மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தி 11.5 லட்சம் கோடி ரூபாயாகவும் ஏற்றுமதி 3 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

Posted On: 30 AUG 2025 3:15PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று நொய்டாவில் கைப்பேசி (மொபைல் போன்) சாதனங்களுக்கான இந்தியாவின் முதல் செம்பதக் கண்ணாடி (டெம்பர்டு கிளாஸ்) உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைத்தார். இது அமெரிக்காவின் கார்னிங் இன்கார்பரேட்டட் நிறுவனத்துடன் இணைந்து ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளதுஇது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர டெம்பர்டு கிளாஸை உற்பத்தி செய்யும். இந்த தயாரிப்புகள் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளுக்கு வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மொபைல் போன்களுக்கு டெம்பர்டு கிளாஸ் ஒரு முக்கிய துணைப் பொருள் என்றும், அதன் உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றியிலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலும் ஒரு முக்கிய செயல்பாடாகும் என்றும் கூறினார். மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் சிப்கள் உட்பட ஒவ்வொரு பாகத்தையும் படிப்படியாக இந்தியா தயாரிக்கும் என்றும், இது மின்னணு உற்பத்தியில் நாட்டை உலகளாவிய பங்களிப்பாளராக நிலைநிறுத்தும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் விரைவில் வெளியிடப்படும் என்றும், இது நாட்டின் தற்சார்பை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி ஆறு மடங்கு வளர்ந்து 11.5 லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி மதிப்பை எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புக்கு  ஏற்றுமதி நடைபெறுவதாகவும் இத்துறை மூலம் 25 லட்சம் பேருக்கு நேரடியாக அல்லது  மறைமுகமாக  வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாட்டில் ஒட்டுமொத்த மின்னணு சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருவதாகவும், மதிப்பு கூட்டல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் வடிவமைப்பு வலிமையே அதன் மிகப்பெரிய பலம் என்றும், ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திறன்களை அரசு தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

***

AD/PLM/RJ


(Release ID: 2162299) Visitor Counter : 18