குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளை முன்னிட்டு பீகாரில் உள்ள சிதாப் டியாராவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு சிபி ராதாகிருஷ்ணன் அவருக்கு மரியாதை செலுத்தினார்

ஜெயபிரகாஷ் நாராயணின் 'முழு புரட்சி' என்பது ஆயுதங்களின் புரட்சி அல்ல, கருத்துக்களின் புரட்சி - திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

Posted On: 11 OCT 2025 3:39PM by PIB Chennai

பாரத ரத்னா லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான சிதாப் டியாராவில் அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சிபி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.

லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக குடியரசுத் துணைத் தலைவர் பீகாருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். பாட்னாவில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த திரு ராதாகிருஷ்ணனை, பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், பீகார் அரசின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பூர்வீக இல்லமான சிதாப் டியாராவுக்குச் சென்று லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தேசிய நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கிராமத்தில் உள்ள லோக் நாயக் ஸ்மிருதி பவனையும், நூலகத்தையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவரும், உண்மையான மக்களின் நாயகரும், நீதி, ஜனநாயகத்திற்காக அயராது போராடியவருமான லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த இடமான சீதாப் டியாராவின் புனித மண்ணில் நிற்பது தனக்கு கிடைத்த மரியாதை என்று கூறினார்.

லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனின் 123-வது பிறந்தநாள் வெறும் ஒரு சிறந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் மட்டுமல்ல எனவும், லட்சியத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் அல்லது ஜே.பி. என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல எனவும் இந்திய ஜனநாயகத்தின் மனசாட்சியைக் காப்பவராகவும் இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரப் போராட்டம் தொடங்கி 1970-களில் 'முழு புரட்சி'க்கான அழைப்பு வரை, ஜெயபிரகாஷ் நாராயணின் வாழ்க்கை, தைரியம், எளிமை, தியாகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது என்று அவர் கூறினார்.

லோக் நாயக்கிற்கு அதிகார ஆசை இல்லை என்றும், அவருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவிகளை அவர் நிராகரித்தார் என்றும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாறாக மக்கள் மூலம் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது தான் தமது ஆர்வம் என்ற லோக் நாயக்கின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை அரசியலில் ஜெயபிரகாஷ் நாராயணின் ஆழ்ந்த நம்பிக்கையை இவை பிரதிபலிக்கின்றன என்றார்.

லோக் நாயக்கின் சம்பூர்ண கிராந்தி (முழு புரட்சி) அழைப்பு ஆயுதக் கிளர்ச்சி அல்ல எனவும், மாறாக கருத்துக்களின் புரட்சி என்றும் அவர் கூறினார். தூய்மையான நிர்வாகம், அதிகாரம் பெற்ற ஏழைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தேசத்தை அவர் கற்பனை செய்ததாகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். லோக் நாயக்கின் அழைப்பால் ஈர்க்கப்பட்டு, கோயம்புத்தூரில் முழுப் புரட்சி இயக்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளராகப் பத்தொன்பது வயதில் தாம் பணியாற்றியதாக திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நகரும் வேளையில், துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை உருவாக்க லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனின் கொள்கைகளையும் மதிப்புகளையும் உள்வாங்குவது அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

***

(Release ID: 2177782)

AD/PLM/RJ


(Release ID: 2177881) Visitor Counter : 9