வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் துறையைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி – அமைச்சர் பியூஷ் கோயல்

Posted On: 29 AUG 2025 1:00PM by PIB Chennai

சில நாடுகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், தொழில் துறையைப் பாதிக்காதவாறு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறை தலைவர்கள் முன்னிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று பாரத் பில்ட்கான் 2026-க்கான முன்னோட்டத்தை புதுதில்லியில் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு கோயல், சில நாடுகளின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் ஏற்படும் தேவையற்ற மன அழுத்தத்தையோ அல்லது சிரமங்களையோ தொழில்துறை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். மாற்று சந்தைகள் தேவைப்படும் துறைகளை முன்னிலைப்படுத்துமாறு தொழில்துறை பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார், புதிய வாய்ப்புகளைத் திறக்க வணிக அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள கூட்டாளர்களை அணுகுகிறது என்பதை உறுதி செய்தார்.

உலகளாவிய வெளிப்பாட்டுடன், உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பது ஒரு முன்னுரிமையாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், தேவையை விரைவாகத் தூண்டும். உள்நாட்டு உற்பத்திக்கு வலுவான ஊக்கத்தை அளிக்கும் நடவடிக்கைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தைகளை அணுகுவதிலோ அல்லது உள்நாட்டு வாய்ப்புகளை வலுப்படுத்துவதிலோ, எந்தத் துறையும் பின்தங்கியிருக்காமல் இருக்க தொழில்துறையை ஆதரிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று அமைச்சர் கூறினார். உயர்தர தயாரிப்புகளின் நம்பகமான சப்ளையராக இந்தியா உருவெடுப்பதை உறுதி செய்வதற்காக தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளில் தீவிரமாக பங்கேற்பதை அவர் ஊக்குவித்தார்.

உலகளவில் இந்தியாவின் உயர்ந்து வரும் நிலையை சுட்டிக் காட்டிய திரு கோயல், இந்த ஆண்டு ஏற்றுமதிகள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

சில நிபுணர்கள் மற்றும் ஊடகங்களால் இந்தியாவின் திறன் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று திரு கோயல் வலியுறுத்தினார். சில ஆய்வாளர்கள் நாட்டின் ஆற்றல், இந்திய தொழில்துறையின் மீள்தன்மை, அதன் புத்தொழில்  நிறுவனங்களின் வலிமை மற்றும் அதன் மக்களின் நம்பிக்கை ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிடும் அதே வேளையில், வேறுபட்ட கதையைச் சொல்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். கொவிட் பெருந்தொற்று, அணுசக்தித் தடைகள் போன்ற சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது, இன்று அது வலுவாக உள்ளது, உலகளாவிய வர்த்தகத்தில் அதன் பங்கை விரிவுபடுத்தத் தயாராக உள்ளது என்றார் அவர்.

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வீடுகள் தேவைப்படும் கடுமையான வீட்டுவசதி பற்றாக்குறை குறித்தும் அமைச்சர் கவனத்தை ஈர்த்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய நிறுவனங்களுக்கு  அவர் அழைப்பு விடுத்தார். ஆஸ்திரேலியா இந்தியாவின் நிதி ஒத்துழைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பணியாளர் ஆதரவிற்கு திறந்திருக்கிறது என்று கூறினார். இந்திய வல்லுநர்கள் ஆஸ்திரேலிய தரநிலைகளை பூர்த்தி செய்ய பயிற்சி மற்றும் சான்றிதழ் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. "இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், நம்மை மட்டுமே குறை சொல்ல வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார், இது இந்தியாவின் கட்டுமான மற்றும் நிதித் துறைகளுக்கு ஒரு சாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, லிச்சென்ஸ்டீன், ஐஸ்லாந்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவின் தடையற்ற  வர்த்தக ஒப்பந்தங்களின்  விரிவடைந்து வரும் வலையமைப்பை திரு கோயல் விளக்கினார்.  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள், கட்டுமானம், எஃகு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் போன்ற இந்தியத் தொழில்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை மேலும் திறக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த பல வளர்ந்த நாடுகள் ஆர்வமாக உள்ளன என்றும், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  போன்ற நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற  வர்த்தக ஒப்பந்தங்களில்  ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளன என்றும் திரு கோயல் தெரிவித்தார்.  இத்தகைய கூட்டாண்மைகள் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய சந்தை ஒருங்கிணைப்புக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், அதன் தூய்மையான எரிசக்தி மற்றும் உற்பத்தி திறன்களை அதிகரிப்பதில் நாட்டின் முயற்சிகளை நிறைவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற பாரத் பில்ட்கானின் பதிப்பிற்கு ஏற்பாட்டாளர்களை வாழ்த்திய திரு கோயல், குறைந்தபட்ச அரசு ஈடுபாட்டுடன் இந்த திட்டம் இவ்வளவு வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது என்றார். பாரத் பில்ட்கான் 2026- ஐ ஒரு தன்னிறைவு பெற்ற, தொழில்துறை தலைமையிலான முயற்சியாக மாற்ற அவர் அழைப்பு விடுத்தார்.

***

 

(Release ID: 2161777)

AD/PKV/DL


(Release ID: 2162036) Visitor Counter : 11