தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சமூகப் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக இந்தியாவிற்கு 2025-ம் ஆண்டுக்கான மதிப்புமிகு ஐஎஸ்எஸ்ஏ விருது வழங்கப்பட்டுள்ளது
Posted On:
03 OCT 2025 10:50AM by PIB Chennai
மலேசியாவின் கோலாலம்பூரில் இன்று (03.10.2025) நடைபெற்ற உலக சமூகப் பாதுகாப்பு மன்றம் 2025-ல் 'சமூகப் பாதுகாப்பில் சிறந்த சாதனை'க்கான மதிப்புமிகு சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கம் விருது 2025-ஐ இந்தியா பெற்றுள்ளது. இந்நிகழ்வில் விருதை பெற்றுக்கொண்டு உரையாற்றிய மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இடம் பெற்ற மக்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 19% ஆக இருந்தது என்றும் இது 2025-ல் 64.3% அதிகரித்து 940 மில்லியனாக உள்ளது என்றும் கூறினார். இது சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த விருது நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உலகளாவிய சமூகப் பாதுகாப்பை நோக்கிய எங்கள் பயணத்தை வடிவமைத்த அந்த்யோதயா எனும் வழிகாட்டும் கொள்கைக்கும் ஒரு சான்றாகும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
சமூகப் பாதுகாப்புத் துறையில் மக்கள் உள்ளடக்கம் அதிகரித்த பின், சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் சபையில் இந்தியாவின் பங்கு முப்பதை (30) எட்டியுள்ளது. இது எந்த நாட்டிற்கும் இல்லாத அதிகபட்ச வாக்குப் பங்காகும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, உலக அளவில் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் இந்தியாவின் அபரிமிதமான முன்னேற்றத்தை அங்கீகரிக்கிறது. இந்த விருது வழங்கும் விழாவில் 163 நாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் அதிகமான சமூகப் பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த விருதைப் பெற்ற ஐந்தாவது நாடான இந்தியா, சமூகப் பாதுகாப்புத் துறையில் உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடுகளுடன் இணைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174341
*****
AD/SMB/SG
(Release ID: 2174367)
Visitor Counter : 14