பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மிசோரமில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய முழுஉரையின் தமிழாக்கம்

Posted On: 13 SEP 2025 12:26PM by PIB Chennai

மிசோரம் ஆளுநர் வி கே சிங் அவர்களே, முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மிசோரம் அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, மிசோரமின் அற்புதமான மக்களுக்கு வாழ்த்துகள்.

நீல மலைகளின் இந்த அழகான பூமியைக் காக்கும் மேலான கடவுள் பதியனுக்கு நான் தலைவணங்குகிறேன். நான் மிசோரமின் லெங்புய் விமான நிலையத்தில் இருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, மோசமான வானிலை காரணமாக, அய்ஸ்வாலில் உங்களுடன் சேர முடியாததற்கு வருந்துகிறேன். ஆனால் இந்த ஊடகம் வழியாகவும் உங்கள் அன்பையும் பாசத்தையும் என்னால் உணர முடிகிறது.

நண்பர்களே,

சுதந்திர இயக்கமாக இருந்தாலும், தேசத்தைக் கட்டமைப்பதாக இருந்தாலும், பங்களிப்பு செய்ய மிசோரம் மக்கள் எப்போதும் முன்வந்துள்ளனர். லால்னு ரோபுலியானி, பசல்தா குவாங்சேரா போன்றவர்களின் கொள்கைகள் தேசத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன. தியாகம் மற்றும் சேவை, தைரியம் மற்றும் இரக்கம் என்ற மாண்புகள் மிசோ சமூகத்தின் மையமாக உள்ளன. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிசோரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நண்பர்களே,

இந்த நாள் நாட்டிற்கு, குறிப்பாக மிசோரம் மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாள். இன்று முதல், அய்ஸ்வால் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும். சில ஆண்டுகளுக்கு முன், அய்ஸ்வால் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று, அதனைப் பெருமையுடன் நாட்டு மக்களுக்கு நாம் அர்ப்பணிக்கிறோம். கடினமான நிலப்பரப்பு உட்பட பல சவால்களைக் கடந்து, இந்த பைரபி சாய்ராங் ரயில் பாதை எதார்த்தமாகியுள்ளது. நமது பொறியாளர்களின் திறமையும், நமது தொழிலாளர்களின் மன உறுதியும் இதை சாத்தியமாக்கியது.

நண்பர்களே,

நமது இதயங்கள் எப்போதும் ஒன்றோடொன்று நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இப்போது, ராஜதானி எக்ஸ்பிரஸ் மூலம் முதல்முறையாக மிசோரமில் உள்ள சாய்ராங், தில்லியுடன் நேரடியாக இணைக்கப்படும். இது வெறும் ரயில் இணைப்பு மட்டுமல்ல, மாற்றத்திற்கான ஓர் உயிர்நாடியாகும். இது மிசோரம் மக்களின் வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்தும். மிசோரமின் விவசாயிகளும் வணிகங்களும்  நாடு முழுவதும் அதிக சந்தைகளை அடைய முடியும். கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான கூடுதல் தெரிவுகளை மக்கள் அணுக முடியும். இது சுற்றுலா, போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

நண்பர்களே,

நீண்ட காலமாக, நம் நாட்டில் சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலை கடைப்பிடித்தன. அதிக வாக்குகள் மற்றும் இடங்களைப் பெற்ற இடங்களில் எப்போதும் அவர்களின் கவனம் இருந்தது. மிசோரம் போன்ற மாநிலங்கள் உட்பட வடகிழக்கு பகுதி முழுமையும் இந்த அணுகுமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் எங்கள் அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது. முன்பு புறக்கணிக்கப்பட்டவர்கள் இப்போது முன்னணியில் உள்ளனர். ஒரு காலத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள், இப்போது மைய நீரோட்டத்தில் உள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாக, வடகிழக்கின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். இந்தப் பகுதி இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாக மாறிவருகிறது.

 நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளாக, வடகிழக்கின் பல மாநிலங்கள் முதல்முறையாக இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், செல்பேசி இணைப்பு மற்றும் இணையதள  இணைப்புகள், மின்சாரம், குழாய் நீர் மற்றும் எல்பிஜி இணைப்புகள் என அனைத்து வகையான இணைப்புகளையும் வலுப்படுத்த மத்திய அரசு கடுமையாக பாடுபட்டுள்ளது. விமானப் பயணத்திற்கான உடான் திட்டத்தால் மிசோரமும் பயனடையும். விரைவில், ஹெலிகாப்டர் சேவைகள் இங்கு தொடங்கும். இது மிசோரத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.

நண்பர்களே,

நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் வளர்ந்து வரும் வடகிழக்குப் பொருளாதார வழித்தடம் என இரண்டிலும் மிசோரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கலடன் பலவகை போக்குவரத்து திட்டம் மற்றும் சாய்ராங் ஹிமாங்புச்சுவா ரயில் பாதை மூலம், தென்கிழக்கு ஆசியா வழியாக வங்காள விரிகுடாவுடன் மிசோரம் இணைக்கப்படும். இதன் காரணமாக, வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் வர்த்தகமும் சுற்றுலாவும் மேம்படும்.

நண்பர்களே,

மிசோரம் திறமையான இளைஞர்களைக் கொண்டுள்ளது. அவர்களை மேம்படுத்துவதே எங்கள் பணி. எங்கள் அரசு ஏற்கனவே இங்கு 11 ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளது. மேலும் 6 பள்ளிகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. நமது வடகிழக்கு மாநிலங்களும் புத்தொழில்  நிறுவனங்களுக்கான முக்கிய மையமாக மாறிவருகின்றன. இந்த பிராந்தியத்தில் சுமார் 4,500 புத்தொழில்  நிறுவனங்களும் 25 தொடக்கநிலை தொழில் வளர்ச்சி மையங்களும் இயங்கி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மிசோரமின் இளைஞர்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாக இணைந்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

நண்பர்களே,

உலக விளையாட்டுகளுக்கான முக்கிய மையமாக இந்தியா விரைந்து மாறிவருகிறது. இது நாட்டில் விளையாட்டு பொருளாதாரத்தையும் உருவாக்குகிறது. விளையாட்டுகளில் ஒரு அற்புதமான பாரம்பரியத்தை மிசோரம் கொண்டுள்ளது, இது கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளில் பல சாம்பியன்களை உருவாக்குகிறது. எங்களின் விளையாட்டுக் கொள்கைகள் மிசோராமுக்கும் பயனளிக்கின்றன. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், நவீன விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அண்மையில், எங்கள் அரசு தேசிய விளையாட்டுக் கொள்கையை வெளியிட்டு  கேலோ இந்தியா கேல் நிதியை உருவாக்கியுள்ளது. இது மிசோரம் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

நண்பர்களே,

நம் நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, வடகிழக்கின் அழகிய கலாச்சாரத் தூதராக செயல்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வடகிழக்கின் திறனை வெளிப்படுத்தும் தளங்களை ஊக்குவிப்பது  முக்கியம். சில மாதங்களுக்கு முன், தில்லியில் நடந்த அஷ்டலட்சுமி விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது வடகிழக்கின் ஜவுளி, கைவினைப்பொருட்கள், புவிசார் குறியீடு கொண்ட தயாரிப்புகள் மற்றும் சுற்றுலாத் திறனைக் காட்சிப்படுத்தியது. எழுச்சிபெறும் வடகிழக்கு உச்சி மாநாட்டில் வடகிழக்கின் திறனைப் பயன்படுத்த முதலீட்டாளர்களை ஊக்குவித்தேன். இந்த உச்சிமாநாடு பெருமளவிலான முதலீடுகள் மற்றும் திட்டங்களுக்கான பாதையைத் திறந்தது. உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பது பற்றி நான் பேசும்போது, வடகிழக்கின் கைவினைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் அது பெரிதும் பயனளிக்கிறது. மிசோரமின் மூங்கில் பொருட்கள், இஞ்சி, மஞ்சள் மற்றும் வாழைப்பழங்கள் நன்கு அறியப்பட்டவை.

நண்பர்களே,

வாழ்க்கையை எளிதாக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அண்மையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் பல பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, குடும்பங்களின் வாழ்க்கையை எளிதாக்குவது. 2014-க்கு முன் பற்பசை, சோப்பு, எண்ணெய் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட 27% வரி விதிக்கப்பட்டது. இன்று 5% ஜிஎஸ்டி மட்டுமே பொருந்தும். காங்கிரஸ் ஆட்சியின் போது, மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், காப்பீட்டுப் பாலிசிகள் ஆகியவற்றுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. அதனால்தான் சுகாதாரப் பராமரிப்பு செலவு உயர்ந்தது; காப்பீடு சாதாரண குடும்பங்களுக்கு எட்டாததாக இருந்தது. ஆனால் இன்று, இவை அனைத்தும் மலிவு விலைக்கு மாறிவிட்டன. புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கான மருந்துகளையும் மிகவும் மலிவாக மாற்றும். செப்டம்பர் 22-க்குப் பின், சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களும் மலிவானதாக மாறும். ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் ஏற்கனவே விலைகளைக் குறைத்துவிட்டன. இந்த முறை பண்டிகைக் காலம் நாடு முழுவதும் இன்னும் துடிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பெரும்பாலான ஓட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வது, ஓட்டல்களில் தங்குவது, வெளியே சாப்பிடுவது மலிவானதாக மாறும். இது அதிகமான மக்கள் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்யவும், ஆராயவும், ரசிக்கவும் உதவும். குறிப்பாக வடகிழக்கு போன்ற சுற்றுலா மையங்கள் இதன் மூலம் பயனடையும்.

நண்பர்களே,

2025-26-ம் ஆண்டின் முதல் காலாண்டில் நமது பொருளாதாரம் 7.8% வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதாவது, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகும். மேக் இன் இந்தியா மற்றும் ஏற்றுமதிகளின் வளர்ச்சியை நாம் காண்கிறோம். ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு நமது வீரர்கள் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நமது ஆயுதப் படைகள் குறித்து முழு தேசமும் பெருமித உணர்வால் நிறைந்திருந்தது. இந்த நடவடிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நமது நாட்டைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டிருந்தன. நமது பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி நமது தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது.

நண்பர்களே,

எங்கள் அரசு ஒவ்வொரு குடிமகனின், ஒவ்வொரு குடும்பத்தின், ஒவ்வொரு பிராந்தியத்தின் நலனுக்காக உறுதிபூண்டுள்ளது. மக்களை மேம்படுத்துவதன் மூலம்தான் வளர்ச்சியடைந்த இந்தியா கட்டமைக்கப்படும். இந்தப் பயணத்தில், மிசோரம் மக்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் அய்ஸ்வாலை வரவேற்கிறேன். இன்று, வானிலை காரணமாக, நான் அய்ஸ்வாலுக்கு வர முடியவில்லை. ஆனால் மிக விரைவில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி!

***

(Release ID: 2166208)

AD/SMB/RJ


(Release ID: 2166270) Visitor Counter : 6