை அமைச்சகம்
சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் பஸ்தார் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
2026 மார்ச் 31-க்குள் நக்சல் தீவிரவாதம் முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் - திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
13 DEC 2025 5:35PM by PIB Chennai
சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் இன்று (13.12.2025) நடைபெற்ற பஸ்தர் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில், சத்தீஸ்கர் முதல்வர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் திரு விஜய் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, 2026 மார்ச் 31- க்கு முன்னர் இடதுசாரி தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இலக்கு எட்டப்பட்டு வருவதாகவும் கூறினார். அடுத்த ஆண்டு, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பஸ்தர் ஒலிம்பிக் நடைபெறும் நேரத்தில், சத்தீஸ்கர் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், முழு இந்தியாவையும் நக்சலிசத்திலிருந்து விடுவிப்பதற்கான உறுதியை அரசு எடுத்துள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்தார். கான்கர், கொண்டகான், பஸ்தார், சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர், தண்டேவாடா ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பிரிவு டிசம்பர் 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடிப் பகுதியாக மாறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு பஸ்தார் ஒலிம்பிக்கில், ஏழு மாவட்டங்களில் இருந்து ஏழு அணிகளும், சரணடைந்த நக்சலைட்டுகளைக் கொண்ட ஒரு அணியும் பங்கேற்றதாக திரு அமித் ஷா கூறினார். இந்த விளையாட்டுகளில் 700-க்கும் மேற்பட்ட சரணடைந்த நக்சலைட்டுகள் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு பஸ்தார் ஒலிம்பிக்கில் 1 லட்சத்து 65 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர் என்றும், இந்த ஆண்டு 3 லட்சத்து 91 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர் என்றும், இது கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமாகும் என்றும், பெண்களின் பங்கேற்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
அமைதி மட்டுமே வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார். ஆயுதங்களைக் கைவிட்டு நக்சலைட்டுகள் சரண் அடைய வேண்டும் என்றும் சரண் அடைபவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். என்கவுன்ட்டர்களில் நக்சலைட்களைக் கொல்லும் நோக்கம் மத்திய அரசுக்கும் சத்தீஸ்கர் அரசுக்கும் ஒருபோதும் இல்லை என்று அவர் கூறினார். ஆயுதங்களுடன் உள்ள நக்சலைட்டுகள் அதனைக் கைவிட்டு சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திற்கு வர வேண்டும் என்று திரு அமித் க்ஷா அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203518®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203577)
आगंतुक पटल : 8