நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா: புதுதில்லியில் மத்திய அமைச்சர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு
நிதியமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 தயாரிப்புகளின் கண்காணிப்பு நடவடிக்கைகள், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் பயன்கள் இறுதியாக நுகர்வோரைச் சென்றடைவதை எடுத்துக் காட்டுகிறது மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
Posted On:
18 OCT 2025 5:35PM by PIB Chennai
“சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறைப்பு, இணக்க நடைமுறைகளை எளிதாக்குதல், வரி விகித அடுக்குகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து இரண்டாகக் குறைத்தல் மற்றும் வகைப்பாடு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் போன்ற அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் பண்டிகைக் காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுதில்லியில் இன்று (அக்டோபர் 18) ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா குறித்து, மத்திய அமைச்சர்கள் திருமதி நிர்மலா சீதாராமன், திரு பியூஷ் கோயல், திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக செயல்படுத்தப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார்.
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நவராத்திரி பண்டிகையின் முதல் நாளிலிருந்து அமலுக்கு வந்துள்ளன என்றும், மக்கள் இந்த வரிக் குறைப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பயனடைந்திருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"ஜிஎஸ்டி வரி முறைக்கான பாதையை அமைத்தது, அதனை செயல்படுத்தியதாக அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி ஜிஎஸ்டி முறையை அமல்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை என்று அவர் குறை கூறினார்.
இன்று ஜிஎஸ்டி வரி முறையில் திருத்தம் கொண்டு வருவது என்றில்லாமல், மாறாக மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்ததாகவும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் அரசிற்கும் இடையேயான ஒத்துழைப்பின் பிரதிபலிப்பு இது என்றும் அவர் கூறினார்."
"நுகர்வோரின் நலன்களை கருத்தில் கொண்டு வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்ட்டுதலின் பேரில் இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் மேலும் கூறினார், "இந்த வரி குறைப்பு செப்டம்பர் 22 - ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அனைத்து பொருட்களின் மீது திருத்தப்பட்ட வரி விகிதங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மண்டல அலுவலகங்களிலிருந்து தகவல்கள் கிடைத்து வருவதாக அவர் கூறினார். இருப்பினும், திருத்தப்பட்ட வரி கட்டமைப்பின் நன்மைகள் இறுதி நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் 54 பொருட்களின் மீதான விலைகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்."
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் செப்டம்பர் 22 - ம் தேதி முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதன் மூலம் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையை சிறப்புறச் செய்ததற்காக பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இந்த சீர்திருத்தம் நாடு முழுவதும் சாமானிய மக்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகர்களுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை இது என்று கூறிய அமைச்சர், மறைமுக வரி முறை 140 கோடி இந்தியர்களைப் பாதிக்கிறது என்றும், நேரடி மற்றும் மறைமுக வரி நடவடிக்கைகள் மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான முடிவு முன்னெப்போதும் இல்லாதது என்றும், கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 1 - ம் தேதி வருமான வரியில் அறிவிக்கப்பட்ட நிவாரணம் சேமிப்பை ஊக்குவிப்பதற்கும், மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் உதவிடும் என்று அவர் எடுத்துரைத்தார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், நிதியமைச்சர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விரிவான வரி சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இது செப்டம்பர் 3, 2025 அன்று உச்சத்தை அடைந்ததாகவும் திரு பியூஷ் கோயல் கூறினார்.
இந்தியாவின் மின்னணுவியல் துறைக்கான சூழல் அமைப்பின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், நுகர்வு, முதலீடு மற்றும் உற்பத்தியில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் நேர்மறையான தாக்கம் குறித்தும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நுகர்வோர் தேவை, கொள்கை நிலைத்தன்மை மற்றும் வேகமாக விரிவடையும் உற்பத்தித் தளத்தால் இயக்கப்படும் வலுவான அடிப்படைகளை இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நிரூபித்து வருவதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு நவராத்திரி காலத்தில் மின்னணு சாதனங்களின் விற்பனை சாதனை படைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட 20–25% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டிவி, கணினி திரைகள் மற்றும் சலவை இயந்திரங்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் குளிர்சாதனங்கள் வரை அனைத்து முக்கிய சில்லறை விற்பனைகளும் முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவை பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக, 85 அங்குல தொலைக்காட்சித் திரைகள் முழுமையாக விற்பனையாகியுள்ளது என்றும், மேலும் பல குடும்பங்கள் புதிய சாதனங்களை வாங்கியுள்ளதாகவும், இது அதிகரித்து வரும் நுகர்வோரின் நம்பிக்கை மற்றும் வாங்கும் சக்தியை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பொருளாதாரக் கட்டமைப்பில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக உணவு பணவீக்கத்தைக் குறைப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளன என்று மத்திய அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் தேவைகள் இந்தியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் இரட்டை இலக்க வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், நாடு முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளது என்றும் திரு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180743
*****
AD/SV/SG
(Release ID: 2180796)
Visitor Counter : 12