பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 உச்சிமாநாட்டின் 3-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 23 NOV 2025 3:58PM by PIB Chennai

மதிப்பிற்குரிய தலைவர்களே,

தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அது தொடர்பான வாய்ப்புகள், வளங்கள் இரண்டும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும், முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கு கவலை அளிக்கும் விஷயம். மேலும் இது புதுமைக்கும் ஒரு தடையாக அமைகிறது. இதை நிவர்த்தி செய்ய, நமது அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

நிதியை மையமாக கொண்டு அல்லாமல் மனிதர்களை மையமாகக் கொண்டு தொழில்நுட்பப் பயன்பாடுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்தியா தனது அனைத்து தொழில்நுட்ப திட்டங்களிலும் இந்த தொலைநோக்குப் பார்வையை ஒருங்கிணைக்க முயன்றுள்ளது.

இதனால்தான், இந்தியா இப்போது உலகில் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளைச் செய்கிறது. விண்வெளி தொழில்நுட்பம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, ஒவ்வொரு துறையிலும் நேர்மறையிலான, பரந்த அடிப்படையிலான பங்கேற்பை நாம் காண்கிறோம்.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவுக்கான இந்தியாவின் அணுகுமுறை மூன்று தூண்களில் உள்ளது. சமமான அணுகல், மக்கள்தொகை அளவிலான திறன், பொறுப்பான பயன்பாடு ஆகியவையே அவை. இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், அதன் நன்மைகள் ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடையும் வகையில் உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இது மனித வளர்ச்சியை நோக்கிய எங்களது முயற்சிகளுக்கு வேகத்தை வழங்கும்.

அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு உலகளாவிய நன்மைக்காகப் பயன்படுத்தப்படுவதையும், அதன் தவறான பயன்பாடு தடுக்கப்படுவதையும் நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக, சில அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவில் ஒரு உலகளாவிய ஒப்பந்தம் நமக்குத் தேவை. இதில் பயனுள்ள மனித மேற்பார்வை, பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை போன்றவை இருக்க வேண்டும்.

மனித வாழ்க்கையில், பாதுகாப்பு அல்லது பொது நம்பிக்கையை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை தடுக்க வேண்டும். மிக முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு மனித திறன்களை மேம்படுத்தும் என்றாலும், முடிவெடுப்பதற்கான இறுதிப் பொறுப்பு எப்போதும் மனிதர்களிடமே இருக்க வேண்டும்.

பிப்ரவரி 2026-ல் அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கருப்பொருளுடன் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும். இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க அனைத்து ஜி20 நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

நண்பர்களே,

இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில், 'இன்றைய வேலைகள்' என்பதிலிருந்து 'நாளைய திறன்கள்' என்பதற்கு நமது அணுகுமுறையை விரைவாக மாற்ற வேண்டும். திறன் பரிமாற்றத்தை அதிகரிப்பது அவசியம். புதுதில்லி ஜி20 உச்சி மாநாட்டில் இந்த விஷயத்தில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம். வரும் ஆண்டுகளில், ஜி20, திறன் பரிமாற்றத்துக்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நண்பர்களே,

கொவிட் சகாப்தம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த சவாலான நேரத்தில் கூட, இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்கியது. நாடுகளை வெறும் சந்தைகளாகப் பார்க்க முடியாது. நாம் ஒரு நீண்டகால அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் செய்தி தெளிவாக உள்ளது:

  • வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும்,
  • வர்த்தகத்தில் நம்பிக்கை வேண்டும்,
  • நிதி அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும்,
  • முன்னேற்றம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை உறுதி செய்ய வேண்டும்.

அப்போதுதான் அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

நன்றி.

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

(Release ID: 2193154)

AD/PLM/RJ


(Release ID: 2193267) Visitor Counter : 5