பிரதமர் அலுவலகம்
பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தின் தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
02 SEP 2025 3:52PM by PIB Chennai
மக்கள் செல்வாக்குள்ள பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி அவர்களே, விஜய் குமார் அவர்களே, இதர விருந்தினர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பீகாரைச் சேர்ந்த லட்சக்கணக்கான எனது சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது மதிப்புமிகு வாழ்த்துகள்.
எனக்கு முன்னால் உள்ள தொலைக்காட்சித் திரையில் நான் பார்த்து கொண்டிருக்கிறேன். லட்சக்கணக்கான சகோதரிகளை என்னால் காண முடிகிறது. ஒரு வேளை, பீகாரின் ஒவ்வொரு கிராமத்திலும் இது மிகப்பெரிய விழாவாக மாறியிருக்கும் அத்தகைய காட்சியாக இது தெரிகிறது. ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிகளைப் பெறுவது வாழ்க்கையில் எவ்வளவு மகத்தான வாய்ப்பாக இருக்க முடியும்.
நண்பர்களே,
இந்தப் புனிதமான செவ்வாய்க்கிழமையில் மிகவும் புனிதமான தொடக்கம் அமைந்துள்ளது. இன்று பீகாரின் தாய்மார்களும், சகோதரிகளும் புதிய வசதியைப் பெறுகிறார்கள் - வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கம். இதன் மூலம் வாழ்வாதாரத்துடன் இணைந்த சகோதரிகள் அனைத்து கிராமங்களிலும் இப்போது மிகவும் எளிதாக பண உதவி பெற முடியும். அவர்கள் நிதி ஆதரவைப் பெறுவார்கள். அவர்கள் ஈடுபட்டுள்ள பணியையும், வணிகத்தையும் விரிவாக்க அவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். குறிப்பாக வாழ்வாதார நிதி அமைப்பு முற்றிலும் டிஜிட்டல் மயமாக இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் பொருள், எவரையும் அணுக வேண்டிய அவசியமில்லை – அனைத்துப் பணிகளும் செல்பேசி மூலமாகவே நிறைவடைந்துவிடும். வாழ்வாதார கூட்டுறவு சங்கத்திற்காக பீகாரின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பான முன்முயற்சிக்காக திரு நிதீஷ் அவர்களையும், பீகாரின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் நான் அன்புடன் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது அதிகாரமளிக்கப்பட்ட பெண்களின் வலுவான அடித்தளத்தில் தான் இருக்கிறது. பெண்களுக்கு அதிகாரமளிக்க அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சிரமங்களையும் குறைப்பது மிகவும் முக்கியமாகும். இதனால் தான் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கையை எளிதாக்க பன்முக முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். மகளிருக்கு கோடிக்கணக்கான கழிப்பறைகளை கட்டியிருப்பதன் மூலம் அவர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிர்ப்பந்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் நாங்கள் கோடிக்கணக்கான நிரந்தர வீடுகளை கட்டியிருக்கிறோம். சாத்தியமான இடங்களில் எல்லாம் அந்த வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படுவதையும் உறுதிசெய்துள்ளோம். ஒரு வீட்டிற்கு பெண் உரிமையாளராக மாறும்போது அவரது குரல் மிகவும் வலுவாக இருக்கிறது.
தாய்மார்களே, சகோதரிகளே,
தூய்மையான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண இல்லந்தோறும் குடிநீர் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். நாங்கள் தொடங்கிய ஆயுஷ்மான் பாரத் திட்டம், 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது. இதன் மூலம் சிகிச்சை பெறுவதில் தாய்மார்களும், சகோதரிகளும் சிரமங்களை சந்திக்க மாட்டார்கள். தற்போது விலையில்லா ரேஷன் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவளிப்பது என்ற கவலையிலிருந்து அனைத்து தாய்மார்களையும் இந்தத் திட்டம் விடுவித்துள்ளது. பெண்களின் வருவாயை அதிகரிக்க அவர்களை லட்சாதிபதி சகோதரிகளாக, ட்ரோன் சகோதரிகளாக, வங்கித் தோழிகளாக மாற்றி வருகிறோம். இந்த முன் முயற்சிகள் அனைத்தும் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்குமான சேவையில் மகத்தான புனிதப் பணிகளாகும். இப்போதைய திட்டத்தின் மூலம் பீகாரின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த இயக்கத்தை வரும் மாதங்களில் இன்னும் கூடுதலாக விரைவுபடுத்தும் என்று உங்களுக்கு நான் இன்று உறுதி அளிக்கிறேன்.
நண்பர்களே,
மகளிர் சக்தியை மதிக்கின்ற, தாய்க்கு மரியாதை செய்கின்ற புனித பூமியாக பீகார் எப்போதும் இருக்கிறது. இங்குள்ள மக்கள் கங்கா நதியை, கோசி நதியை, கந்தாகி நதியை, புன்புன் நதியை வழிபடுகிறார்கள். ஜானகி தெய்வம் இந்த பூமியின் மகள் என்று கூற நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். பீகாரின் கலாச்சாரத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட சியா தியா என்பது அன்னை சீதாவுக்கு உலகில் செய்யப்படும் மரியாதையாக மாறியுள்ளது. சாத்தி நதி முன்பாக தலைவணங்கும்போது ஆசிர்வதிக்கப்பட்டதாக நாம் உணர்கிறோம். இன்னும் சில நாட்களில் நவராத்திரி புனித விழா தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடவுள்ளனர். ஆனால் பீகாரிலும், பூர்வாஞ்சல் பிராந்தியத்திலும் நவ துர்காவுடன், அன்னையின் தெய்வீக வடிவங்களாக ஏழு சகோதரிகளை வழிபடும் சத் பாஹினி பூஜை என்ற பாரம்பரியமும் உள்ளது. இந்தப் பாரம்பரியம் அன்னைக்கான பீகாரின் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அன்னையர்களை பற்றி மிகச்சரியாகவே சொல்லப்பட்டுள்ளது – அவர்கள் குறைவாக உண்கிறார்கள், சிரமத்தில் வாழ்கிறார்கள், இருப்பினும் அனைவரின் கண்ணியத்தையும் பாதுகாக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அது சரி என எவரும் நினைப்பதில்லை. மற்றவர்கள் எவ்வளவுதான் நேசித்தாலும் தாயின் இடத்தை ஒருவராலும் பெற முடியாது.
நண்பர்களே,
எங்கள் அரசுக்கு, தாய்மார்களின் கண்ணியம், அவர்களுக்கான மரியாதை, அவர்களின் சுயமரியாதை என்பவை உயர் முன்னுரிமையாகும். தாய் நமது உலகம், தாய் நமது பெருமிதம். வளமான பாரம்பரியங்களைக் கொண்ட இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் என்ன நடந்தது – என்னாலும், பீகாரின் எனது சகோதரர், சகோதரிகளாலும் மற்ற எவராலும் அதை ஒருபோதும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மேடையிலிருந்து எனது தாயின் மீது அவதூறு வீசப்பட்டது. இந்த அவதூறுகள் எனது தாய் மீதான அவதூறு மட்டுமல்ல, இந்த தேசத்தின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் மீதான அவதூறாகும். எனது இதயம் சுமந்திருக்கும் வலியை பீகார் மக்கள் சுமந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அதனால் தான் இன்று எனக்கு முன்னால் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான தாய்மார்களையும், சகோதரிகளையும் நான் காணும் போது உங்களின் மகனாக என்னையும் கருதுகிறேன். ஏராளமான தாய்மார்களும், சகோதரிகளும் என் முன் நிற்கும்போது உங்களுடன் எனது துயரத்தை பகிர்ந்துகொள்ள எனது மனம் என்னை நிர்ப்பந்தம் செய்கிறது. இதன் மூலம் உங்களின் ஆசிர்வாதங்களுடன் இந்த வலியைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை நான் பெறுவேன்.
தாய்மார்களே, சகோதரிகளே,
சுமார் 50–55 ஆண்டுகளாக சமூகத்திற்கும் தேசத்திற்கும் நான் தொண்டாற்றி வருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நான் அரசியலுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆனது. அதற்கு முன்பு, சமூகத்திற்கு என்னால் முடிந்த சிறிய தொண்டுகளைச் செய்ய முயற்சித்தேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், என் நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும், எங்கெல்லாம், எப்போதெல்லாம், சேவை தேவைப்பட்டதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம், முழு அர்ப்பணிப்புடனும், முயற்சியுடனும் உழைத்திருக்கிறேன். இவை அனைத்திலும், என் தாயின் பங்கு, அவரது ஆசிகள் மகத்தானதாக இருந்துள்ளன. நான் பாரத அன்னைக்குத் தொண்டாற்ற வேண்டியிருந்தது. அதற்காக, என்னைப் பெற்றெடுத்த தாய் என்னை தனது சொந்த எதிர்பார்ப்புகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தார்.
"மகனே, போய், இந்த நாட்டின் கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய், இந்த நாட்டின் ஏழைகளுக்குச் சேவை செய்" என்று கூறி என் தாயார் என்னை வாழ்த்தி அனுப்பினார். என் தாயின் அந்த ஆசிகளால்தான் நான் இந்தப் பாதையில் புறப்பட்டேன். அதனால்தான் இன்று, நான் மிகவும் வேதனையை உணர்கிறேன். ஒவ்வொரு தாயும் தனது மகன் தனக்கு சேவை செய்ய வேண்டும், தனது மகன் வளரும்போது தனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் விரும்புவார். ஆனால், தனக்குச் சேவை செய்யுமாறு சொல்வதற்குப் பதிலாக, உங்களைப் போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என் தாய் என்னை அனுப்பினார். தேசத் தொண்டுக்காக எனக்கு வாழ்த்துகளை வழங்கி, என்னை நாட்டிற்குத் தொண்டாற்ற என் தாய் அனுப்பினார். அப்படிப்பட்ட என் தாய் இப்போது இந்த உலகில் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு, 100 வயதில், அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத என் தாயை, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் மேடையில் மிகவும் மோசமான வார்த்தைகளால் வசை பாடினர். தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் முகங்களை என்னால் பார்க்க முடிகிறது. நீங்களும் மிகவும் வேதனையை உணர்ந்திருக்க வேண்டும். சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது. என் தாய் என்ன தவறு, என்ன குற்றம் இழைத்து, இவ்வளவு அவமானங்களுக்கு ஆளானார்?
நண்பர்களே,
அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளை மகத்தான தியாகத்துடன் வளர்க்கின்றனர். என் முன் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு தாயும் தனது குழந்தைகளை அதே அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துடன் வளர்த்துள்ளனர். ஒரு தாய்க்குத் தன் குழந்தைகளை விட எதுவும் பெரியது அல்ல. என் குழந்தைப் பருவத்திலிருந்தே என் தாயை அந்த வடிவில் பார்த்து வந்தேன். வறுமையில் வாழ்ந்து பல கஷ்டங்களைத் தாங்கிய போதிலும், அவர் எங்கள் குடும்பம், சகோதர, சகோதரிகள் மற்றும் எங்கள் அனைவரையும் வளர்த்தார். மழைக்காலத்திற்கு முன்பு, என் அம்மா கூரைக் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக வீட்டைத் தயார் செய்வார். அப்போதுதான், அவருடைய குழந்தைகள் நிம்மதியாகத் தூங்க முடியும். அவர் நோய்வாய்ப்படுவார். ஆனால் எங்களுக்குத் தெரியப்படுத்த மாட்டார். அவர் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பார். வேலைக்குச் செல்வார். ஒரு நாள் ஓய்வெடுத்தாலும், அவருடைய குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என்று அவருக்குத் தெரியும். அவருடைய கஷ்டங்களின் முழு அளவையும் அவர் என் தந்தைக்குத் தெரியப்படுத்த மாட்டார். அவர் தனக்கென ஒரு புதிய புடவையை வாங்கியதில்லை; அதற்குப் பதிலாக, தன் குழந்தைகளுக்கு ஆடைகளை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்து வைத்தார். என் சொந்தத் தாயைப் பற்றி நான் பேசினாலும், என் நாட்டில் இதுபோன்ற தியாக வாழ்க்கையை வாழும் கோடிக்கணக்கான தாய்மார்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். என் முன் அமர்ந்திருக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் அதே கஷ்டங்களைத் தாங்கியுள்ளனர். ஒரு ஏழைத் தாய் தன் குழந்தைகள் கல்வி, நல்ல குணங்கள் மற்றும் சிறந்த எதிர்காலத்தைப் பெறுவதற்காக தனது முழு வாழ்க்கையையும் உழைத்துக் கொண்டே செலவிடுகிறார். அதனால்தான் ஒரு தாயின் இடம் கடவுள்கள் மற்றும் மூதாதையர்களை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுவும் பீகாரின் பாரம்பரியம். “ஒரு தாயின் இடம் கடவுள்கள் மற்றும் மூதாதையர்களை விட உயர்ந்தது. தனது குழந்தைகளுக்காக, அவள் ஒரு தெய்வீக நிழலைப் போல வாழ்கிறாள். அவர்களை அன்பால் வளர்க்கிறாள், உலகிற்கு ஒரு புன்னகை முகத்தைக் காட்டுகிறாள். ஒரு தாய் இல்லாமல், எந்த உயிரும் ஒருபோதும் செழிக்க முடியாது. அதனால்தான் ஒரு தாய் உண்மையிலேயே சிறந்தவள்! என்று பீகாரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அடிக்கடி சொல்வார்கள்’’.
அதனால்தான் நண்பர்களே,
காங்கிரஸ்-ஆர்ஜேடி மேடையிலிருந்து வீசப்பட்ட இழிவான சொற்கள் என் தாயை நோக்கி மட்டும் செலுத்தப்படவில்லை. அந்த மோசமான விமர்சனங்கள் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மீதும் வீசப்பட்டன.
நண்பர்களே,
ஒரு ஏழைத் தாயின் தியாகம், அவளுடைய மகனின் வலி ஆகியவை செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களில் பிறந்த இளவரசர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களாகும். உயரடுக்குகளைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், தங்கள் வாயில் வெள்ளி மற்றும் தங்கக் கரண்டிகளுடன் பிறக்கின்றனர். நாட்டின் மற்றும் பீகாரின் அதிகாரம் அவர்களின் குடும்ப மரபு என்று அவர்கள் நம்புகிறார்கள். அதிகார நாற்காலி தங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இந்த மகத்தான தேசத்தின் மக்களாகிய நீங்கள், ஒரு ஏழைத் தாயின் கடின உழைப்பாளி மகனை ஆசீர்வதித்து, அவரை மக்களின் தலைமை சேவகனாக்கினீர்கள். இது உயர்குடியினரால் ஜீரணிக்க முடியாத ஒன்று. பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த ஒருவர் முன்னேறுவதை காங்கிரசால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. கடின உழைப்பாளிகளை அவமதிப்பது உயரடுக்குகளைச் சேர்ந்த தங்களது உரிமை என்று அவர்கள் எண்ணுகின்றனர். அதனால்தான் அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வசைபாடுகின்றனர்.
தாய்மார்களே, சகோதரிகளே,
அவர்கள் என் மீது வீசிய, விமர்சனக் கணைகளை, நீங்களும் கேட்டிருக்கலாம், நீங்களும் அதைப் படித்திருக்கலாம். பட்டியல் மிக நீளமானது. என்னை அவமதிப்பதில் அவர்களின் மூத்த தலைவர்கள் யாரும் பின்தங்கியிருக்கவில்லை. இந்த வெறுப்பு, உயரடுக்கின் இந்த ஆணவம், எப்போதும் கடின உழைப்பாளி மனிதனுக்கு எதிரான விமர்சனத்தின் வடிவத்தில் வெளிப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள் என்னை கீழ்த்தரமானவர் என்றும் சில நேரங்களில் அழுக்கு சாக்கடையின் புழு என்றும் சில நேரங்களில் விஷப் பாம்பு என்றும் வசை பாடுகின்றனர். அண்மையில், பீகார் தேர்தல் பேரணியின் போதும், அவர்கள் என்னை மிகவும் கொடூரமான வார்த்தைகளால், விமர்சித்து, மீண்டும் ஒருமுறை தங்கள் உயர்குடி மேட்டிமை மனநிலையை அம்பலப்படுத்தியதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மனநிலையின் காரணமாக, இப்போது அவர்கள் அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாத, இந்த உலகில் இல்லாத, என் மறைந்த தாயாரைக் கூட அவமதிக்கும் அளவுக்கு கீழ்நிலைக்குச் சென்றுள்ளனர். அவர்களது அகந்தை மனப்பான்மைக்கு என் தாயாரும் தப்பவில்லை.
நண்பர்களே,
தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை துன்புறுத்தும் மனநிலை, பெண்களை பலவீனமானவர்களாகக் கருதுகிறது. இந்த மனநிலை சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பொருள்களாகப் பெண்களை கருதுகிறது. அதனால்தான், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்த உண்மையை பீகாரின் என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை விட யார் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்! கட்டுப்படுத்தப்படாத ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சிக் காலத்தில், கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவை சர்வசாதாரணமாக இருந்தன. ராஷ்ட்ரிய ஜனதா தள அரசு கொலையாளிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களையும் பாதுகாத்தது. அந்த ஆட்சியின் சுமையை யார் அதிகம் தாங்க வேண்டியிருந்தது? பீகாரின் தாய்மார்கள், மகள்கள் மற்றும் சகோதரிகள், பீகாரின் பெண்கள் தான் பாதிக்கப்பட்டனர். பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வது பாதுகாப்பாக இல்லை. தங்கள் கணவர்கள் அல்லது மகன்கள் மாலையில் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்ற உத்தரவாதம் அவர்களுக்கு இல்லை. குடும்பங்கள் எப்போது அழியுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தனர். தங்கள் நகைகளை விற்று மீட்க வேண்டியிருக்கும், சில மாஃபியாக்கள் தங்களை வீடுகளில் இருந்து கடத்திச் செல்லக்கூடும், தங்கள் திருமண வாழ்க்கை ஒரே இரவில் சிதைந்துவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சினர். ஒவ்வொரு பெண்ணும் இந்த தொடர்ச்சியான பயத்தில்தான் வாழ்ந்தார்! அந்த இருளில் இருந்து வெளியே வர பீகார் நீண்ட போராட்டத்தை நடத்தியது. பீகார் பெண்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதில், அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிப்பதில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தனர். அதனால்தான், இன்று, ராஷ்ட்ரிய ஜனதா தளமாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, மக்கள் மீது, குறிப்பாக பெண்களாகிய உங்கள் மீது கோபமாக உள்ளனர். பீகாரில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அவர்களது நோக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களைப் பழிவாங்க விரும்புகிறார்கள். உங்களைத் தண்டிப்பதற்கான ஒரு வாய்ப்புக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
நண்பர்களே,
ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள், பெண்கள் முன்னேற வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. அதனால்தான் அவர்கள் பெண்கள் இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழும்போது, அவர்களின் விரக்தி மீண்டும் வெளிப்படுகிறது. அதனால்தான் நாட்டின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை, ஏழை பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த மகளை, காங்கிரஸ், தொடர்ந்து அவமதிக்கிறது.
நண்பர்களே,
பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் அவமதிப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். எந்த வகையான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி இந்த நாட்டு மக்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்.
தாய்மார்களே, சகோதரிகளே,
இன்னும் இருபது நாட்களில், நவராத்திரி பண்டிகை தொடங்கவிருக்கிறது. ஐம்பது நாட்கள் கழித்து, சாத்தி அன்னையை வணங்கி சாத்தி பூஜையை கொண்டாடுவோம். தாய்மார்களை அவமதிப்பவர்களுக்கு, பீகார் மக்கள் முன்னிலையில், நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்: மோடி ஒரு முறை உங்களை மன்னிக்கலாம், ஆனால் பாரத மண் ஒரு தாயின் அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக்கொண்டதில்லை. அதனால்தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ், சத்பாஹினி மற்றும் சாத்தி அன்னையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நண்பர்களே,
பீகார் மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதாவது - இந்த அவமானத்திற்காக இந்த குற்றவாளிகளை பொறுப்பேற்க வைப்பது பீகாரின் ஒவ்வொரு மகனின் பொறுப்பாகும். ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் தலைவர்கள் எங்கு சென்றாலும், எந்த தெரு அல்லது நகரத்திற்குள் நுழைந்தாலும், அவர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒரே குரலைக் கேட்க வேண்டும். ஒவ்வொரு தாயும் சகோதரியும் முன்வந்து அவர்களிடமிருந்து பதில் கோர வேண்டும். மேலும் ஒவ்வொரு தெருவிலிருந்தும் சுற்றுப்புறத்திலிருந்தும், ஒரு உரத்த குரல் ஒலிக்க வேண்டும்: “தாயை அவமானப்படுத்துவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்கள் மரியாதை மீதான தாக்குதல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஆர்ஜேடியின் ஒடுக்குமுறையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். காங்கிரஸின் தாக்குதலை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், பொறுத்துக்கொள்ள மாட்டோம். தாயை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், பொறுத்துக்கொள்ள மாட்டோம்”, என்பது தான் அந்த குரல்.
நண்பர்களே,
நமது நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது நமது அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். அவர்களின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களைக் குறைக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தாய்மார்களே, சகோதரிகளே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் - நாங்கள் ஓய்வில்லாமல் , இடைவிடாமல் உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம். உங்கள் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தொடர்ந்து ஆசி வழங்குங்கள். நாட்டின் ஒவ்வொரு தாயை நான் தலைவணங்கும்போது, மீண்டும் ஒரு பிரார்த்தனையை நினைவு கூர்கிறேன். ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோஷம் எதிரொலித்தது, அதுதான் ‘இல்லந்தோறும் மூவண்ணக் கொடி’, என்பது. அதேபோல, ‘இல்லந்தோறும் சுதேசி’ என்ற முழக்கம் இப்போது காலத்தின் தேவையாக உள்ளது.
தாய்மார்களே, சகோதரிகளே, பாரதத்தை உண்மையிலேயே தன்னிறைவு பெறச் செய்ய, இல்லந்தோறும் சுதேசி என்ற இந்த புதிய மந்திரத்திற்கு உங்கள் ஆசிகள் தேவை. ஒவ்வொரு விற்பனையாளரிடமும் நான் கூறுவதாவது: இது சுதேசி தயாரிப்பு என்ற ஒரு பலகையை பெருமையுடன் காட்சிப்படுத்துங்கள். தற்சார்பு இந்தியாவின் பாதையில் நாம் உறுதியாக முன்னேற வேண்டும். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிகள் இல்லாமல் இந்தப் பயணத்தை முடிக்க முடியாது. பாரதத் தாயின் பிரகாசமான எதிர்காலத்தை உங்கள் ஆசிகள் இல்லாமல் அடைய முடியாது. இந்த உயரடுக்கு குழுவினர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்? "பாரத மாதா யார்? பாரத மாதா என்றால் என்ன?" என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்கள் சென்றுவிட்டார்கள். பாரத மாதாவை அவமதிப்பவர்களுக்கு, மோடியின் தாயை அவமதிப்பது ஒரு எளிதான விஷயம். அதனால்தான் மக்கள் அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம்.
தாய்மார்களே, சகோதரிகளே,
எனக்கு முன்னால் லட்சக்கணக்கான தாய்மார்களையும் சகோதரிகளையும் நான் காணும்போது, உங்கள் ஆசிகள் எப்போதும் என் மீது இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். பல தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு முன்னால் நின்றதும், எனக்குள் சுமந்து வந்த வலியை இயற்கையாகவே உங்கள் முன் கொட்டிவிட்டேன். தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் ஆசிகள் மூலம்தான் இதுபோன்ற வலிகளைத் தாங்கும் வலிமையை நான் பெறுவேன். ஆனால், தனது உடலை விட்டுப் பிரிந்து சென்ற, யாரிடமிருந்தும் எதையும் பெறாத, அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு தாயை அவமதிக்கும்போது, வலி தாங்க முடியாததாகிவிடுகிறது, வேதனை தாங்க முடியாததாகிவிடுகிறது. அதனால்தான், தாய்மார்களே, சகோதரிகளே, என் துக்கத்தை இன்று உங்கள் முன் ஒரு தலைவராக அல்ல, ஒரு மகனாக பகிர்ந்துகொண்டேன். உங்கள் ஆசிகள் ஒவ்வொரு அநீதியையும் தாங்கும் வலிமையையும், ஒவ்வொரு அநீதியையும் கடக்கவும், இந்த நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு சேவை செய்ய எனக்கு புதிய ஆற்றலையும் புதிய உத்வேகத்தையும் அளிக்கும் எனவும் நான் முழுமையாக நம்புகிறேன். இந்த வார்த்தைகளுடன், எனது உரையை நான் நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
***
(Release ID: 2163054 )
SS/SMB/PKV/BR/AG/KR
(Release ID: 2165019)
Visitor Counter : 6
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam