பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 11 SEP 2025 1:39PM by PIB Chennai

பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்,

எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், நமது கலாச்சாரமும் பாரம்பரியங்களும் இந்தியாவிலிருந்து மொரீஷியசுக்கு சென்றன. அங்கு இவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின. காசியில் உள்ள நித்தியமான அன்னை கங்கை போல் இந்திய கலாச்சாரத்தின் வற்றாத நீரோட்டம் மொரீஷியசை வளப்படுத்தியது.

இன்று மொரீஷியசின் நண்பர்களை, காசிக்கு வரவேற்பது சம்பிரதாயமான ஒன்று அல்ல. இது ஒரு ஆன்மீக ஒருங்கிணைப்பு. இதனால் தான் இந்தியாவும் மொரீஷியசும்  வெறுமனே, கூட்டாளிகள் அல்ல. ஒரு குடும்பம் என்று நான் பெருமையுடன் கூறுகிறேன்.

நண்பர்களே,

அண்டை நாடுகள் முதலில் என்ற இந்தியாவின் கொள்கையிலும், நமது மகாசாகர் தொலைநோக்குப் பார்வையிலும் முக்கியப் பகுதியாக மொரீஷியஸ் உள்ளது. மார்ச் மாதத்தில், மொரீஷியஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் கௌரவத்தை நான் பெற்றிருந்தேன். அப்போது, விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையாக எங்களின் உறவுகள் மேம்படுத்தப்பட்டன.  இன்று எங்கள் ஒத்துழைப்பின் அனைத்து தளங்களையும் நாங்கள் விரிவாக ஆய்வு செய்தோம். பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களையும் பரிமாறிக் கொண்டோம்.

நண்பர்களே,

சாகோஸ் ஒப்பந்தம் நிறைவேறியதற்காக மொரீஷியஸ் மக்களுக்கும் பிரதமர் ராம்கூலம் அவர்களுக்கும் நான் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மொரீஷியசின் இறையாண்மைக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். காலனித்துவ நீக்கம் என்பதற்கும் மொரீஷியசின் இறையாண்மைக்கு முழுமையான அங்கீகாரம் என்பதற்கும்  இந்தியா எப்போதும் ஆதரவு அளித்துள்ளது. இந்தப் பயணத்தில் மொரீஷியசுடன் எப்போதும் இந்தியா உறுதியாக நிற்கிறது.

நண்பர்களே,

மொரீஷியசின் வளர்ச்சியில் நம்பிக்கையான முதன்மை பங்குதாரராக இருப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.  இன்று மொரீஷியசின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார திட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம். இது அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும், சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்தும்.

நண்பர்களே,

மக்கள் மருந்தக மையம் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே மொரீஷியசில் அமைக்கப்பட்டுள்ளது. மொரீஷியசில் 500 படுக்கை வசதி கொண்ட சர் சீவூ சாகர் ராம்கூலம் தேசிய மருத்துவமனையில் ஆயுஷ் உயர் சிறப்பு மையத்தையும், கால்நடை பராமரிப்பு பள்ளி மற்றும் கால்நடை மருத்துவமனையையும் நிறுவ இந்தியா தனது ஒத்துழைப்பை வழங்க உள்ளது.

அதே நேரத்தில் சாகோஸ் கடற்கரை பாதுகாப்பு பகுதி, எஸ் எஸ் ஆர் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றுவட்ட சாலைகள் விரிவாக்கம் போன்ற முன்னோடித் திட்டங்களில் நாங்கள் பங்கேற்க உள்ளோம்.

இந்தத் தொகுப்புத் திட்டம் ஓர் உதவி மட்டுமல்ல இது எங்களின் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான முதலீடாகும்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு யுபிஐ, ரூபே அட்டைகள், மொரீஷியசில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது உள்ளூர் செலாவணியில் வணிகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எங்களின் கூட்டாண்மையில் எரிசக்தி பாதுகாப்பு ஒரு முக்கியமான பகுதியாகும். எரிசக்தி பரிமாற்றத்தில் மொரீஷியசுக்கு இந்தியா உதவி செய்கிறது.  மொரீஷியசுக்கு 100 மின்சார பேருந்துகளை நாங்கள் வழங்கவிருக்கிறோம். இவற்றில், ஏற்கனவே பத்து பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. எரிசக்தித் துறையில் கையெழுத்திடப்பட்ட விரிவான கூட்டாண்மை ஒப்பந்தம் இந்த ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும்.  டாமரிண்ட் ஃபால்ஸ் என்ற இடத்தில் 17.5 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய எரிசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கு எங்களின் ஆதரவை

அளிப்பதென்று முடிவு செய்துள்ளோம்.

மனிதவள மேம்பாட்டுத் துறையில் நீண்டகால கூட்டாண்மையை நாங்கள் கொண்டிருக்கிறோம். 5,000-க்கும் அதிகமான மொரீஷியஸ் குடிமைப்பணி அலுவலர்கள் ஏற்கனவே இந்தியாவில் பயிற்சி பெற்றுள்ளனர். மார்ச் மாதத்தில் எனது பயணத்தின் போது 500 குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. முதலாவது தொகுப்பு அலுவலர்கள், தற்போது முசோரியில் பயிற்சி பெறுகிறார்கள் என்பதை  நான் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

மொரீஷியசில் புதிய அறிவியல் தொழில்நுட்ப இயக்குநரகத்தை நிறுவ நாங்கள் இன்று முடிவு செய்துள்ளோம். வெகு விரைவில், மொரீஷியசின் மிஷன் கர்மயோகி பயிற்சித் திட்டத்தையும் நாங்கள் தொடங்க உள்ளோம்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்திய தோட்டத் தொழில் நிர்வாக கல்விக்கழகம் ஆகியவை மொரீஷியஸ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள், ஆராய்ச்சி, கல்வி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் எங்களின் கூட்டாண்மையை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்லும்.

நண்பர்களே,

சுதந்திரமான, பாதுகாப்பான, நிலையான, வளமான, இந்தியப் பெருங்கடல் என்பது எங்களின் பகிரப்பட்ட முன்னுரிமையாகும். இந்தச் சூழலில் மொரீஷியசின் தனிச் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தனது கடல்சார் திறனை அதிகரிக்கவும், இந்தியா முழுமையாக உறுதி பூண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பு வழங்குவதில், முதன்மையானதாக இந்தியா எப்போதும் இருக்கும்.

மொரீஷியஸ் கடலோரக் காவல்படை கப்பலை மறு நிர்மாணம் செய்யும் பணி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மேலும், அந்நாட்டின் 120 அதிகாரிகளும் இந்தியாவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

நீரியல் துறையில், ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அடுத்த 5 ஆண்டுகளில் தனிச்சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கூட்டாக ஆய்வுகள் செய்யவும், நீரியல் தரவு திரட்டவும் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.

மேன்மை தங்கிய பிரதமர் அவர்களே,

இந்தியாவும் மொரீஷியசும் இரண்டு நாடுகள்; ஆனால், நமது கனவுகளும் செயல்பாடுகளும் ஒன்றானவை.

இந்த ஆண்டு சர் சீவூசாகர் ராம்கூலத்தின் 125-வது பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடவிருக்கிறோம். அவர் மொரீஷியசின் தேசத்தந்தை மட்டுமல்ல இந்தியா – மொரீஷியஸ் இடையே நீடித்த உறவுப் பாலத்தைக் கட்டமைத்தவரும் ஆவார்.  அவரது பிறந்த நாள் விழா, நாம் ஒன்றுபட்டு பணியாற்றவும், நமது நட்புறவை மகத்தான உயரங்களுக்கு கொண்டு செல்லவும் எப்போதும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

மீண்டும் ஒருமுறை பிரதிநிதிகள் குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

நன்றி

------

(Release ID:2165592)

AD/SMB/KPG/KR

 


(Release ID: 2165947) Visitor Counter : 6