திரைத்துறையில் பொன்விழா கண்ட நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டு
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) கௌரவிக்கப்பட்டார். ‘தலைவர்’ என்று அன்பாக அழைக்கப்படும் திரு ரஜினிகாந்த், தனது தனித்துவமான பாணி மற்றும் புகழ்பெற்ற நடிப்பால் பல தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் படங்களுடன், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திரு ரஜினிகாந்தின் மகத்தான பங்களிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பிரபலமான கலாச்சாரத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ள சூப்பர் ஸ்டார், பத்ம பூஷண் (2000), பத்ம விபூஷண் (2016) மற்றும் தாதாசாகேப் பால்கே (2020) உள்பட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
பாராட்டு விழாவில் கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த், திரு ரஜினிகாந்திற்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, நடிகர் திரு ரன்வீர் சிங் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த கௌரவத்தை தமக்கு அளித்ததற்காக மத்திய அரசுக்கு திரு ரஜினிகாந்த் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தாம் திரைத்துறையையும், நடிப்பையும் தீவிரமாக நேசிப்பதால், கடந்து வந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது, 50 ஆண்டுகளை 10 அல்லது 15 ஆண்டுகள் போல தாம் உணர்வதாக அவர் கூறினார். "100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்," என்று சூப்பர் ஸ்டார் தெரிவித்தார்.
இந்தக் கொண்டாட்டத்தின் மூலம், இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025, மொழி மற்றும் புவி எல்லைகளைத் தாண்டி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஒருசேர ஊக்குவிக்கும் ஒரு புகழ்பெற்ற கலாச்சாரத்தை கௌரவிக்கிறது. திரு ரஜினிகாந்தின் பொன்விழா, ஒரு தனிப்பட்ட மைல்கல்லை மட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தை வடிவமைப்பதில் திரைத்துறையின் மாற்றகரமான சக்திக்கு ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2196051®=1&lang=1
(Release ID: 2196051)
***
AD/BR/SH
रिलीज़ आईडी:
2196127
| Visitor Counter:
8