பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் இது இரும்பு மனிதர் சர்தார் படேலின் இந்தியா, இது தனது பாதுகாப்பில் அல்லது சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது: பிரதமர்
Posted On:
31 OCT 2025 12:05PM by PIB Chennai
குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம் வரலாற்று சிறப்புமிக்கது என்றார். நாடு முழுவதும் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் பற்றி எடுத்துரைத்த அவர், இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் இதன் மூலம் புதிய இந்தியாவின் தீர்மானம் உறுதியாக உணரப்பட்டது என்றும் கூறினார். சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றும் சிறப்பு அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் மற்றும் தேசிய ஒற்றுமை தின நிகழ்வையொட்டி 140 கோடி மக்களுக்கும் பிரதமர் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்று ஒற்றுமை உறுதிமொழி எடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்த இதில் உறுதியேற்கப்பட்டதாக கூறினார். ஒற்றுமை நகரில், ஒற்றுமை வணிக வளாகமும், ஒற்றுமை தோட்டமும், ஒற்றுமை இழையின் அடையாளங்களாக விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலையும் குடிமக்கள் ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இது இந்த தருணத்தின் அவசியத் தேவை என்றும், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒற்றுமை தினத்தின் முக்கியமான செய்தி என்றும் கூறினார். சர்தார் படேல் அனைத்திற்கும் மேலாக நாட்டின் இறையாண்மையை முன் வைத்தார் என்று அவர் கூறினார். இருப்பினும் அவரது மறைவிற்கு பின் வந்த அரசுகள் இதே அளவு முக்கியத்துவத்தை நாட்டின் இறையாண்மைக்கு அளிக்காதது வருந்தத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார். காஷ்மீரில் செய்த தவறுகள், வடகிழக்கின் சவால்கள், நாடு முழுவதும் பரவிய நக்சல்-மாவோயிச தீவிரவாதம் ஆகியவை இந்தியாவின் இறையாண்மைக்கு நேரடி அச்சுறுத்தல்களாக இருந்தன. அவர்களின் பலவீனமான கொள்கைகள் காரணமாக காஷ்மீரின் ஒருபகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தியது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவிற்கு யாராவது சவால் விட துணிந்தால் எதிரிகளின் பிராந்தியத்திற்குள்ளும் சென்று தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்ததாக கூறினார். இந்தியாவின் பதிலடி எப்போதும் வலுவானதாகவும், உறுதியாகவும் இருக்குமென்று அவர் தெரிவித்தார். இரும்பு மனிதர் சர்தார் படேலின் இந்தியா இது. தனது பாதுகாப்பு மற்றும் கௌரவத்தில் இது ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று இந்தியாவின் எதிரிகளுக்கு இது ஒரு செய்தியாக உள்ளது என்று அவர் கூறினார். தேச பாதுகாப்பு தளத்தில், நக்ஸல்-மாவோயிச தீவிரவாதத்தின் முதுகெலும்பை முறித்தது கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட மகத்தான சாதனை என்று பிரதமர் தெரிவித்தார்.
140 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசும்போது அவர்களின் வார்த்தைகள் இந்தியாவின் வெற்றி பிரகடனமாக மாறும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒற்றுமை என்பதை உன்னதமான தீர்மானமாக நாட்டுமக்கள் ஏற்கவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதுவே சர்தார் படேலுக்கு செய்யும் உண்மையான மரியாதை என்று அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற தீர்மானத்தை வலுப்படுத்துவார்கள் என்றும் வளர்ச்சியடைந்த தற்சார்புள்ள இந்தியா என்ற கனவை நனவாக்குவார்கள் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார். இந்த உணர்வுடன் சர்தார் படேலின் பாதங்களில் மீண்டும் ஒருமுறை அவர் மரியாதை செலுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184491
***
SS/SMB/AS/SH
(Release ID: 2184834)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam