தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வயதுக்கு மீறிய உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஓடிடி தளங்களில் வலுவான பாதுகாப்பு அம்சங்களை அரசு கட்டாயப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
12 DEC 2025 4:42PM by PIB Chennai
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் பகுதி-III, ஓடிடி தளங்களில் உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கான நெறிமுறை குறியீடுகளை வழங்குகிறது. இதன்படி, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும் வெளியிடப்படக் கூடாது. மேலும் வயது அடிப்படையிலான உள்ளடக்கம் 5 வகைகளாகப் பிரிக்கப்படுவதை இந்தக் குறியீடு வலியுறுத்துகிறது. இந்தக் குறியீடின்படி, குழந்தைகளின் வயதை மீறிய உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த ஓடிடி தளங்கள் போதுமான பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசு தொடர்பான போலிச் செய்திகளைச் சரிபார்க்க, 2019 நவம்பரில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் ஒரு உண்மை சரிபார்ப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து செய்திகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்த பிறகு, இந்தப் பிரிவு அதன் சமூக ஊடக தளங்களில் சரியான தகவல்களைப் பதிவேற்றுகிறது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றின் நலனுக்காக, சர்ச்சைக்குரிய வலைத்தளங்கள், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இடுகைகளை முடக்க அரசு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
வேவ்ஸ் ஓடிடி தளம் மூலம், பிரச்சார் பாரதி, உள்ளூர் படைப்பாளர்களை ஆதரிக்கிறது. இது உண்மையான பிராந்திய உள்ளடக்கத்தை வெளியிடவும், ஊக்குவிக்கவும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது.
மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203034®=3&lang=1
(Release ID: 2203034)
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2203369)
आगंतुक पटल : 6