தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தென்கொரியாவின் ஊடகத் தலைவர்களுக்கும் தொழில்துறை பிரதிநிதிகளுக்கும் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைப்பு
प्रविष्टि तिथि:
25 SEP 2025 9:22PM by PIB Chennai
2025 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தென்கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகத் தலைவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோருக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகம், பொழுதுபோக்கு, கலாச்சாரம், கேமிங், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்தியா, கொரியா இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் 2025 செப்டம்பர் 22 முதல் 24 வரை கொரிய குடியரசுக்கு டாக்டர் முருகன் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது 30-வது பூசன் சர்வதேச திரைப்படவிழா, ஆசிய உள்ளடக்கங்கள் மற்றும் திரைப்பட சந்தை, பல்வேறு உயர்நிலை கூட்டங்கள், தொழில்துறை சார்ந்த வட்டமேசை சந்திப்புகள், கலாச்சார நிகழ்வுகள், சமூக கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் அவர் பங்கேற்றார்.
பூசன் சர்வதேச திரைப்பட விழாவுக்கு இடையே பூசன் திரைப்பட ஆணையத்துடன் நடைபெற்ற உயர்நிலை வட்டமேசை சந்திப்புக்கு டாக்டர் முருகன் தலைமை தாங்கினார். இணை தயாரிப்பு மையமாக வளர்ந்துவரும் இந்தியாவின் பங்களிப்பு, கொரியா மற்றும் உலகளாவிய பங்குதாரர்களுடன் ஆக்கப்பூர்வ பரிமாற்றங்களை அதிகரிக்கும் விருப்பம் ஆகியவை இந்த சந்திப்பின் முக்கிய அம்சங்களாக இருந்தன.
வேவ்ஸ் மற்றும் வேவ்ஸ் சந்தை தளங்கள் மூலம் பாரத விழாவையும் வலையமைப்பு விருந்து நிகழ்ச்சியையும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பூசன் சர்வதேச திரைப்பட விழாக் குழு தலைவர் திரு பார்க் குவாங் உட்பட 250 பிரபலங்கள் பங்கேற்றனர்.
சியோலில் செப்டம்பர் 24 அன்று கொரிய நாடாளுமன்றத்தின் கலாச்சாரம், விளையாட்டு, சுற்றுலாக் குழு உறுப்பினர்களை சந்தித்த அமைச்சர் டாக்டர் முருகன் செயற்கை நுண்ணறிவு, உள்ளடக்க நிர்வாகம் போன்றவற்றில் ஒத்துழைப்பு குறித்தும் சட்ட விரோதமாக திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதித்தார்.
கொரியா – இந்தியா நாடாளுமன்ற நட்புறவுக் குழு உறுப்பினர்களை சந்தித்த அமைச்சர் அதன் துணைத் தலைவர்கள் திருமதி மூன் ஜியோங்-பாக், திரு யூன் யாங்- சியோக் ஆகியோருடன் விரிவான விவாதங்களை நடத்தினார்.
கொரியாவின் தொழில்துறை தலைவர்கள், ஊடகத் தலைவர்கள் ஆகியோருடன் இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து பேசிய டாக்டர் முருகன் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கொரியாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
***
(Release ID: 2171495 )
SS/SMB/SG/SH
(रिलीज़ आईडी: 2171689)
आगंतुक पटल : 40