பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியில் இம்மாதம் 8-ம் தேதி நான்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார் இந்த வந்தே பாரத் ரயில் சேவைகள் பல்வேறு மாநிலங்களில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன் பிராந்திய போக்குவரத்தை மேம்படுத்தி பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கிறது

Posted On: 06 NOV 2025 2:48PM by PIB Chennai

இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்க நடவடிக்கைகளின் ஒரு முக்கிய படியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, வாரணாசியில் இம்மாதம் 8-ம் தேதி காலை 8.15 மணிக்கு நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மக்களின் போக்குவரத்துத் தேவைகளை எளிதாகவும், விரைவாகவும், கூடுதல் வசதிகளுடன் நிறைவேற்றும் வகையில், உலகத்தரத்திலான ரயில்போக்குவரத்து சேவைகளை வழங்க இது வகை செய்கிறது. இந்தப் புதிய வந்தே பாரத் விரைவு ரயில்கள், எர்ணாகுளம் – பெங்களூரு, பனாரஸ் – கஜூராஹு, லக்னோ – சஹரான்பூர், ஃபிரோஸ்பூர் – தில்லி, ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்தப் புதிய ரயில் சேவைகள் பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதுடன் பிராந்திய போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தவும், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை நாடு முழுவதிலும்  ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.

தென்னிந்தியாவின் எர்ணாகுளம் – பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை பயண நேரத்தை 2 மணி நேரம் வரை குறைக்கிறது. இந்த ரயில் சேவை இவ்விரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வர்த்தக மையங்களை இணைப்பதுடன் தொழில்முறை சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான  வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே சுற்றுலா மற்றும்  பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதுடன் பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கு வழி வகுக்கிறது.

பனாரஸ் – கஜூராஹு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இந்த நகரங்களுக்கு இடையே நேரடி ரயில் போக்குவரத்துக்கான வழித்தடமாகவும், தற்போது செயல்பாட்டில் உள்ள சிறப்பு ரயில் சேவைகளுடன் ஒப்பிடுகையில், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பயண நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில், நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வாரணாசி, பிரயாக்ராஜ், சித்திரகூட் மற்றும் கஜூராஹு உள்ளிட்ட மதம் மற்றும் கலாச்சாரத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ளது. இந்தப் புதிய ரயில் சேவை நாட்டின் மதம் மற்றும் கலாச்சார சுற்றுலாவை வலுப்படுத்துவது மட்டுமின்றி மக்கள் புனித தளங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளவும் பயணிகள் விரைவாகவும், நவீன வசதிகளுடன் கூடிய பயண  அனுபவத்தைப் பெறும் வகையிலும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமான கஜூராஹுவிற்கு வசதியான பயணத்தையும் மேற்கொள்ள வகை செய்கிறது.

லக்னோ – சஹரான்பூர்,  இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை மூலம் ஒரு மணி நேர பயண நேரத்தை  சேமிக்க உதவுகிறது. இந்த வழித்தடத்தில்  இயக்கப்படும்  வந்தே பாரத் ரயில், லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பரேலி, மொராதாபாத், பிஜ்னோர் மற்றும் சஹரான்பூர் நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயன் அளிப்பதாக உள்ளது. ரூர்க்கி வழியாக ஹரித்துவார் புனித நகருக்கு ரயில் பயணத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பிரோஸ்பூர் – தில்லி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, இவ்விரு நகரங்களுக்கு இடையேயான பயண தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் நிறைவு செய்கிறது. இந்த சேவை பஞ்சாபில் உள்ள முக்கிய நகரங்களான பிரோஸ்பூர், பத்திண்டா, பாட்டியாலா போன்ற நகரங்களை தேசிய தலைநகருடன் இணைப்பதன் மூலம் ரயில்போக்குவரத்து சேவையை வலுப்படுத்த உதவுகிறது.

மத்திய மற்றும் மேற்கு உத்தரப்பிரதேச பகுதிகளில் நகரங்களுக்கு இடையேயான ரயில்போக்குவரத்து வசதியை விரைவாகவும், தடையின்றி மேற்கொள்வதற்கும் உறுதி செய்யும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது பிராந்திய மேம்பாடு மற்றும் ரயில்போக்குவரத்து இணைப்பிற்கான வசதியையும் மேம்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186908   

***

SS/SV/KPG/SH


(Release ID: 2187117) Visitor Counter : 7