பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் ஹன்சல்பூரில் பசுமை இயக்கம் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுசுகியின் முதல் உலகளாவிய பேட்டரி மின்சார வாகனமான இ விட்டாரா-வை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம் என்ற மந்திரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் இன்று முதல் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். சக்திமிக்க பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தியும் இன்று தொடங்குகிறது: பிரதமர்

இந்தியாவில் ஜனநாயகத்தின் சக்தி, மக்கள்தொகையின் நன்மை மற்றும் திறமையான பணியாளர்களின் மிகப் பெரிய குழு உள்ளது. இது ஒவ்வொரு கூட்டாண்மைக்கும் வெற்றி சூழ்நிலையாக அமைகிறது: பிரதமர்

இந்தியாவில் தயாரிப்போம்! என்று கூறும் மின்சார வாகனங்களை உலகம் இயக்கும்: பிரதமர்

இந்தியாவில் தயாரிப்போம்! என்ற முன்முயற்சி உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது: பிரதமர்

வரவிருக்கும் காலங்களில், எதிர்காலத் தொழில்களில் கவனம் செலுத்தப்படும்: பிரதமர்

Posted On: 26 AUG 2025 1:23PM by PIB Chennai

செமிகண்டக்டர் துறையில் இந்தியா முன்னேறி வருகிறது, நாட்டில் 6 ஆலைகள் அமைக்கப்பட உள்ளன: பிரதமர்

குஜராத்தின் ஹன்சல்பூரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பசுமை இயக்க முயற்சிகளைத் தொடங்கி வைத்தார். பசுமை எரிசக்தித் துறையில் தன்னிறைவை எட்டும் வகையில், பெரிய முன்னேற்றங்களை  மேற்கொள்வதற்கு இது உதவும். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே  உரையாற்றிய பிரதமர், கணேஷ் த்சவத்தின் பண்டிகை உற்சாகத்தின் மத்தியில்,  'இந்தியாவில் தயாரிப்போம்' பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இது "இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம்" என்ற பகிரப்பட்ட இலக்கை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்குச் சான்றாகும்  என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் இன்று முதல் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று திரு. மோடி தெரிவித்தார். நாட்டில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவுக்கும் இது ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவருகிறது என்பதை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், ஜப்பானுக்கும், சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியாவின் வெற்றிக் கதைக்கான விதைகள் 12-13 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், 2012 ஆம் ஆண்டு, தாம் முதலமைச்சராக இருந்த காலத்தில், ஹன்சல்பூரில் மாருதி சுசுகிக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாக திரு. மோடி கூறினார். அந்த நேரத்திலும் கூட, தற்சார்பு இந்தியா  மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்பதுதான் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது என்று அவர் கூறினார்.  அந்த ஆரம்பகால முயற்சிகள் இப்போது நாட்டின் தற்போதைய தீர்மானங்களை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மறைந்த திரு. ஒசாமு சுசுகியின் இதயப்பூர்வமான நினைவை வெளிப்படுத்திய பிரதமர், இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கும் பெருமையைப் பெற்றதாகக் கூறினார். இந்தியாவுக்காக திரு. ஒசாமு சுசுகி கண்ட தொலைநோக்குப் பார்வையின் பரந்த விரிவாக்கத்தைக் காண்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்தியா ஜனநாயகத்தின் வலிமையையும் மக்கள்தொகையின் நன்மையையும் கொண்டுள்ளது; இந்தியாவில் திறமையான பணியாளர்களின் பரந்த குழுவும் உள்ளது.  இது ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி சூழ்நிலையை உருவாக்குகிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார்.  சுசுகி ஜப்பான் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்கிறது என்றும், இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் ஜப்பானுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது இந்தியா-ஜப்பான் உறவுகளின் வலிமையை மட்டுமல்லாமல், இந்தியாவில் உலகளாவிய நிறுவனங்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் மேக் இன் இந்தியாவின் பிராண்ட் தூதர்களாக திறம்பட மாறிவிட்டதாக அவர் கூறினார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாருதி சுசுகி இருந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், இன்று முதல் மின்சார வாகன ஏற்றுமதியும் அதே அளவில் தொடங்கும் என்று அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான நாடுகளில் இயங்கும் மின்சார வாகனங்கள் பெருமையுடன் “இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என்ற முத்திரையைப் பெறும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

மின்சார வாகனங்களின்  மிகவும் முக்கியம் வாய்ந்த உபகரணம் பேட்டரி என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்தியாவில் பேட்டரிகள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறினார். மின்சார வாகனங்களின் உற்பத்தியை வலுப்படுத்த உள்நாட்டில் பேட்டரி உற்பத்தியை தொடங்குவது இந்தியாவிற்கு அவசியமாக இருந்தது. இந்த தொலைநோக்கின் அடிப்படையில், 2017-ம் ஆண்டு டிடிஎஸ்ஜி பேட்டரி ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை திரு மோடி நினைவு கூர்ந்தார். டிடிஎஸ்ஜி மூலம் புதிய முன்முயற்சியின் கீழ், 3 ஜப்பான் நிறுவனங்கள் முதல்முறையாக இந்தியாவில் பேட்டரி செல்கள் உற்பத்தியை இணைந்து தொடங்கவுள்ளன. பேட்டரி செல் எலக்ட்ரோடும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இந்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் தற்சார்புக்கு அதிகாரம் அளிக்கும். ஹைபிரிட் மின்சார வாகன உற்பத்தியின் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்திற்கு அவர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மின்சார வாகனங்கள் மாற்றுத் தேர்வாக பார்க்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், மின்சார வாகனங்கள் பல்வேறு சவால்களுக்கு உரிய தீர்வுகளை அளிப்பதாக நம்பிக்கைத் தெரிவித்தார்.  கடந்த ஆண்டின் தமது சிங்கப்பூர் பயணம் குறித்து நினைவு கூர்ந்த அவர், பழைய வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகளை ஹைபிரிட் மின்சார வாகனங்களாக மாற்றுமாறு பரிந்துரைத்தது குறித்து குறிப்பிட்டார். இந்த சவாலை ஏற்றுக் கொண்டு வெறும் 6 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை தொடங்கிய மாருதி சுசுகி நிறுவனத்தை திரு மோடி பாராட்டினார். ஹைபிரிட் அவசரகால ஊர்தியை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தது குறித்து பகிர்ந்து கொண்ட அவர், இந்த ஹைபிரிட் அவசரகால ஊர்திகள் பிரதமரின் இ-டிரைவ்  திட்டத்தை ஒத்துள்ளதாகும் என்று கூறினார். இந்த 11,000 கோடி ரூபாய் திட்டத்தின் கீழ், மின்சார அவசரகால ஊர்திகளுக்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஹைபிரிட் மின்சார வாகனங்கள் மாசுவைக் குறைத்து பழைய வாகனங்களை மாற்றுவதற்கு உகந்த தேர்வை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தூய்மை எரிசக்தி, தூய்மை போக்குவரத்து ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக குறிப்பிட்ட திரு மோடி, இது போன்ற நடவடிக்கைகள் மூலம், தூய்மை எரிசக்தி மற்றும் தூய்மைப் போக்குவரத்துக்கான நம்பகத்தகுந்த கேந்திரமாக இந்தியா விரைவாக வளர்ச்சியடைந்து வருவதாக கூறினார்.

உலக நாடுகள் விநியோகச் சங்கிலி இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கொள்கை முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது  என்று பிரதமர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில், நாட்டிற்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்தவுடன், இந்த மாற்றத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தைத் தொடங்கி, உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்படுவதை எடுத்துரைத்தார். இந்தியா தனது உற்பத்தித் துறையை திறமையானதாகவும், உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்ற பாடுபட்டு வருவதாக அவர் கூறினார். இந்த தொலைநோக்கு பார்வையை ஆதரிக்க தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் பிளக்-அண்ட்-ப்ளே உள்கட்டமைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பல துறைகளில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பெரிய சீர்திருத்தங்கள் மூலம், முதலீட்டாளர்கள் எதிர்கொண்ட நீண்டகால சவால்கள் களையப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட திரு மோடி, இந்த சீர்திருத்தங்கள், முதலீட்டாளர்கள் எளிதாக இந்திய உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய கொண்டு வரப்பட்டதாக  தெரிவித்தார். இம்முயற்சிகளின் உறுதியான பயன்கள் குறித்து எடுத்துரைத்த அவர், இந்தப் பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் மின்னணு உற்பத்தி சுமார் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறினார். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, மொபைல் போன் உற்பத்தி 2,700 சதவீதம்  அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியும்  200 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறினார். இந்த வெற்றி அனைத்து மாநிலங்களையும் உத்வேகம் அடையச் செய்வதாகவும் சீர்திருத்தங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவி ஒட்டுமொத்த நாடும் பயனடைகிறது.  உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துவதுடன் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை வகுக்குமாறு திரு மோடி மாநில அரசுகளை வலியுறுத்தினார்.

இந்தியா இத்துடன் நின்றுவிடாது; மிகச்சிறப்பாக செயல்படும் துறைகளில் மேலும் மகத்தான மேன்மைகளை அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். முன்னேற்றத்தை செயல்படுத்த உற்பத்தித்துறை இயக்கத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. எதிர்காலத்திற்கு தேவையான தொழில்துறைகளை நோக்கி இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது என்று அவர் கூறினார். செமிகண்டக்டர் துறையில் எவ்வாறு பணிகள் வேகமடைந்துள்ளன என்பது பற்றி பேசிய அவர், நாடு முழுவதும் 6 உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை மேலும் அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று திரு மோடி கூறினார்.

அரிய கனிமங்களின் பற்றாக்குறை காரணமாக வாகனத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என்று திரு மோடி மேலும் கூறினார். இந்தத் துறையில் தேசிய திறன்களை வலுப்படுத்த தேசிய முக்கிய கனிம இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த இயக்கத்தின் கீழ் முக்கிய கனிமங்களை அடையாளம் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1200 கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றார்.

அடுத்த வாரம் ஜப்பான் செல்லவிருப்பதாக தெரிவித்த பிரதமர், இந்தியா ஜப்பான் இடையேயான உறவு ராஜீய உறவுகளுக்கும் அப்பாற்பட்டது என்றார். இது கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையில் வேரூன்றியிருப்பதாக  அவர் கூறினார். தத்மது முன்னேற்றத்தில் இவை ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். மாருதி சுசுகியுடன் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது அதிவேக புல்லட் ரயில் போக்குவரத்தை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியா ஜப்பான்  கூட்டாண்மையில் தொழில்துறை சக்தி என்பது குஜராத்தில் தொடங்கியதாக திரு மோடி எடுத்துரைத்தார். 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டில் ஜப்பான் முக்கிய பங்குதாரராக இருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஜப்பானியர்களை குஜராத் மக்கள் அன்புடன் வரவேற்றதை அவர் பாராட்டினார். எளிதாக புரிந்துகொள்வதற்காக தொழில்துறை தொடர்பான விதிமுறைகள் ஜப்பான் மொழியில் அச்சிடப்பட்டதாக  அவர் கூறினார். ஜப்பானிய விருந்தினர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதை உறுதிசெய்ய ஜப்பான் உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கோல்ஃப் விளையாட்டின் மீதான ஜப்பானியர்களின் ஆர்வத்தை அங்கீகரித்து புதிதாக 7-8 கோல்ஃப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி கல்விக்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாக திரு மோடி மேலும் தெரிவித்தார்.

இந்தியா-ஜப்பான் இடையே மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இருநாடுகளும் திறன் மேம்பாடு மற்றும் மனிதவளத் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இத்தகைய முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்கவும் இளையோர் பறிமாற்றத் திட்டங்களை அதிகரிக்கவும் மாருதி சுசுகி போன்ற  நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார்.

வரும் ஆண்டுகளில் அனைத்து முக்கியத் துறைகளிலும்  முன்னேற்றம் தொடர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர்இன்றைய முயற்சிகள் 2047-க்குள்  வளர்ச்சியடைந்த இந்தியா என்பதற்கான அடித்தளத்தை மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த இலக்கை எட்டுவதில் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக ஜப்பான் நீடிக்கும் என்று கூறிபிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.

பின்னணி

அகமதாபாத்தின் ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டார் ஆலையில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மைல்கல் முயற்சிகள் அனைத்தும் சேர்ந்து, பசுமை இயக்கத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக் காட்டுகின்றன. அதே நேரத்தில் இந்தியாவில் தயாரிப்போம், தற்சார்பு இந்தியா ஆகியவற்றிற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை மேம்படுத்தும்

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பிரதமர், சுசுகியின் முதல் உலகளாவிய பேட்டரி மின்சார வாகனமான இ விதாரா (“e VITARA) வை தொடங்கி வைத்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பேட்டரி மின்சார வாகனங்கள் ஐரோப்பா, ஜப்பான் போன்ற மேம்பட்ட சந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த மைல்கல் அம்சத்தின் மூலம், இந்தியா இனி சுசுகியின் மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும்.

பசுமை எரிசக்தித் துறையில் தற்சார்பு அடைவதற்கான பெரிய முன்னேற்றமாக, குஜராத்தில் உள்ள டிடிஎஸ் லித்தியம்-அயன் பேட்டரி ஆலையில் ஹைபிரிட் பேட்டரி மின்முனைகளின் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்குவதன் மூலம் இந்தியாவின் பேட்டரி சூழல் அமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார். தோஷிபா, டென்சோ, சுசுகி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்த ஆலை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுத்தமான எரிசக்தி கண்டுபிடிப்புகளை அதிகரிக்கும். இந்த முயற்சி, பேட்டரி மதிப்பில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும்.

*****

(Release ID: 2160822)

AD/SMB/PKV/IR/KPG/AG/SG

 


(Release ID: 2160881)