பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சியின் 126-வது அத்தியாயத்தில், 28.09.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 28 SEP 2025 11:48AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் நாமெல்லோரும் ஒன்றிணைவது, உங்களனைவரிடமிருந்தும் கற்பது, நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது, உண்மையிலேயே மிகவும் சுகமான அனுபவத்தை அளிக்கின்றது. பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் விஷயங்களைப் பகிர்ந்து மனதின் குரலை நாம் ஒலிக்கச் செய்து வருகையில், இந்த நிகழ்ச்சி 125 பகுதிகளைக் கடந்துவிட்டது பற்றித் தெரியவேயில்லை. இன்று நமது இந்த நிகழ்ச்சியின் 126ஆவது பகுதி, இன்றைய தினத்தோடு சில சிறப்பம்சங்களும் இணைந்திருக்கின்றன. இன்று பாரதத்தின் இரண்டு மகத்தான ஆளுமைகளின் பிறந்த நாளாகும். நான் தியாகி பகத்சிங், லதா தீதி பற்றித் தான் குறிப்பிடுகிறேன்.

          நண்பர்களே, உயிர்த்தியாகி பகத்சிங், பாரதவாசிகள் அனைவருக்கும், குறிப்பாக தேசத்தின் இளைஞர்களின் ஊக்கத்தின் ஊற்று. அஞ்சாமை என்பது அவருடைய இயல்பின் ஒவ்வொரு கூறிலும் நிறைந்திருந்தது. தேசத்திற்காக தூக்குமேடை ஏறும் முன்பாக பகத்சிங் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். நீங்கள் என்னையும் என்னுடைய சகாக்களையும், போர்க்கைதிகளைப் போல நடத்த வேண்டும் என்றும், ஆகையால் எங்கள் உயிர் தூக்கு மேடையில் அல்ல, துப்பாக்கியால் சுடப்பட்டு போக்கப்பட வேண்டும் என்று அவர் ஆங்கிலேயர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். பகத்சிங் அவர்கள் மக்களின் துயரின் பொருட்டு மிகவும் புரிந்துணர்வு உடையவராக இருந்தார், அவர்கள் உதவிக்கு எப்போதும் முன்வந்தார். நான் உயிர்த்தியாகி பகத்சிங் அவர்களுக்கு மரியாதைகலந்த சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

          நண்பர்களே, இன்று லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளும் ஆகும். பாரதநாட்டுக் கலாச்சாரத்திலும் இசையிலும் பிரியம் உடைய எவரும் அவருடைய பாடல்களைக் கேட்டு, உணர்ச்சிப்பெருக்கில் நனையாமல் இருக்க முடியாது. அவருடைய பாடல்களில் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அனைத்தும் இருந்தன. அவர் பாடிய தேசபக்திப் பாடல்கள் மக்களுக்கு உத்வேகம் அளித்தன. பாரதத்தின் கலாச்சாரத்தோடும் கூட அவருக்கு ஆழமான பிணைப்பு இருந்தது. நான் லதா தீதிக்கும் கூட என் இதயப்பூர்வமான நினைவாஞ்சலிகளைத் தெரிவிக்கிறேன். நண்பர்களே, லதா தீதி, கருத்தூக்கம் பெற்ற மகத்தான ஆளுமைகளில் வீர் சாவர்க்கரும் ஒருவர், அவரை இவர் தாத்யா என்று அழைப்பார். வீர் சாவர்க்கர் அவர்களின் பல பாடல்களையும் கூட தனது குரலால் இழைத்திருக்கிறார்.

  • சகோதரி லதா அவர்களுக்கும் எனக்கும் ஒரு அன்புறவு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மறக்காமல் அவர் எனக்கு ராக்கியை அனுப்பி வைப்பார். மராட்டி மெல்லிசையின் மகத்தான ஆளுமையான சுதீர் ஃபட்கே அவர்கள் முதன்மையாக லதா தீதியை எனக்கு அனுபவம் செய்து வைத்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுதீர் அவர்களால் இசையமைக்கப்பட்டு, உங்களால் பாடப்பட்ட ‘ஜோதி கலஷ் சல்கே’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் அப்போது லதா தீதியிடம் கூறினேன்.

          நண்பர்களே, நீங்களும் என்னோடு கூட இதன் ஆனந்தத்தைப் பருகுங்கள். (Audio)

          எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியின் இந்த வேளையில் நாம் சக்தியை உபாசனை செய்கிறோம். நாம் பெண்சக்தியைக் கொண்டாடுகிறோம். வர்த்தகம் தொடங்கி விளையாட்டுக்கள் வரை, கல்வி தொடங்கி அறிவியல் வரை எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, தேசத்தின் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தங்களுடைய கொடியை நாட்டி வருகின்றார்கள். கற்பனைகூட செய்து பார்க்க கடினமான சவால்களையும் அவர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக 8 மாதங்கள் வரை உங்களால் கடலிலே இருக்கமுடியுமா, காற்றின் வேகத்திற்கேற்ப முன்னேறிச் செல்லும் பாய்மரப்படகிலே, எப்போது வேண்டுமானாலும் மோசமாகக்கூடிய வானிலை கொண்ட சமுத்திரத்திலே, 50,000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமா என்று நான் உங்களிடம் வினா எழுப்பினால் உங்கள் விடை என்னவாக இருக்கும்!! அப்படிச் செய்யும் முன்பாக நீங்கள் ஆயிரம் முறை யோசித்துப் பார்ப்பீர்கள், ஆனால் பாரதீய கடற்படையின் இரண்டு சாகஸம் நிறைந்த அதிகாரிகள், நாவிகா சாகர் பரிக்ரமா மூலம் இப்படிச் செய்து காட்டியிருக்கின்றார்கள். மனவுறுதி, நெஞ்சுரம் என்றால் என்ன என்பதை இந்த இரண்டு அதிகாரிகளும் இணைந்து நிரூபித்திருக்கின்றார்கள். ஒருவர் லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா, மற்றவர் லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா. இந்த இரண்டு அதிகாரிகளும் இப்போது நம்முடன் தொலைபேசியில் இணைந்திருக்கின்றார்கள்.

பிரதமர் – ஹெலோ.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – ஹெலோ சார்.

பிரதமர் – வணக்கம் ஜி.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – வணக்கம் சார்.

பிரதமர் – என்னுடன் லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னாவும், லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபாவும் இணைந்திருக்கிறார்கள், சரி தானே?

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா, ரூபா – ஆமாம் சார் ரெண்டு பேருமே இருக்கோம். சார்.

பிரதமர் – சரி உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்காரம், வணக்கம்.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – வணக்கம் சார்.

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – நமஸ்காரம் சார்.

பிரதமர் – உங்க ரெண்டு பேத்தைப் பத்தியும் நாட்டுமக்கள் தெரிஞ்சுக்க விரும்பறாங்க, நீங்களே சொல்லுங்க.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – சார் நான் லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா. நான் இந்திய கப்பற்படையோட ஏற்பாட்டியல் துறையைச் சேர்ந்தவ, நான் கப்பற்படையில 2014ஆம் ஆண்டு இணைஞ்சேன் சார், நான் கேரளத்தின் கோழிக்கோட்டிலேர்ந்து வர்றேன். எங்கப்பா இராணுவத்தில இருந்தாரு, எங்கம்மா இல்லத்தரசிங்க. என் கணவரும் கூட இந்திய கப்பற்படையில அதிகாரியா இருக்காரு சார், என்னோட சகோதரி தேசிய மாணவர் படையில வேலை பார்த்திட்டு இருக்கா.

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – ஜய் ஹிந்த் சார், நான் லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா பேசறேன், நான் கப்பற்படையில 2017ஆம் ஆண்டு கப்பற்படை படைக்கலக் கண்காணிப்புப் பிரிவுல சேர்ந்தேன். எங்கப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவரு, எங்கம்மா புதுச்சேரியைச் சேர்ந்தவங்க. எங்கப்பா இந்திய விமானப்படையில பணியாற்றினாங்க, உண்மையில இராணுவத்தில சேரணுங்கறதுக்கான உத்வேகத்துக்கு எங்கப்பா தான் காரணம். எங்கம்மா இல்லத்தரசியா இருக்காங்க.

பிரதமர் – சரி தில்னா, ரூபா, உங்க ரெண்டு பேர் கிட்டேர்ந்தும் நான் தெரிஞ்சுக்க விரும்பறது என்னென்னா, சாகர் பரிக்ரமாவில உங்க அனுபவம் எப்படி இருந்திச்சுங்கறதை நாட்டுமக்கள் கிட்ட பகிர்ந்துக்கணுங்கறது தான். மேலும் இது ஒண்ணும் சுலபமான விஷயம் இல்லை, பல கடினங்கள் வரும், பல இடர்களை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும்னு நான் புரிஞ்சுக்கறேன்.

  • கமாண்டர் தில்னா – ஆமாம் சார். நம்ம வாழ்க்கையையே மாத்தி அமைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கையில ஒருமுறை தான் கிடைக்கும் சார். இந்த உலகம் சுற்றி வருதல்ங்கறது எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சார், இதை இந்திய கப்பற்படையும், இந்திய அரசாங்கமும் தான் அமைச்சுக் கொடுத்தாங்க. இந்தப் பயணத்தில நாங்க சுமார் 47,500 கிலோமீட்டர் தூரம் படகுல பயணிச்சோம். நாங்க 2024ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியன்னைக்கு கோவாவை விட்டுப் புறப்பட்டு, 2025ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதியன்னைக்குத் திரும்பி வந்தோம், இந்தப் பயணத்தை நாங்க நிறைவு செய்ய நாங்க எடுத்துக்கிட்டது 238 நாட்கள் சார், இந்த 238 நாட்கள்லயும் நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் அந்தப் படகுல இருந்தோம் சார்.

பிரதமர் – அம்மாடியோவ்!!

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – அப்புறம் சார், இந்தப் பயணத்தை மேற்கொள்ள நாங்க மூன்று ஆண்டுகள் தயாரிப்புகள்ல ஈடுபட்டோம், திசையறிதல் தொடங்கி தகவல்தொடர்பு, அவசரகாலக் கருவிகளை எப்படி இயக்குவது, எப்படி டைவிங் செய்வது, படகுல ஏதாவது அவசரநிலை ஏற்பட்டாலோ, மருத்துவ அவசரநிலை உண்டானாலோ எப்படி அதை சமாளிக்கறது, இது எல்லாம் பத்தி எங்களுக்கு இந்திய கப்பற்படை பயிற்சி அளிச்சாங்க சார். மேலும் இந்தப் பயணத்திலேயே மிகவும் நினைவில் கொள்ளத்தக்க விஷயம்னு சொன்னா, அது நம்ம பாரதத்தோட கொடியை, பாயிண்ட் நெமோவில பறக்கவிட்டதுதான் சார். சார் இந்த பாயிண்ட் நெமோங்கறது உலகத்திலேயே மிகவும் தொலைவான இடத்தில இருக்கு, அதுக்கு இருக்கறதிலேயே பக்கத்தில யாராவது மனிதன் இருக்காருன்னு சொன்னா, அவரு சர்வதேச விண்வெளி நிலையத்தில தான் இருக்காரு, அந்த இடத்துக்கு பாய்மரப்படகுல பயணிச்ச இந்திய நாட்டைச் சேர்ந்த, முதல் மனிதர்கள், ஆசியப்பகுதியின் முதல் மனிதர்கள், உலகின் முதல் மனிதர்கள்னா அது நாங்க தான் சார், இது எங்களுக்கு பெருமிதமான விஷயம் சார்.

பிரதமர் – அடேங்கப்பா, பலப்பல நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – தேங்க்யூ சார்.

பிரதமர் – உங்க சகா ஏதோ சொல்ல விரும்பறாங்க போலிருக்கே!!

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – சார், பாய்மரப்படகுல உலகத்தைச் சுத்தி வந்தவங்களோட எண்ணிக்கைன்னு பார்த்தா, எவரஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிச்சவங்களை விட ரொம்பக் குறைவு. மேலும் பாய்மரப்படகுல தனியா சுத்தி வந்தவங்கன்னா, அவங்க எண்ணிக்கை விண்வெளிக்குப் போனவங்களோட எண்ணிக்கையை விடவும் ரொம்பவே குறைவு.

பிரதமர் – அட, இத்தனை சிக்கலான பய்ணத்துக்கு ரொம்பவே குழுப்பணி அவசியம், அங்க குழுவுல நீங்க ரெண்டு அதிகாரிகள் மட்டும் இருந்திருக்கீங்க. நீங்க இதை எப்படி சமாளிச்சீங்க?

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – ஆமாம் சார், இப்படிப்பட்ட பயணத்தில நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா உழைக்க வேண்டியிருந்திச்சு, லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா சொன்னா மாதிரி, இதை சாதிக்கறதுக்கு ரெண்டு பேர் மட்டுமே இருந்தோம், நாங்க தான் படகை ரிப்பேர் செய்யறவங்க, என்ஞ்சின் மெக்கானிக்கும் நாங்க தான். மேலும் பாய்மரத்தை சமாளிப்பது, மருத்துவ உதவியாளர், சமையல்காரங்க, சுத்தம் செய்யறவங்க, டைவ் செய்யறவங்க, திசையறியறவங்க, எல்லாத்தையுமே நாங்களே செய்துக்க வேண்டியிருந்திச்சு. இதை சாதிக்கறதுக்கு இந்திய கப்பற்படையோட மிகப்பெரிய பங்களிப்பு இருந்திச்சு. எங்களுக்கு அனைத்துவிதமான பயிற்சியும் கொடுக்கப்பட்டிச்சு. ஆக்சுவலா சார், நாங்க நான்கு ஆண்டுகளா ஒண்ணா கடல்பயணம் மேற்கொண்டு வர்றோம், எங்களுக்கு பரஸ்பர பலங்கள் பலவீனங்கள் பத்தி நல்லாத் தெரியும். ஆகையினால, எங்க படகுல இருந்த கருவிகள் பழுதாகலைன்னா, அதுக்குக் காரணம் எங்களோட குழுவா செயல்படக்கூடிய உணர்வு தான்னு நான் எல்லார் கிட்டயும் சொல்லுவேன்.

பிரதமர் – நல்லது, பருவநிலை மோசமாகும் போது, ஏன்னா கடல் உலகம் எப்படிப்பட்டதுன்னா, எப்ப பருவநிலை எப்படி இருக்கும்னு சொல்லமுடியாது இல்லையா, அந்தச் சூழலை நீங்க எப்படி கையாண்டீங்க?

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – சார், எங்க பயணத்தில மோசமான சவால்கள் நிறைய இருந்திச்சு. குறிப்பா தென்கடல் பகுதியில எப்பவுமே பருவநிலை மோசமா இருக்கும். நாங்க மூன்று சூறாவளிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திச்சு சார், எங்க படகு வெறும் 17 மீட்டர் நீளமானது, இதோட அகலம் வெறும் 5 மீட்டர் தான். சில வேளைகள்ல அலைகள்னு சொன்னா, மூன்று அடுக்கு கட்டிடம் உயரத்துக்கு வரும் சார், மேலும் நாங்க ஏகப்பட்ட வெப்பம், ஏகப்பட்ட குளிரை சமாளிக்க வேண்டியிருந்திச்சு சார், அண்டார்டிகாவுல நாங்க பயணிச்சுட்டு இருந்தப்ப, வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஷியஸா இருந்திச்சு, காத்து மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில வீசிட்டு இருந்திச்சு, இந்த இரண்டையும் நாங்க எதிர்கொள்ள வேண்டி வந்திச்சு. குளிர்லேர்ந்து தற்காத்துக்க நாங்க 6லேர்ந்து 7 அடுக்குகள் உடைகளை ஒண்ணா அணிஞ்சோம், மொத்த தென்கடல் பகுதியில பயணிச்ச வேளையில இப்படி 7 அடுக்கு உடைகளை அணிஞ்சுதான் பயணிச்சோம் சார். சில வேளைகள்ல நாங்க கேஸ் அடுப்பு மூலமா எங்க கைகளுக்கு சூடு ஏத்திக்குவோம் சார், சில வேளைகள்ல, சுத்தமா காத்தே வீசாத போது, நாங்க கப்பற்பாயை கீழ இறக்கி மெதுவா பயணிச்சோம். இந்த மாதிரியான சூழ்நிலைகள் தான் எங்க பொறுமையை சோதிக்கற மாதிரி இருக்கும்.

பிரதமர் – எப்படியெல்லாம் கஷ்டங்களை எதிர்கொள்றாங்க நம்ம நாட்டுப் பெண்கள்னு கேட்கும் போது மக்களுக்கு ஏக ஆச்சரியமா இருக்கும். சரி இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, நீங்க பல்வேறு நாடுகள்ல தங்கியிருப்பீங்க, அங்க உங்களுக்குக் கிடைச்ச அனுபவம் என்ன, பாரதநாட்டுப் பெண்கள் ரெண்டு பேரை பார்க்கும் போது, அவங்க எப்படி உணர்ந்தாங்க, சொல்லுங்களேன்!!

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – சரி சார், எங்களுக்கு நல்ல அனுபவமா இருந்திச்சு, நாங்க எட்டு மாதங்கள்ல நான்கு இடங்கள்ல தங்கினோம், ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, போர்ட் ஸ்டேன்லி மற்றும் தென்னாப்பிரிக்கா சார்.

பிரதமர் – ஒவ்வொரு இடத்திலயும் சராசரியா எத்தனை நாள் தங்க வேண்டியிருந்திச்சு?

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – சார் நாங்க 14 நாட்கள் தங்கினோம் சார் ஒவ்வொரு இடத்திலயும்.

பிரதமர் – ஒவ்வொரு இடத்திலயும் 14 நாட்களா?

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – கரெக்ட் சார். மேலும் சார், நாங்க உலகத்தோட ஒவ்வொரு மூலையிலயும் இந்தியர்களைப் பார்த்தோம் சார், அதுவும் ரொம்ப சுறுசுறுப்பாவும், ரொம்ப தன்னம்பிக்கையோடும் இருந்தாங்க, பாரதத்தோட பேருக்கு பெருமை சேர்த்திட்டு இருந்தாங்க சார். எங்க வெற்றியை அவங்க தங்களோட வெற்றியா நினைச்சாங்கன்னுதான் எங்களுக்குப் பட்டிச்சு சார், ஒவ்வொரு இடத்திலயும் எங்களுக்கு பலவகையான அனுபவங்கள் கிடைச்சுது, எடுத்துக்காட்டா ஆஸ்ட்ரேலியாவுல, மேற்கு ஆஸ்ட்ரேலிய பாராளுமன்றத்தோட அவைத்தலைவர் எங்களை அழைச்சாரு, எங்களுக்கு ரொம்பவே ஊக்கமளிச்சாரு சார். எப்பவுமே இந்த மாதிரியான விஷயங்கள் தான், நமக்கு ரொம்ப பெருமைப்பட வைக்கும் சார். அதே போல நாங்க நியூசீலாந்துக்குப் போன போது, அங்க மாவுரிகள் எங்களை வரவேத்தாங்க, நம்ம பாரதநாட்டுக் கலாச்சாரத்துக்கு ரொம்ப மரியாதை கொடுத்தாங்க சார். மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னென்னா, போர்ட் ஸ்டேன்லீங்கற ஒரு தொலைவான தீவுல சார், அது தென்னமெரிக்காவுக்குப் பக்கத்தில இருக்கு, அங்க வெறும் 3500 மக்கள் தான் வசிக்கறாங்கன்னாலும், அங்கயும் நாங்க ஒரு குட்டி இந்தியாவைப் பார்க்க முடிஞ்சுது, அங்ககூட 45 இந்தியர்கள் இருந்தாங்க, அவங்க எங்களை அவங்க வீட்டுல ஒருத்தரா நினைச்சு நடத்தினாங்க சார்.

பிரதமர் – பலே, உங்களை மாதிரியே ஆக நினைக்கற நம்ம தேசத்தோட பெண்களுக்கு நீங்க என்ன செய்தி அளிக்க விரும்பறீங்க?

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – சார், நான் லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா பேசறேன் இப்ப. யாராவது மனசை ஊன்றி உழைச்சாங்கன்னு சொன்னா, இந்த உலகத்தில இயலாத விஷயம்னு ஒண்ணும் இல்லைன்னுதான் நான் உங்க மூலமா சொல்லிக்க விரும்பறேன் சார். நீங்க எங்கிருந்து வர்றீங்க, எங்க பிறந்தீங்க, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எங்க ரெண்டு பேரோட ஆசையும் என்னென்னா, பாரதத்தோட இளைஞர்களும் பெண்களும் பெரியபெரிய கனவுகளைக் காணணும், அனைத்துப் பெண்களும், பாதுகாப்புத் துறையில, விளையாட்டுக்கள்ல, சாகஸங்கள்ல ஈடுபட்டு தேசத்துக்குப் பெருமை சேர்க்கணுங்கறது தான் சார்.

பிரதமர் – தில்னாவும் ரூபாவும் பேசினதைக் கேட்ட பிறகு, நீங்க எத்தனை பெரிய சாகஸத்தை செஞ்சிருக்கிங்கன்னு நினைக்கும் போது, எனக்கு ஒரே புளகாங்கிதமா இருக்கு. என் தரப்பிலேர்ந்து உங்க ரெண்டு பேத்துக்கும் பலப்பல நன்றிகள். கண்டிப்பா உங்களோட உழைப்பு, உங்க வெற்றி, உங்களோட சாதனை எல்லாம் தேசத்தோட இளைஞர்களுக்கும், தேசத்தின் பெண்களுக்கும் பெரிய கருத்தூக்கமா இருக்கும். தொடர்ந்து மூவண்ணக் கொடியோட பெருமைக்கு பெருமை சேர்த்துக்கிட்டே இருங்க, உங்க அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் என்னோட ஏராளமான நல்வாழ்த்துக்கள்!!

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – தேங்க்யூ சார்.

பிரதமர் – பலப்பல நன்றிகள். வணக்கம், நமஸ்காரம்.

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – வணக்கம் சார்.

          நண்பர்களே, நம்முடைய புனித நாட்கள், பண்டிகைகள் எல்லாம் பாரதத்தின் கலாச்சாரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. சட்பூஜை இப்படிப்பட்ட ஒரு புனிதமான நாள், இது தீபாவளிக்குப் பிறகு வருகிறது. சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பெரும்புனித நாள் மிகவும் விசேஷமானது. இதிலே நாம் அஸ்தமனம் ஆகும் சூரியனுக்கு நீரால் அஞ்சலி செலுத்துகிறோம், அவனை வழிபடுகிறோம். சட் என்பது தேசத்தின் பல்வேறு பாகங்களில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை, உலகெங்கிலும் இதைக் கொண்டாடுவதைப் பார்க்கலாம். இன்று இது ஒரு உலகளாவிய பண்டிகையாக ஆகி வருகிறது.

          நண்பர்களே, பாரத அரசும்கூட, சட் பூஜை தொடர்பாக ஒரு பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சட் பெரும் நாளை, யுனெஸ்கோ அமைப்பின் Intangible Cultural Heritage List, அதாவது கலாச்சார மரபுப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் பாரத அரசு ஈடுபட்டிருக்கிறது. சட் பூஜை எப்போது யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெறுமோ, அப்போது உலகின் அனைத்து இடங்களைச் சேர்ந்த மக்களும் இதன் பெருமை மற்றும் தெய்வீகத்தன்மையை அனுபவித்து உணர்வார்கள்.

          நண்பர்களே, சிலகாலம் முன்பாக, பாரத அரசின் இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக கோல்காத்தாவின் துர்க்கா பூஜையும் கூட யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலின் அங்கமாக ஆனது. நாம் நமது கலாச்சார ஏற்பாடுகளுக்கு இப்படிப்பட்ட உலகளாவிய அடையாளத்தை அமைத்துக் கொடுத்தோமேயானால்,, இவை பற்றி உலகம் அறிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும், இவற்றிலே கலந்து கொள்ள முன்வரும்.

          நண்பர்களே, அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தி ஜயந்தி வருகிறது. காந்தியடிகள் எப்போதுமே சுதேசியைக் கைக்கொள்வதன் மீது அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறார், இவற்றிலே காதி மிகவும் முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்த பிறகு, காதியின் ஒளி சற்று மங்கிப் போனது ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் காதியின் மீது தேசத்தின் மக்களுக்கு ஈர்ப்பு அதிகரித்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளிலே காதியின் விற்பனையில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது. அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று, ஏதாவது ஒரு காதிப்பொருளை நீங்கள் கண்டிப்பாக வாங்குங்கள் என்று நான் உங்களிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறேன். பெருமையோடு கூறுங்கள், இது சுதேசிப் பொருள் என்று. இதை சமூக ஊடகத்தில் #Vocal for Local என்ற ஹேஷ்டேகில் பகிருங்கள்.

  • நண்பர்களே, காதியைப் போலவே நமது கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் துறையிலும் கூட கணிசமான அளவு மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. நமது பாரம்பரியமும், நூதனமும் ஒருங்கே பயணித்தால், அற்புதமான விளைவுகள் ஏற்படுத்த முடியும் என்பதற்கு சான்றாக, இன்று நமது தேசத்திலே பல எடுத்துக்காட்டுக்களை நம்மால் காண முடியும். யாழ் நேச்சுரல்ஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு உதாரணம். இங்கே அஷோக் ஜகதீசன் அவர்களும், பிரேம் செல்வராஜ் அவர்களும் கார்ப்பரேட் வேலையை உதறித் தள்ளிவிட்டு, ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டார்கள். இவர்கள் புல் மற்றும் வாழையின் நார்களால் யோகா பாயைத் தயாரித்தார்கள், தாவர வண்ணங்களால் துணிக்கு வண்ணம் சேர்த்தார்கள், 200 குடும்பங்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை அமைத்துக் கொடுத்தார்கள்.

                   ஜார்க்கண்டின் ஆஷீஷ் சத்தியவ்ரத் சாஹூ அவர்கள், ஹோஹர் பிராண்ட் வாயிலாக பழங்குடியினத்தவரின் நெசவு மற்றும் துணிகளை உலக மேடை வரை கொண்டு சென்றார். இவருடைய முயற்சியால் இன்று ஜார்க்கண்டின் கலாச்சார மரபு, பிற நாடுகளைச் சேர்ந்த மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகிறது.

  • பிஹாரின் மதுபனி மாவட்டத்தின் ஸ்வீட்டி குமாரி அவர்களும் கூட, சங்கல்ப் கிரியேஷனைத் தொடங்கினார். மிதிலா ஓவியங்களை இவர், பெண்களின் வாழ்வாதாரத்திற்கான சாதனமாக ஆக்கினார். இன்று 500க்கும் அதிகமான ஊரகப் பெண்கள் இவரோடு இணைந்திருக்கின்றார்கள், தற்சார்புப் பாதையில் நடைபோடுகிறார்கள். வெற்றியின் இந்த அனைத்துக் கதைகளும், நமது பாரம்பரியங்களில் வருமானம் ஈட்டுவதற்கு எத்தனை வழிகள் மறைந்திருக்கின்றன என்பதையே நமக்குக் கற்பிக்கின்றன.
  • என் மனம்நிறை நாட்டுமக்களே, அடுத்த சில நாட்களில் நாம் விஜயதசமியைக் கொண்டாட இருக்கிறோம். இந்த முறை விஜயதசமி, மேலும் ஒரு விஷயம் காரணமாக மிகவும் விசேஷம் நிறைந்தது. இந்த நாளன்று தான் ராஷ்ட்ரீய சுயம்சேவவக சங்கம் 100 ஆண்டுகள் முன்பாக நிறுவப்பட்டது. ஒரு நூற்றாண்டின் இந்தப் பயணம் எத்தனை அற்புதமானது, வரலாறு காணாதது, உத்வேகம் அளிக்கவல்லது!! இந்த நாளிலிருந்து 100 ஆண்டுகள் முன்பாக, ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கம் நிறுவப்பட்ட போது, தேசம் பலநூற்றாண்டுக்கால அடிமைத்தளைகளில் சிக்கியிருந்தது. இந்த பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அடிமைத்தனம் காரணமாக, நமது சுயமரியாதைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம், தனது அடையாளத்தைத் தொலைத்து விட்டுத் அதைத் தேடுவதில் தவித்துக் கொண்டிருந்தது. நாட்டுமக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகியிருந்தார்கள். ஆகையால் தேசத்தின் விடுதலையோடு கூடவே, தேசத்தின் கருத்தியல் அடிமைத்தனத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டியது மிக மகத்துவமானதாக இருந்தது. இந்த நிலையில்தான், பெருமதிப்பிற்குரிய டாக்டர். ஹெட்கேவார் அவர்கள், இந்த விஷயம் குறித்து ஆழமாக ஆலோசித்த பிறகு, இந்த பகீரதப் பணியை நிறைவேற்றும் பொருட்டு, அவர் 1925ஆம் ஆண்டு, விஜயதசமி நன்னாளில் ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கத்தை நிறுவினார். டாக்டர் ஐயா காலமான பிறகு, பெருமதிப்பிற்குரிய குருஜி அவர்கள், தேச சேவையின் இந்த மகா வேள்வியை முன்னெடுத்துச் சென்றார். பெருமதிப்பிற்குரிய குருஜி கூறுவதுண்டு – ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய இதம் ந மம, அதாவது, இது என்னுடையது அல்ல, இது தேசத்தினுடையது என்று. இதிலே சுயநலத்திற்கு அப்பாற்பட்டு, தேசத்திற்காக அர்ப்பணிக்கும் உணர்வினை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான உள்ளெழுச்சி அடங்கியிருக்கிறது. குருஜி கோல்வால்கர் அவர்களின் இந்த வாக்கியம் தான், இலட்சக்கணக்கான சுயம்சேவகர்களுக்கு, தியாகம் மற்றும் சேவையின் பாதையைக் காட்டியது. தியாகம் மற்றும் சேவையின் இந்த உணர்வும், ஒழுக்கப் பாடமும் தான், சங்கத்தின் மெய்யான பலம். இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 ஆண்டுகளாக, களைப்படையாமல், தடைப்படாமல், தேச சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகையால் தான், தேசத்தில் எங்கே இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் சுயம்சேவர்கள் அனைவருக்கும் முன்னதாக அங்கே சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இலட்சோபலட்சம் சுயம்சேவகர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும், தேசத்துக்கே முதன்மை என்ற இந்த உணர்வு தான் எப்போதும் முதன்மையானதாக இருக்கிறது. தேசச் சேவை என்ற மாபெரும் வேள்வியிலே, தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து வரும் ஒவ்வொரு சுயம்சேவகருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் அர்ப்பணம் செய்கிறேன்.

          என் கனிவான நாட்டுமக்களே, அடுத்த மாதம் அக்டோபர் 7ஆம் தேதியன்று, மகரிஷி வால்மீகியின் பிறந்தநாள். மகரிஷி வால்மீகி, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் எத்தனை பெரிய ஆதாரம் என்பது நம்மனைவருக்கும் நன்கு தெரியும். இந்த மகரிஷி வால்மீகிதான், நமக்கெல்லாம் பகவான் இராமன் பற்றிய அவதாரக் கதைகளை, இத்தனை விரிவான முறையிலே அறிமுகம் செய்து வைத்தார். அவர் மனித சமுதாயத்திற்கு இராமாயணம் போன்றதொரு அற்புதமான நூலினை அளித்தார்.

          நண்பர்களே, இராமாயணத்தின் இந்தத் தாக்கத்திற்கான காரணம், அதிலே பொதிந்திருக்கும் பகவான் இராமனின் ஆதர்சங்களும், நற்பண்புகளும் தான். பகவான் இராமன், சேவை, சமத்துவ மனப்பான்மை மற்றும் கருணை ஆகியவற்றால் அனைவரையும் அரவணைத்தார். ஆகையால் தான், மகரிஷி வால்மீயின் இராமாயணம் இராமன், அன்னை சபரி, நிஷாத்ராஜ் என்ற குகன் ஆகியோரோடு தான் நிறைவாகிறது. அந்த வகையிலே நண்பர்களே, அயோத்தியிலே இராமனுக்கு ஆலயம் அமைக்கப்பட்ட போது, கூடவே குகனுக்கும், மகரிஷி வால்மீகிக்கும் கூட ஆலயம் எழுப்பப்பட்டது. நீங்களும் அயோத்தியிலே இராமலீலையை தரிசனம் செய்யுங்கள், மகரிஷி வால்மீகி, நிஷாதராஜன் குகனுடைய ஆலயத்திற்கும் தரிசனம் செய்து வாருங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

          என் உளம்நிறை நாட்டுமக்களே, கலை, இலக்கியம், கலாச்சாரத்தின் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இவை எந்த ஒரு வரம்பிற்குள்ளும் கட்டுப்பட்டு இருக்காது. இவற்றின் நறுமணம், அனைத்து எல்லைகளையும் தாண்டி, மக்களின் மனங்களைத் தொட்டு வருடிவிடும். தற்போதுதான், பாரீசில் ஒரு கலாச்சார நிறுவனமான சௌந்தக் மண்டபா, தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த மையமானது, பாரதநாட்டு நடனத்தை வெகுஜனங்களுக்கு விருப்பமானதாக ஆக்குவதிலே பரவலான பங்களிப்பை அளித்திருக்கிறது. இதை மிலேனா சால்வினீ அவர்கள் தான் நிறுவினார். இவருக்கு சில ஆண்டுகள் முன்பாகத் தான் பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. நான் சௌந்தக் மண்டபாவோடு இணைந்த அனைவருக்கும் பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், வருங்காலத்தில் உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும், என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

          நண்பர்களே, இப்போது நான் உங்களுக்கு இரண்டு சிறிய ஒலிக்குறியீடுகளை இசைக்க இருக்கிறேன், இவற்றைக் கவனமாகக் கேளுங்கள் - #Audio Clip 1

இப்போது இரண்டாவது ஒலிக்குறிப்பை இசைக்கிறேன், கேளுங்கள் -

#Audio Clip 2

           

            நண்பர்களே, இந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான பூபேன் ஹஜாரிகா அவர்களின் பாடல்கள் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளை இணைக்கின்றது என்பதற்குச் சாட்சியாக இருக்கின்றது. இதிலே பூபேன் தா அவர்களின் மிகப் பிரபலமான பாடலான மனுஹே-மனுஹார் பாபே, இதனை இலங்கையைச் சேர்ந்த கலைஞர்கள் சிங்கள மொழியிலும், தமிழிலும் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். நான் உங்களுக்கு இவற்றின் ஒலிக்குறிப்புக்களைத் தான் இசைத்தேன். சில நாட்கள் முன்பாக அசாமிலே அவருடைய நூற்றாண்டு விழாவிலே கலந்துகொள்ளும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. இது உள்ளபடியே நினைவில் கொள்ளத்தக்க ஒரு நிகழ்ச்சியாக எனக்கு அமைந்தது.

 

          நண்பர்களே, பூபேன் ஹஜாரிகா அவர்களின் நூற்றாண்டினை அசாம் கொண்டாடிவரும் வேளையிலே, சில நாட்கள் முன்பாக ஒரு துக்ககரமான சம்பவமும் நடந்தது. ஜுபீன் கர்க் அவர்களின் அசந்தர்ப்பமான இறப்பும் நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.

 

          ஜுபீன் கர்க் அவர்கள் ஒரு பிரபலமான பாடகர், நாடெங்கிலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். அசாமின் கலாச்சாரத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது. ஜுபின் கர்க் அவர்கள் நமது நினைவுகளில் என்றென்றும் நீங்காதிருப்பார், அவருடைய இசையானது, வருங்காலத் தலைமுறைகளையும் சொக்க வைக்கும்.

 

ஜுபீன் கர்க், ஆசில்

அஹோமார் ஹமோஸக்ருதிர், உஜ்ஜால் ரத்னோ……

ஜனோதார் ஹ்ருதயாத், தேயோ ஹ்ருதாய ஜியாய், தாகிபோ.

 

[மொழியாக்கம் : ஜுபீன் அசாமிய கலாச்சாரத்தின் கோஹிநூர் வைரமாகத் திகழ்ந்தவர். உடல்ரீதியாக அவர் நம்மைவிட்டு மறைந்தாலும், அவர் என்றென்றும் நம் இதயங்களில் நீங்காதிருப்பார்]

 

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக நம்முடைய தேசத்தின் ஒரு மகத்துவம்வாய்ந்த சிந்தனையாளரும், கருத்தியல்வாதியுமான எஸ். எல். பைரப்பா அவர்கள் காலமானார். பைரப்பா அவர்களுடன் எனக்கு தனிப்பட்ட தொடர்பும் இருந்தது, எங்களுக்கு இடையே பல சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆழமான உரையாடலும் நிகழ்ந்திருக்கிறது. அவருடைய படைப்புகள், இளைய தலைமுறையினருக்குப் பாதை வகுத்துக் கொடுத்தது. கன்னடத்தின் பல படைப்புகளின் மொழியாக்கமும் இப்போது கிடைக்கிறது. நம்முடைய வேர்கள் மற்றும் கலாச்சாரத்தின் மீது நாம் பெருமைப்படுவது எத்தனை முக்கியமானது என்று அவர் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார். எஸ். எல். பைரப்பா அவர்களுக்கு என்னுடைய உணர்வுபூர்வமான நினைவாஞ்சலிகளை நான் அர்ப்பணம் செய்கிறேன், இளைஞர்களே, அவருடைய படைப்புக்களை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

 

எனதருமை நாட்டுமக்களே, வரவிருக்கும் நாட்களிலே ஒன்றன்பின் ஒன்றாக பண்டிகைகளும், சந்தோஷங்களும் நம் வீட்டுக் கதவுகளைத் தட்ட இருக்கின்றன. ஒவ்வொரு புனித நாளின் போதும், நாம் பொருட்களை வாங்குகிறோம். மேலும் இந்த முறை பார்த்தால், ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டம் வேறு நடந்து வருகிறது.

 

  • ஒரு உறுதிப்பாட்டோடு நீங்கள் உங்களுடைய பண்டிகைகளை மேலும் சிறப்பாகக் கொண்டாட முடியும். இந்த முறை பண்டிகைகளின் போது, சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்கிக் கொண்டாடுவோம் என்று நாம் மனவுறுதிப்பட்டால், நமது பண்டிகைகளின் ஒளிவெள்ளம் பலமடங்கு பெருகிவிடும் என்பதை நீங்களே பார்க்கலாம். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை, பொருட்களை வாங்கும் போது நினைவில் கொள்ளுங்கள். நம் தேசத்தில் தயாராவதை மட்டுமே நான் வாங்குவேன் என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நம் நாட்டுமக்களின் தயாரிப்புகளை மட்டுமே வீட்டுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி மேற்கொள்ளுங்கள். நம் நாட்டுமக்களின் உழைப்பு இருக்கும் பொருட்களையே பயன்படுத்துவேன் என்று உறுதிப்படுங்கள். இப்படி நாம் செய்தோம் என்று சொன்னால், நாம் பொருட்களை மட்டும் வாங்கவில்லை, நாம் ஏதோவொரு குடும்பத்தின் நம்பிக்கையை வீட்டுக்குக் கொண்டு வருகிறோம், யாரோவொரு கைவினைஞரின் உழைப்புக்கு மரியாதை அளிக்கிறோம், யாரோ ஒரு இளைஞரின் தொழில்முனைவுக்கு இறக்கை அளிக்கிறோம் என்று கொள்ளுங்கள்.

 

நண்பர்களே, பண்டிகைகள் காலத்தில் நாம் அனைவரும் நமது வீடுகளிலே தூய்மையைப் பேணுவோம் ஆனால், தூய்மை நம் வீடுகள் என்ற நான்கு சுவர்களுக்கு உள்ளே மட்டும் அடங்குவது அல்ல. வீதிகள், குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் தூய்மையைப் பேணிக்காப்பது என்பது நம்மனைவரின் பொறுப்பாகும்.

 

நண்பர்களே, நம்முடைய தேசத்திலே எப்போதும் விழாக்கள் நிறைந்திருக்கும் என்றாலும், தீபாவளி ஒரு மகாவிழாவாகவே கருதப்படுகிறது; வரவிருக்கும் தீபாவளிப்பண்டிகைக்கும் உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இதோடு கூடவே, நான் மீண்டும் ஒரு விஷயத்தை உரைக்கிறேன், நாம் தற்சார்பு உடையவர்களாக ஆக வேண்டும், தேசம் தற்சார்பு உடையதாக ஆக வேண்டும் என்றால் இதற்கான பாதை சுதேசியை நாம் முன்னெடுத்துச் செல்வதிலே தான் இருக்கிறது.

 

நண்பர்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. அடுத்த மாதம், மீண்டும் புதிய விஷயங்கள்-கருத்தூக்கங்களோடு நாம் சந்திப்போம். அதுவரை, உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.

 

*****

 

(Release ID: 2172373)

SG

 


(Release ID: 2172496) Visitor Counter : 28