இந்தியா சர்வதேச திரைப்படவிழா 2025 வரலாற்றுச் சிறப்புமிக்க பிரமாண்ட அணிவகுப்புடன் கோவாவில் தொடங்குகிறது
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), வழக்கமான தொடக்க விழாக்களுக்கான இலக்கணத்தை மாற்றியமைக்கும் வகையில், கோவாவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட ஊர்வலத்துடன் தொடங்கவிருக்கிறது.
முதன்முறையாக, இந்த திரைப்பட விழா தனது பார்வையாளர்களை ஒரு மாறுபட்ட அனுபவத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளது. இதில் கதைகள் உயிர்பெறும், இசை காற்றில் தவழும், கதாபாத்திரங்கள் திரையை விட்டு வெளியே வரும். நவம்பர் 20-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, கோவாவின் 'என்டர்டெயின்மென்ட் சொசைட்டி' அலுவலகத்திலிருந்து 'கலா அகாடமி' வரை நடைபெறவுள்ள இந்த தனித்துவமான ஊர்வலம், கோவா வீதிகளையே இந்திய சினிமாவின் கலாச்சார ஓவியமாக மாற்றப்போகிறது.
இந்த அணிவகுப்பை ஆந்திர பிரதேசம், ஹரியானா மற்றும் கோவா மாநிலங்களின் கண்கவர் கலை ஊர்திகள் முன்னின்று நடத்தவுள்ளன. ஒவ்வொரு மாநிலமும் தத்தமது அடையாளம் மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இது அமையும். விசாகப்பட்டினத்தின் பொன்னான கடற்கரைகள், அராகுவின் பள்ளத்தாக்குகள் மற்றும் தெலுங்கு சினிமாவின் துடிப்பான உணர்வுகளோடு ஆந்திரா வலம் வரவுள்ளது. மறுபுறம், ஹரியானா தனது நாட்டுப்புறக் கதைகள், நாடகம் மற்றும் கலாச்சாரப் பெருமைகளை வண்ணமயமான கலவையாக வழங்கவுள்ளது. இவ்விழாவின் நீண்டகால இல்லமான கோவா, ஊர்வலத்தின் உணர்ச்சிகரமான இதயமாகத் திகழும்.
மாநிலங்களின் அணிவகுப்போடு இணைந்து, இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பிரம்மாண்ட சினிமா ஊர்திகளும் அணிவகுக்கின்றன. 'அகண்டா-2'-ன் புராணச் சக்தி, ராம் சரணின் திரைப்படங்களின் ஆழம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸின் படைப்பாற்றல், ஹோம்பலே ஃபிலிம்ஸின் உலகளாவிய பார்வை, பிந்துசாகரின் ஒடியா பாரம்பரியம் என அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய சினிமாவின் எல்லையற்ற பன்முகத்தன்மையை பறைசாற்றவுள்ளன. இவற்றுடன், நாடு முழுவதும் திரைப்படத் தயாரிப்பாளர்களை உருவாக்கி, சினிமா புதுமைகளை வளர்த்து வரும் NFDC-யன் 50 ஆண்டுகால பொன்விழா கொண்டாட்டத்தை குறிக்கும் வகையிலான சிறப்பு ஊர்தியும் இதில் இடம்பெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது.
ஊர்வலத்தின் தொடக்கமாக, மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை வழங்கும் "பாரத் ஏக் சூர்" என்ற நிகழ்ச்சி மெய்சிலிர்க்கும் ஆற்றலுடன் அமையவுள்ளது. பதினாறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இந்த மெய்மயக்கும் நாட்டுப்புற இசைச் சங்கமத்தில், பாங்க்ரா கர்பாவுடனும், லாவணி கூமருடனும் இணைகின்றன. பிஹு, சாவ் மற்றும் நாட்டின் நடனங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, இறுதியில் இந்தியாவின் கலாச்சார இதயத்துடிப்பை வெளிப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான மூவண்ணக் கொடி வடிவத்துடன் நிறைவடையும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
விழாவில் கூடுதல் சிறப்பம்சமாக, அழகு மற்றும் மகிழ்ச்சியைச் சேர்க்கும் வகையில் இந்தியாவின் பிரியமான அனிமேஷன் கதாபாத்திரங்களான சோட்டா பீம், சுட்கி, மோட்டு பட்லு மற்றும் பிட்டு பகானேபாஸ் ஆகியோர் திரையிலிருந்து நேரில் வந்து பார்வையாளர்களைச் சிரிப்புடனும் உற்சாகத்துடனும் வரவேற்க உள்ளனர்.
மொத்தத்தில், இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025-ன் இந்தத் தொடக்க அணிவகுப்பு என்பது ஒரு சாதாரண தொடக்க விழாவை விட மேலானது; இது ஒரு கலாச்சார வாக்குறுதியாகும். கோவா இந்தத் அசாதாரண தொடக்கத்திற்குத் தயாராகிவிட்டது. இந்தியா என்பது வெறும் கதைகளின் தேசம் மட்டுமல்ல, அது மறக்க முடியாத தாளத்துடன் முன்னேறிச் செல்லும் ஒரு இயக்கம் என்பதை உலகிற்கு உணர்த்த சர்வதேச திரைப்பட விழா அனைவரையும் அழைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191742
வெளியிட்டு அடையாள எண்:2191742
***
AD/VK/SH
Release ID:
2191889
| Visitor Counter:
6