உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, காதி காட்சிக் கூடத்திற்கு சென்று காதி பொருட்களை வாங்கினார்

Posted On: 02 OCT 2025 4:47PM by PIB Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று புதுதில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி இந்தியா காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டார். திரு ஷா காதிப் பொருட்களை வாங்கி ஆன்லைனில் பணம் செலுத்தினார்.

மகாத்மா காந்தி இந்தியாவின் ஆன்மாவை அங்கீகரித்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிற்க சாமானிய மக்களை விழிப்படையச் செய்தார் என்று இந்த நிகழ்வில் திரு அமித் ஷா கூறினார்.  காதி, சுதேசி ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க கருத்துகளும்  இந்த விழிப்புணர்வில் தோன்றின என்றும் இதன் மூலம் சுதந்திர இயக்கத்தை விரைவுபடுத்தியது மட்டுமின்றி, நாட்டில் இருந்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் மகாத்மா காந்தி வெளிச்சத்தைக் கொண்டு வந்தார் என்று அவர் கூறினார்.

 

நீண்ட காலமாக மறக்கப்பட்டிருந்த காதி, சுதேசி ஆகிய கருத்துகளை மீட்டெடுக்க, திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது அறிமுகப்படுத்திய இயக்கம் காரணமாக காதி மீண்டும் மக்களிடையே பொதுவான பயன்பாட்டிற்குரிய பொருளாக மாறியுள்ளது என்று உள்துறை அமைச்சர் கூறினார். திரு மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில், காதி மற்றும் கிராமப்புறத் தொழில் பொருட்களின் விற்பனை ஐந்து மடங்கு அதிகரித்து ரூ. 33,000 கோடியிலிருந்து ரூ. 1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் குறைந்தது 5,000 ரூபாய் மதிப்புள்ள காதி பொருட்களை வாங்க உறுதிபூண வேண்டும் என்றும் இது லட்சக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும், அவர்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட காதி பயன்பாட்டை ஊக்குவித்தல், சுதேசியைத் தழுவுதல் ஆகிய இயக்கங்களை நமது இயல்பின் ஒரு பகுதியாக மாற்றி, அவற்றை நமது எதிர்கால சந்ததியினருக்குக் கடத்த வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174187

 

************

SS/SMB/SH


(Release ID: 2174258) Visitor Counter : 4