உள்துறை அமைச்சகம்
வடக்கு மண்டல கவுன்சிலின் 32-வது கூட்டம் ஃபரிதாபாத்தில் நாளை நடைபெறுகிறது - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகிக்கிறார்
प्रविष्टि तिथि:
16 NOV 2025 11:39AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நாளை (நவம்பர் 17, 2025 திங்கள்கிழமை) வடக்கு மண்டல கவுன்சிலின் 32-வது கூட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மண்டல கவுன்சிலில் ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி, ஜம்மு காஷ்மீர், லடாக், சண்டிகர் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டத்தை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.
1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் பிரிவு 15 முதல் 22 வரையிலான பிரிவுகளின் கீழ், வடக்கு மண்டல கவுன்சில் உட்பட ஐந்து மண்டல கவுன்சில்கள் நிறுவப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா வடக்கு மண்டல கவுன்சிலின் தலைவராகவும், ஹரியானா முதலமைச்சர் அதன் துணைத் தலைவராகவும் உள்ளார். இதில் உறுப்பினராக உள்ள மாநிலத்தின் முதலமைச்சர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் துணைத் தலைவராகச் செயல்படுகின்றனர்.
மாநிலங்களால் முன்மொழியப்பட்ட பிரச்சினைகள், சம்பந்தப்பட்ட மண்டல கவுன்சிலின் குழுவிடம் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, மீதமுள்ள பிரச்சினைகள் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கூடுதல் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மத்திய அரசுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து உரையாடலுக்கான ஒரு கட்டமைப்பை இந்தக் கவுன்சில் கூட்டங்கள் வழங்குகின்றன. இதன் மூலம், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக இது செயல்படுகிறது.
***
(Release ID: 2190473)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2190630)
आगंतुक पटल : 27