பிரதமர் அலுவலகம்
ஜொகன்னஸ்பர்கில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபரைச் சந்தித்தார்
Posted On:
23 NOV 2025 2:38PM by PIB Chennai
ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசாவுக்கு நன்றி தெரிவித்தார். புது தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல தென்னாப்பிரிக்க மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வரலாற்று உறவுகளை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, உணவுப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, சுரங்கம், இளைஞர் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிக ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதற்கு திருப்தி தெரிவித்தனர். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, முக்கிய கனிமங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். தென்னாப்பிரிக்காவில் இந்திய நிறுவனங்கள் வளர்ந்து வருவதை இரு தலைவர்களும் வரவேற்றனர். பரஸ்பர முதலீடுகளை எளிதாக்க ஒப்புக்கொண்டனர். குறிப்பாக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, சுரங்கம், புத்தொழில் போன்ற துறைகளில் முதலீட்டை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். தென்னாப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவிற்கு வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் திரு ராமபோசாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியா தலைமையிலான சர்வதேச புலிகள் கூட்டமைப்பில் சேருமாறு தென்னாப்பிரிக்காவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
உலக அளவில் வளரும் நாடுகளின் (உலகளாவிய தெற்கு நாடுகள்) குரலை வலுப்படுத்த கூட்டாக பணியாற்றுவது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தச் சூழலில், இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா எனப்படும் ஐபிஎஸ்ஏ (IBSA) தலைவர்கள் கூட்டத்தை நடத்த தென்னாப்பிரிக்கா எடுத்த முயற்சியைப் பிரதமர் பாராட்டினார். 2026-ம் ஆண்டில் இந்தியாவுக்கு கிடைக்கவிருக்கும் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பிற்கு தென்னாப்பிரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்று அந்நாட்டு அதிபர் திரு ராமபோசா உறுதியளித்தார்.
***
(Release ID: 2193136)
AD/PLM/RJ
(Release ID: 2193190)
Visitor Counter : 6