வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், அங்கிகார் 2025 பிரச்சாரத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
Posted On:
05 SEP 2025 2:46PM by PIB Chennai
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், தொலைதூர மக்களை சென்றடையும் பிரச்சாரமான "அங்கிகார் 2025"- ஐ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு. மனோகர் லால், செப்டம்பர் 4 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இத்துறைக்கான இணையமைச்சர் திரு தோகன் சாஹுவும் கலந்து கொண்டார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அங்கிகார் 2025 பிரச்சாரத்தின் நோக்கமானது, நாடு முழுவதும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0 பற்றிய பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதாகும். அங்கிகார் 2025 -ன் மற்றொரு முக்கிய நோக்கம், குறைந்த வருமானப் பிரிவினருக்கு வீட்டுவசதிக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை திட்டம் குறித்து பங்குதாரர்களுக்கு தெரிவிப்பதாகும்.
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டதின் கீழ் , ஒரு கோடியே 20 லட்சம் வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 94.11 லட்சம் உறுதியான வீடுகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அங்கிகார் 2025 பிரச்சாரம் மீதமுள்ள மற்ற வீடுகளை முடிக்க உதவும். 'அனைவருக்கும் வீடு' என்ற குறிக்கோளுடன் இணைந்து, இந்தத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, 2024 செப்டம்பரில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0 ஆகத் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புற இந்தியாவின் ஒரு கோடி கூடுதல் குடும்பங்கள் நகரங்களில் ஒரு உறுதியான வீடு கட்ட அல்லது வாங்க அரசால் ரூ. 2.50 லட்சம் வரை நிதி உதவியைப் பெறும்.
அங்கிகார் 2025 செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு மாத காலத்திற்கு நாட்டில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும். நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் பிற தொடர்பு ஊடகங்கள் மற்றும் சமூக அணிதிரட்டல் மூலம் இது செயல்படுத்தப்படும்.
****
(Release ID: 2164173)
SS/PKV/SG
(Release ID: 2164288)
Visitor Counter : 2