விவசாயத்துறை அமைச்சகம்
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் தரத்திலான விதை பதனப்படுத்தும் ஆலைகள் வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்
Posted On:
27 OCT 2025 4:06PM by PIB Chennai
சிறு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு தரமான விதைகள் சென்றடையச் செய்ய வேண்டியதன் அவசியத்தை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் உள்ள புசா வளாகத்தில் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய விதைகள் நிறுவனத்தின் காய்கறி மற்றும் பழவகைகளுக்கான விதை பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் பிரிவை அவர் இன்று தொடங்கி வைத்தார். பெரேலி, தார்வாட், ஹசன், சூரத்கர் மற்றும் ராய்ச்சூர் ஆகிய 5 இடங்களில் தேசிய விதைகள் நிறுவனத்தின் விதை பதனப்படுத்துதல் ஆலையை காணொலி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.
விதை மேலாண்மை 2.0 நடைமுறையையும் விவசாயிகளுக்கான ஆன்லைன் விதை முன்பதிவு செய்யும் இணையதளத்தையும் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தொடங்கி வைத்தார். இந்த இணையதளத்தின் வாயிலாக விவசாயிகள் தரமான விதைகளை கொள்முதல் செய்ய முடியும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் புதிய ஆலைகள் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிடும் என்று கூறினார். முளைப்புத் திறன் இல்லாத தரம் குறைந்த விதைகள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பெறப்பட்டுள்ளதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் கூறினார்.
புதுதில்லியில் புசாவில் உள்ள பீஜ்பவனில் உள்ள காய்கறி விதைகள் பதனிடும் ஆலை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு டன் விதைகளைப் பதனிடும் திறன் கொண்டதாகும். மற்ற 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகள் ஒவ்வொன்றும், தலா ஒரு மணி நேரத்திற்கு நான்கு டன் விதைகள் பதனிடும் திறன் கொண்டவையாகும். நாடுமுழுவதும் தரமான விதை உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உயர் தரத்திலான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182930
***
SS/SV/KPG/SH
(Release ID: 2183020)
Visitor Counter : 9