பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேசத்தின் தாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
ஏழைகளுக்கு சேவை செய்வதே எனது வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம்: பிரதமர்
Posted On:
17 SEP 2025 2:17PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தின் தாரில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், தார் போஜ்சலாவின் மரியாதைக்குரிய அன்னை வக்தேவியின் காலடியில் வணங்குவதாக கூறினார். படைப்பின் தெய்வமான விஸ்வகர்மாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, விஸ்வகர்மாவுக்கு வணக்கம் செலுத்தினார்.
தார் நிலம் என்றும் வீரத்திற்கு உத்வேகம் அளித்ததாக கூறிய திரு மோடி, மகாராஜா போஜின் துணிச்சல், நாட்டின் பெருமையைக் காப்பதில் உறுதியாக நிற்பதற்கு நமக்கு கற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்தார். மகரிஷி தாதிசியின் தியாகம் மனித சமூகத்திற்கு சேவை புரிவதற்கான உறுதியை நமக்கு அளிப்பதாக அவர் கூறினார். இந்த மரபிலிருந்து உத்வேகம் அடைந்து தற்போது நாடு அன்னை பாரதத்தின் பாதுகாப்பிற்கு மிக உயரிய முன்னுரிமையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், நமது சகோதரி மற்றும் புதல்விகளின் குங்குமத்தை அழித்ததை அவர் நினைவு கூர்ந்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுடைய பயங்கரவாத மறைவிடங்களை நாம் அழித்தோம் என்று கூறினார். துணிச்சல்மிக்க நமது வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாக திரு மோடி குறிப்பிட்டார்.
மத்தியப்பிரதேசத்தில் மகேஸ்வரி ஜவுளிகளின் செழுமை மிக்க பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், தேவி அஹில்யாபாய் ஹோல்கர், மகேஸ்வரி சேலைக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததாகக் கூறினார். அவருடைய 300-வது பிறந்த தினம் அண்மையில் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தாரில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்கா மூலம் அவரது மரபு தற்போது முன்னேற்றம் அடைவதாகத் தெரிவித்தார். இந்தப் பூங்கா பருத்தி, பட்டு போன்ற அத்தியாவசிய நெசவுப் பொருட்களை எளிதாக அணுக வகை செய்யும் என்றும், தரங்களை சரி பார்ப்பதை எளிதாக்கும் என்றும், சந்தை இணைப்பை மேம்படுத்தும் என்றும் திரு மோடி விவரித்தார்.
தாரில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்காவிற்கு சுமார் 1,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 80-க்கும் அதிகமான தொழில்துறை அலகுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழிற்சாலைக் கட்டுமானம் ஆகியவை ஒரே நேரத்தில் தொடரும் என்று தெரிவித்தார். இந்தப் பூங்கா 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், பூங்காவின் தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளை பெருமளவில் குறைத்து இந்தியப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் அளித்து உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் என்றும் திரு மோடி கூறினார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட சமூகப் பிரிவினர்களுக்கு பயனளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏழை விஸ்வகர்மா சகோதர சகோதரிகள் திறமையைக் கொண்டிருந்தனர் என்று அவர் கூறினார். ஆனால், முந்தைய அரசுகள் அவர்களுடைய திறமையை மேம்படுத்தவோ, வாழ்க்கையை மேம்படுத்தவோ எந்தத் திட்டங்களையும் வகுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசு அவர்களுடைய கைவினைத் திறனை முன்னேற்றமிக்கதாக மாற்றுவதற்கான வழிவகைகளை மீண்டும் உருவாக்கி உள்ளது என்று அவர் தெரிவித்தார். அரசின் முதன்மையான முன்னுரிமையாளர்களாக பின்தங்கியவர்கள் இருப்பார்கள் என்பதை உறுதிபடுத்தினார்.
சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மக்கள் தாங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக சுதேசியைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்த அவர், தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக இது மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
-----
SS/IR/KPG/KR/SH
(Release ID: 2167696)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam