பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூலில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 16 OCT 2025 7:16PM by PIB Chennai

சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

மாண்புமிகு ஆந்திர பிரதேச ஆளுநர் திரு எஸ் அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு கே. ராம்மோகன் நாயுடு அவர்களே, திரு சந்திர சேகர் பெம்மசானி அவர்களே, திரு புபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா அவர்களே; துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களே, மாநில அரசு அமைச்சர் திரு நாரா லோகேஷ் அவர்களே, மற்ற அனைத்து அமைச்சர்களும், பிஜேபி மாநிலத் தலைவர் திரு பி.வி.என். மாதவ் அவர்களே, அனைத்து நாடாளுமன்ற, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அன்பான சகோதர சகோதரிகளே!

முதலில், அஹோபிலம் நரசிம்ம சுவாமி மற்றும் மகாநந்தியின் மகாநந்தீஸ்வர சுவாமியை வணங்குகிறேன். மந்த்ராலயம் குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடம் நம் அனைவருக்காகவும் ஆசிகள் பெறுகிறேன்.

நண்பர்களே,

துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரத்தின் பாராயணத்தில், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் முதலில் சோமநாதர், இரண்டாவது மல்லிகார்ஜுனர் என்று கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சோம்நாதரின் பூமியில் பிறந்து, பாபா விஸ்வநாதரின் இருப்பிடமான காசியில் சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்து, இன்று ஸ்ரீசைலத்தின் அருளைப் பெறுவது எனது பாக்கியம்.

நண்பர்களே,

ஸ்ரீசைலத்தைப் பார்வையிட்ட பின், ஸ்பூர்த்தி கேந்திராவை சிவாஜி பார்வையிட்டு அங்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது. இந்த மேடையிலிருந்தும் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை வணங்குகிறேன். அல்லாமா பிரபு மற்றும் அக்கமகாதேவி போன்ற சிவ பக்தர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.  உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி மற்றும் ஹரி சர்வோத்தம ராவ் போன்ற பெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் பணிவுடன் வணங்குகிறேன்.

நண்பர்களே,

ஆந்திர பிரதேசம் பெருமை மற்றும் கலாச்சாரத்தின் பூமி, அதே சமயத்தில், அது அறிவியல் மற்றும் புதுமையின் மையமாகவும் உள்ளது. இது எல்லையற்ற சாத்தியக்கூறுகள் மற்றும் மகத்தான இளைஞர் சக்தி கொண்ட பூமி. ஆந்திராவுக்குத் சரியான தொலைநோக்குப் பார்வை மற்றும் சரியான தலைமை தேவைப்பட்டது. இன்று, ஆந்திராவில் அந்த  தொலைநோக்குத் தலைமை மத்திய அரசின் முழு ஆதரவுடன் திரு சந்திரபாபு நாயுடு மற்றும் திரு பவன் கல்யாண் மூலம் கிடைத்துள்ளது.

நண்பர்களே,

கடந்த 16 மாதங்களில், ஆந்திர பிரதேசத்தில் வளர்ச்சியின் வேகம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இரட்டை எஞ்சின் அரசின் கீழ் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றம் நடைபெறுகிறது. இன்று, தில்லியும் அமராவதியும் விரைவான வளர்ச்சியை நோக்கி ஒன்றாக முன்னேறி வருகின்றன. திரு சந்திரபாபு சரியாகக் கூறியது போல், இந்த வேகத்தைப் பார்க்கும்போது, 2047-ல், நாடு 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும்போது, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை நிச்சயமாக உண்மையாகும் என்று நம்பிக்கையுடன் கூற முடியும். இப்போதுதான், திரு சந்திரபாபு பெரும் உணர்ச்சியுடன் பேசினார். மேலும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கே உரியது என்று முழு நம்பிக்கையுடன் நான் கூற முடியும். இந்த நூற்றாண்டு நாட்டின் 140 கோடி மக்களுக்கு உரியது.

நண்பர்களே,

இன்றும் கூட, சாலைகள், மின்சாரம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மாநிலத்தில்  போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தும், தொழில்துறையை ஊக்குவிக்கும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். கர்னூல் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகள் இந்த முயற்சிகளிலிருந்து பெரிதும் பயனடையும். இந்தத் திட்டங்களுக்காக மாநிலத்தின் அனைத்து மக்களையும் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

எந்த ஒரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியமானது. இன்று, எரிசக்தித் துறையில் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பரிமாற்றத் திட்டம் இங்கே தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் எரிசக்தித் திறனை மேலும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

விரைவான வளர்ச்சியின் மத்தியில், கடந்த கால நிலைமையை நாம் மறக்கக்கூடாது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தபோது, நாட்டில் தனிநபர் மின்சார நுகர்வு சராசரியாக 1,000 யூனிட்களுக்கும் குறைவாக இருந்தது. நாடு அடிக்கடி மின்தடைகளை எதிர்கொண்டது, பல கிராமங்களில் மின்கம்பங்கள் கூட இல்லை. இன்று, பாரதம் துய்மையான  மின்சார உற்பத்தி முதல் மொத்த மின்சார உற்பத்தி வரை ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இப்போது மின்சாரம் சென்றடைந்துள்ளது. தனிநபர் மின்சாரப் பயன்பாடு 1,400 யூனிட்களாக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கும் போதுமான மின்சாரம் உள்ளது.

நண்பர்களே,

ஆந்திர பிரதேசம் இந்த எரிசக்தி புரட்சியின் முக்கிய மையங்களில் ஒன்றாகும். திரு சந்திரபாபுவின் தலைமையில், ஸ்ரீகாகுளம் முதல் அங்குல் வரையிலான இயற்கை எரிவாயு குழாய்த் திட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் குழாய் ஏறக்குறைய 15 லட்சம் வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கும். சித்தூரில் இன்று ஒரு திரவ எரிவாயு நிரப்பும் ஆலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தினசரி 20,000 சிலிண்டர்களை நிரப்பும் திறன் கொண்டது. இது உள்ளூர் போக்குவரத்து மற்றும் சேமிப்பு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.

நண்பர்களே,

இன்று, 'வளர்ச்சியடைந்த பாரதம்' இலக்கை விரைவாக அடைய நாடு முழுவதும் பல்முனை உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், நகரங்களிலிருந்து துறைமுகங்களுக்கும் இணைப்பு வசதியை ஏற்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சப்பாவரம் மற்றும் ஷீலா நகருக்கு இடையிலான புதிய நெடுஞ்சாலை போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும். ரயில்வே துறையிலும் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. புதிய ரயில்வே பாதைகளின் தொடக்கம் மற்றும் ரயில் மேம்பாலங்களின் கட்டுமானத்துடன், பயணம் எளிதாகும். மேலும், இந்தப் பகுதியில் தொழில்கள் புதிய வேகத்தைப் பெறும்.

நண்பர்களே,

2047-க்குள் ஒரு 'வளர்ச்சியடைந்த பாரத்தை' கட்டியெழுப்ப நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்த தேசிய நோக்கம் "ஸ்வர்ண (பொற்கால) ஆந்திரா" தொலைநோக்குப் பார்வையிலிருந்து புதிய ஆற்றலைப் பெறுகிறது. தொழில்நுட்பம் என்று வரும்போது, ஆந்திர பிரதேசமும் அதன் இளைஞர்களும் எப்போதும் முன்னணியில் இருந்துள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இரட்டை எஞ்சின் அரசின் கீழ் ஆந்திராவின் மகத்தான சாத்தியக்கூறுகளை மேலும் விரிவுபடுத்துகிறோம்.

நண்பர்களே,

இன்று, பாரதம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் வளர்ச்சியின் வேகமும் அளவும் முழு உலகத்தாலும் அங்கீகரிக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புதான், கூகுள் ஆந்திர பிரதேசத்தில் ஒரு பெரிய முதலீட்டை அறிவித்தது. கூகுள் ஆந்திர பிரதேசத்தில் பாரதத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவப் போகிறது. நேற்று நான் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் பேசியபோது, அவர் என்னிடம், "அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் எங்களுக்கு முதலீடுகள் உள்ளன. ஆனால் எங்களின் அடுத்த மிகப்பெரிய முதலீடு ஆந்திர பிரதேசத்தில் இருக்கும்" என்று கூறினார். இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு மையம் சக்திவாய்ந்த ஏஐ உள்கட்டமைப்பு, தரவு மைய திறன், பெரிய அளவிலான ஆற்றல் ஆதாரங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட செயற்கை கண்ணாடி இழை இணைப்பு வசதி ஆகியவற்றை உள்ளடக்கும்.

நண்பர்களே,

கூகுளின் செயற்கை நுண்ணறிவு மைய முதலீட்டின் ஒரு பகுதியாக, கடலுக்கடியில் செல்லும் ஒரு புதிய சர்வதேச நுழைவாயில்  கட்டப்படும். இது நாட்டின் கிழக்குக் கடற்கரையை விசாகப்பட்டினத்துடன் நேரடியாக இணைக்கும் பல சர்வதேச கடலுக்கடியில் செல்லும் கேபிள்களை உள்ளடக்கும்.

நண்பர்களே,

இந்தத் திட்டம் விசாகப்பட்டினத்தை செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைப்புத்தன்மைக்கான உலகளாவிய மையமாக நிறுவும். இது பாரதத்திற்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும் பயனளிக்கும். இந்த சாதனைக்காக ஆந்திர பிரதேச மக்களை மனமார வாழ்த்துகிறேன் மற்றும் திரு சந்திரபாபுவின் தொலைநோக்குத் தலைமையைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

பாரதத்தின் வளர்ச்சிக்கு ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சி அவசியம். ஆந்திராவின் வளர்ச்சிக்கு ராயலசீமாவின் வளர்ச்சி சமமாக முக்கியம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கர்னூலில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ராயலசீமாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் செழிப்பின் புதிய கதவுகளைத் திறக்கும். இந்தத் திட்டங்கள் முழு பகுதியிலும் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்தும்.

நண்பர்களே,

ஆந்திர பிரதேசத்தின் விரைவான முன்னேற்றத்தை உறுதி செய்ய புதிய தொழிற்சாலை தாழ்வாரங்கள் மற்றும் மையங்களை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக, அரசு ஓர்வகல் மற்றும் கோப்பார்த்தியை ஆந்திர பிரதேசத்தின் புதிய தொழில்துறை அடையாளங்களாக உருவாக்குகிறது. ஓர்வகல் மற்றும் கோப்பார்த்தியில் முதலீடுகள் அதிகரிக்கும்போது, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன.

நண்பர்களே,

இன்று, உலகம் பாரதத்தை 21-ம் நூற்றாண்டின் புதிய உற்பத்தி மையமாகப் பார்க்கிறது. இந்த வெற்றியின் மிகப்பெரிய அடித்தளம் 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையாகும். நமது ஆந்திர பிரதேசம் 'தற்சார்பு இந்தியாவின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

நண்பர்களே,

காங்கிரஸ் அரசு ஆந்திர பிரதேசத்தின் உண்மையான திறனை புறக்கணித்து மாநிலத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தீங்கு விளைவித்தது. நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தியிருக்கக்கூடிய ஒரு மாநிலம் அதன் சொந்த வளர்ச்சிக்காகவே போராட வேண்டிய நிலை இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் ஆந்திர பிரதேசத்தின் தோற்றம் மாறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திரு சந்திரபாபுவின் தலைமையில், ஆந்திர பிரதேசம் 'தற்சார்பு இந்தியாவின்' புதிய சக்தி மையமாக உருவெடுத்து வருகிறது. ஆந்திரா முழுவதும் உற்பத்தி வேகமாக விரிவடைந்து வருகிறது. நிம்மலூருவில் இரவிலும் கண்காணிக்கக்கூடிய உயர்தர ஆலையின் தொடக்கம் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதற்கான மற்றொரு படியாகும். இந்த ஆலை இரவிலும் தெளிவாக  காணக்கூடிய சாதனங்கள், ஏவுகணை சென்சார்கள் மற்றும் காவல் பணிக்கு பயன்படும்  ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் திறனை வலுப்படுத்தும். இங்கே தயாரிக்கப்படும் உபகரணங்கள் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாரதத்தில் தயாரிக்கப்பட்ட தொழில் நுட்பங்களின் வலிமையை நாங்கள் ஏற்கனவே கண்டிருக்கிறோம்.

நண்பர்களே,

கர்னூலை நாட்டின் ட்ரோன் மையமாக மாற்ற ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ட்ரோன் தொழில்துறை மூலம், கர்னூல் மற்றும் ஆந்திர பிரதேசம் முழுவதும் பல புதிய எதிர்கால தொழில்நுட்பத் துறைகள் உருவாகும். நான் குறிப்பிட்டது போல, ஆபரேஷன் சிந்தூரின்போது ட்ரோன்களின் குறிப்பிடத்தக்க செயல்திறன் உலகை வியப்பில் ஆழ்த்தியது. வரவிருக்கும் காலங்களில், கர்னூல் ட்ரோன் துறையில் பாரதத்திற்கு ஒரு முக்கிய சக்தியாக மாறும்.

நண்பர்களே,

எங்கள் அரசின் முக்கிய நோக்கம் குடிமக்ள் சார்ந்த வளர்ச்சி! இதற்காக, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க தொடர்ந்து சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறோம். ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு இன்று முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் மருந்துகள், குறைந்த செலவில் சுகாதாரம், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ ஆயுள் காப்பீட்டு அட்டைகள் போன்ற முயற்சிகள் வாழ்க்கையை எளிதாக்குவதில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.

நண்பர்களே,

நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. திரு நாரா லோகேஷ் அவர்களின் தலைமையில், இங்குள்ள மக்கள் சரக்கு மற்றும் சேவை வரி சேமிப்பு விழா கொண்டாடுவதைக் காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் "சூப்பர் ஜிஎஸ்டி சூப்பர் சேமிப்பு" பிரச்சாரத்தையும் வெற்றிகரமாக நடத்துகிறீர்கள். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் ஆந்திர பிரதேச மக்கள் 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்புகள் இந்தக் காலகட்டத்தில் பண்டிகை மகிழ்ச்சியை அதிகரித்துள்ளன. ஆனால் எனக்கு ஒரு கோரிக்கையும் உள்ளது. இந்த ஜிஎஸ்டி சேமிப்பு விழாவை உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்ற  உணர்வுடன் கொண்டாடுவோம்!

நண்பர்களே,

ஒரு 'வளர்ச்சியடைந்த ஆந்திரா' மூலம் மட்டுமே நாம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய முடியும். மீண்டும் ஒருமுறை, அனைத்து புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்காக ஆந்திர பிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள். பாரத் மாதா கி ஜே! அந்த இரண்டு குழந்தைகள் சிறிது நேரமாக தங்கள் ஓவியங்களை உயர்த்தி வைத்திருக்கிறார்கள். எங்கள் சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர், அவர்களிடமிருந்து அவற்றைச் சேகரியுங்கள். ஆம், அவற்றைச் சேகரியுங்கள். இப்போது, என்னுடன் கூறுங்கள். பாரத் அன்னை வாழ்க! பாரத அன்னை வாழ்க! பாரத அன்னை வாழ்க!

மிக்க நன்றி!

(Release ID: 2180063)

***

SS/VK/KPG/KR


(रिलीज़ आईडी: 2188635) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam