மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர், பிரதமர், பிற முக்கிய பிரமுகர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி

நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் பாதுகாப்பது கூட்டுப் பொறுப்பு - பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

प्रविष्टि तिथि: 13 DEC 2025 2:03PM by PIB Chennai

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாடு இன்று நினைவு கூர்ந்தது. உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான பாதுகாப்புப் படையினருக்கும் பிற ஊழியர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது.

மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் ஆகியோர் வீர மரணம் அடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மக்களவைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவைச் செயலாளர் திரு பி சி மோடி, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கும்போது உயிர்த்தியாகம் செய்த நமது துணிச்சலான பாதுகாப்புப் படையினர், பிற ஊழியர்கள் ஆகியோரின்  உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

ஜனநாயகத்தின் உச்ச அமைப்பான நமது நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு நன்றி. தேசத்திற்காக அவர்கள் காட்டிய ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு, ஒரு நிலையான உத்வேகத்தின் ஆதாரமாகும்.

காலத்தால் மறக்கப்படாத அந்த மாவீரர்கள், பயங்கரவாதிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டனர். அவர்களது அந்தச் செயலானது, துணிச்சல், கடமை, ஜனநாயக விழுமியங்கள், தேசிய பாதுகாப்பு ஆகியவை மீதான இந்தியாவின் அசைக்க முடியாத அடையாளமாகவும் உள்ளது. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்த்து நிற்கிறது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பு வெறும் வார்த்தைகள் அல்ல. மாறாக எந்தவொரு பயங்கரவாத நோக்கத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதற்கான வலுவான செய்தியாகும்.

அந்த வீரர்களின் இணையற்ற தியாகம், நமது வருங்கால சந்ததியினருக்கு துணிச்சல், தன்னலமற்ற தன்மை, கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்." என்று திரு ஓம் பிர்லா கூறியுள்ளார்.

2001 டிசம்பர் 13 அன்று, மாநிலங்களவைச் செயலகத்தின் பாதுகாப்பு உதவியாளர்களான ஜகதீஷ் பிரசாத் யாதவ், மத்பர் சிங் நேகி, மத்திய ரிசர்வ் காவல் படையின் காவலர் கமலேஷ் குமாரி, தில்லி காவல்துறையின் உதவி துணை ஆய்வாளர்கள் நானக் சந்த், ராம்பால், தில்லி காவல்துறையின் தலைமைக் காவலர்கள் ஓம் பிரகாஷ், பிஜேந்தர் சிங், கன்ஷ்யாம், மத்திய பொதுப்பணித் துறையின் தோட்டக்காரர் தேஷ்ராஜ் ஆகியோர் நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கும் போது உயிர்த் தியாகம் செய்ததை நாடு நினைவு கூர்கிறது.

அவர்களின் முன்மாதிரியான துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில், ஜகதீஷ் பிரசாத் யாதவ், மத்பர் சிங் நேகி, கமலேஷ் குமாரி ஆகியோருக்கு அசோகச் சக்ரா விருதும், நானக் சந்த், ராம்பால், ஓம் பிரகாஷ், பிஜேந்தர் சிங், கன்ஷ்யாம் ஆகியோருக்கு கீர்த்தி சக்ரா விருதும் மரணத்திற்குப் பிந்தைய விருதாக  வழங்கப்பட்டது.

***

(Release ID: 2203448)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203498) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam