விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் துறையின் நிலை குறித்து அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் ஆய்வு
Posted On:
01 SEP 2025 5:38PM by PIB Chennai
நாடு முழுவதும் வேளாண் துறையின் நிலை குறித்து அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு திரு சிவராஜ் சிங் சௌகான் புதுதில்லியில் இன்று (2025 செப்டம்பர் 01) ஆய்வு மேற்கொண்டார். இன்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் பெய்த மழைப்பொழிவு குறித்தும், வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்தும் துறைசார்ந்த உயர் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்தும் அதிகாரிகள் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் இயற்கை பேரிடர் போன்ற கடினமான தருணங்களில் அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு துணை நிற்கும் என்று அவர் கூறினார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தாம் நேரில் பார்வையிட உள்ளதாகவும் அப்போது மனவேதனைக்குள்ளாகியுள்ள விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன் தேவையான உதவிகளை வழங்குவது குறித்தும் உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தோட்டப்பயிர்கள் மற்றும் உணவு தானியப் பயிர்களின் வளர்ச்சி குறித்து அமைச்சர் அப்போது ஆய்வு மேற்கொண்டார். மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் உற்பத்தி மற்றும் விலைகள் குறித்து கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளில் நிலவரம் குறித்தும் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் நடப்பாண்டின் மழைப்பொலிவு சராசரிக்கும் கூடுதலாக இருக்கும் என்றும், இதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பயனடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு தானிய பயிர் வகைகளுடன் தோட்டப்பயிர் உட்பட ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகள், உயர் வருவாய் ஈட்டக் கூடிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உணவு தானிய உற்பத்தியில் மாற்று வழிகள் மூலம் முழுமையான வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை திரு சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162754
***
SS/SV/AG/DL
(Release ID: 2162842)
Visitor Counter : 2