பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற பாரம்பரிய சங்கீத வித்வான் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
02 OCT 2025 8:55AM by PIB Chennai
புகழ்பெற்ற பாரம்பரிய சங்கீத வித்வான் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை வாழ்நாள் முழுவதும் அவர் போற்றி பாதுகாத்து வந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காசியின் பாரம்பரியங்களில் ஆழமாக வேரூன்றிய இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் பனாரஸ் காரனா வகையில் புலமை பெற்ற தலைசிறந்த மேதைகளுள் பண்டிட் அவர்களும் ஒருவர். அவரது இசை, நகரத்தின் இசை பாரம்பரியத்தின் சாராம்சத்தை முன்னெடுத்துச் சென்றது. நகரத்தின் இசை பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் காசியை சேர்ந்த எண்ணிலடங்காத மாணாக்கருக்கு அவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். வாரணாசியில் உள்ள அவரது இல்லம் கற்றல், பத்தி மற்றும் சிறந்த கலையின் மையமாகத் திகழ்ந்தது.
பண்டிட் உடனான தனது தனிப்பட்ட தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், குறிப்பாக 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில், தனது முன்மொழிபவராக பண்டிட் இருந்தபோது, அவரது ஆசிகளையும் ஆதரவையும் பெற்ற தனது பாக்கியத்தைக் குறிப்பிட்டார். இது நகரத்தின் மீதும் அதன் வளர்ந்து வரும் பாரம்பரியத்தின் மீதும் பண்டிட் கொண்டிருந்த ஆழமான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
பண்டிட்-ன் அன்பு மற்றும் ஆசிகளை தனிப்பட்ட பாக்கியமாகக் குறிப்பிட்டு திரு மோடி அவற்றைப் பற்றி அடிக்கடி பேசியுள்ளார். அவர்களின் உறவு இந்தியாவின் பாரம்பரியங்கள், ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மாற்றகரமான சக்தி ஆகியவற்றின் மீதான பகிரப்பட்ட மரியாதையை பிரதிபலிக்கிறது.
இந்திய பாரம்பரிய இசைக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்பிற்காக, தற்போதைய அரசால் 2020-ம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, பண்டிட் சன்னுலால் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்டது.
பண்டிட்-ன் மாண்புகள், பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு மோடி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி தெரிவித்திருப்பதாவது:
“புகழ்பெற்ற பாரம்பரிய சங்கீத வித்வான் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் செழிப்பிற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பாரம்பரிய இசையை மக்களிடம் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்திய மரபுகளை நிலைநாட்டவும் அவர் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை வழங்கினார். அவரது அன்பையும் ஆசிகளையும் எப்போதும் பெற்றிருப்பது எனக்கு அதிர்ஷ்டம். 2014-ம் ஆண்டில், வாரணாசி தொகுதிக்கு அவர் எனது முன்மொழிவாளராகவும் இருந்தார். இந்தத் துயரமான நேரத்தில் அன்னாரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”
(Release ID: 2173986)
***
SS/BR/SH
(Release ID: 2174174)
Visitor Counter : 6