பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம்

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்

9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார்

Posted On: 18 NOV 2025 11:38AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.

காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.

அதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் செல்லும் அவர், பிற்பகல் 1.30 மணியளவில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், நாட்டில் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை விடுவித்து உரையாற்ற உள்ளார்.

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டிற்கு தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். இது 2025 நவம்பர் 19 அன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை துரிதப்படுத்தவதையும் இம்மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது.

வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஊரக தொழல் முனைவோர்கள் இடையே சந்தை இணைப்புகளை உருவாக்குதல், இயற்கை வேளாண் முறைகள், வேளாண் பதப்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேக்கேஜிங், உள்நாட்டு தொழில்நுட்பங்களில் புதுமை கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்படும். இம்மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவோர், விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்கள் விநியோகிப்போர், விற்பனையாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் பங்கேற்பார்கள்.

***

(Release ID: 2191096)

SS/IR/RK/KR


(Release ID: 2191139) Visitor Counter : 27