குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவுக்கு எட்டுச் சிறுத்தைகளை வழங்கியது போட்ஸ்வானா

Posted On: 13 NOV 2025 5:34PM by PIB Chennai

இந்தியா - போட்ஸ்வானா இடையேயான 'சிறுத்தை திட்டத்தின்' அடுத்த கட்டமாக, போட்ஸ்வானா தன் நாட்டில் உள்ள எட்டுச் சிறுத்தைகளை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது. போட்ஸ்வானாவின் மோகோலோடி இயற்கை காப்பகத்தில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் போட்ஸ்வானா அதிபர் வழக்கறிஞர் துமா கிடியோன் போகோ ஆகியோர் முன்னிலையில் சிறுத்தைகள் அடையாள ரீதியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டன.

இன்று (2025 நவம்பர் 13) காலை, இரண்டு தலைவர்களும் மோகோலோடி இயற்கை காப்பகத்தைப் பார்வையிட்டனர். அங்கு, கான்சி  பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தைகளை, இந்தியா மற்றும் போட்ஸ்வானாவைச் சேர்ந்த நிபுணர்கள் தனிமைப்படுத்தும் வசதிக்குள் விடுவிப்பதை இருவரும் கண்டனர். இந்த நிகழ்வு, சிறுத்தை திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு எட்டுச் சிறுத்தைகளை போட்ஸ்வானா அடையாளமாக வழங்கியதைக் குறிக்கிறது. வனவிலங்குப் பாதுகாப்பில் இந்தியா-போட்ஸ்வானா ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் இதன் மூலம் தொடங்குகிறது.

பின்னர், போட்ஸ்வானாவின் துணை அதிபர்  மற்றும் சர்வதேச உறவுகள் துறை அமைச்சர் ஆகியோர் குடியரசுத்தலைவரைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடினர்.

புதுதில்லிக்குப் புறப்படுவதற்கு முன், காபோரோனில் உள்ள இந்தியத் தூதரால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இந்தியச் சமூகத்தினரிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார். மத்திய ஜல் சக்தி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் திரு வி சோமண்ணா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பிரபுபாய் நாகர்பாய் வாசவா மற்றும் திருமதி டி கே அருணா ஆகியோர் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

இந்தியச் சமூக உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கூடியிருந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்திய மக்கள் அவர்களின் பங்களிப்பைப் பற்றிப் பெருமை கொள்கிறார்கள் என்று கூறினார். கடின உழைப்பு, நேர்மை மற்றும் நல்லிணக்கம் போன்ற இந்தியாவிற்கும் போட்ஸ்வானாவிற்கும் பொதுவான விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத் தூதுவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்ஸ்வானாவின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பங்களிக்கும் அதே வேளையில், இந்தியாவுடனான தங்கள் உறவை வலுப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், வெளிநாட்டு இந்தியக் குடியுரிமைத் திட்டம்  மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்  போன்ற முயற்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், இந்தியாவின் வளர்ச்சியில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர் அவர்களை ஊக்குவித்தார்.

இந்தியாவிற்கும் போட்ஸ்வானாவிற்கும் இடையிலான உறவு நம்பிக்கை, மரியாதை மற்றும் பொதுவான ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். போட்ஸ்வானா அதிபர் திரு போகோவுடனான கலந்துரையாடலின்போது, வர்த்தகம், கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இந்தியா மற்றும் போட்ஸ்வானா மேலும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது வெற்றிகரமான பயணத்தை முடித்துக்கொண்டு, குடியரசுத்தலைவர் நவம்பர் 14-ம் தேதி காலையில் புதுதில்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

SS/VK/SH


(Release ID: 2189866) Visitor Counter : 10