பிரதமர் அலுவலகம்
புது தில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது - விரைவில் உலக அளவில் மூன்றாவது பெரிய நாடாக மாறும்: பிரதமர்
இந்தியா தனது வலிமையுடன், உலகிற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது: பிரதமர்
விண்வெளித் துறையில் அரசு புதிய ஆற்றலைப் புகுத்துகிறது: பிரதமர்
சீர்திருத்தங்கள் நெருக்கடியால் மேற்கொள்ளப்படும் விஷயம் அல்ல, மாறாக அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டின் விஷயம்: பிரதமர்
காலத்தின் போக்கை வளைக்கும் வலிமையைக் கூட இந்தியா கொண்டுள்ளது: பிரதமர்
Posted On:
23 AUG 2025 10:12PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், உலகத் தலைவர்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பிரதமர் வரவேற்றார். இந்த மன்றக் கூட்டத்தை நடத்த மிகவும் சரியான நேரம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். கடந்த வாரம் தான் செங்கோட்டையில் இருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த மன்றம் இப்போது அந்த உணர்வைப் பெருக்கும் சக்தியாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
உலக சூழ்நிலைகள், புவிசார் பொருளாதாரம் குறித்து இந்த மன்றத்தில் விரிவான விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறிய பிரதமர், உலகச் சூழலில் பார்க்கும்போது இந்தியாவின் பொருளாதாரத்தின் வலிமையை உணர முடியும் என்று வலியுறுத்தினார். இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்றும், விரைவில், இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு எதிர்காலத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்களின் மதிப்பீடுகளை திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் அடையப்பட்ட பெரிய பொருளாதார நிலைத்தன்மையே இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மீள்தன்மைக்குக் காரணம் என்று அவர் கூறினார்.
இந்திய நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் இருந்து சாதனை அளவில் நிதி திரட்டுகின்றன என்றும், அதே நேரத்தில் இந்திய வங்கிகள் முன்பை விட வலுவாக உள்ளன என்றும், பணவீக்கம் மிகக் குறைவாக உள்ளது என்றும், வட்டி விகிதங்களும் குறைவாக உள்ளன என்றும் அவர் கூறினார். இந்தியாவின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.
பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருக்கும்போது, அதன் அடித்தளம் உறுதியாக இருந்தால், அதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் தெரியும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 2017-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவில் உள்ளது என்றும், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில், இந்தியாவின் சூரிய மின்னுற்பத்தி தொகுதி உற்பத்தி திறன் தோராயமாக 2.5 ஜிகா வாட் ஆக இருந்தது என்றும், அண்மையில் இந்த திறன் இப்போது 100 ஜிகா வாட் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் இந்தியாவின் கடன் மதிப்பீட்டை மேம்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அவை எவ்வாறு கடந்து போகும் என்பதை அவர் விளக்கினார். இந்தியாவில் முந்தைய அரசுகள் தொழில்நுட்பம், தொழில்துறையில் இதுபோன்ற பல வாய்ப்புகளைத் தவறவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். யாரையும் விமர்சிக்க தான் இங்கு வரவில்லை என்றும், இருப்பினும், ஜனநாயகத்தில், ஒப்பீட்டு பகுப்பாய்வு தேவை என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.
முந்தைய அரசுகள் நாட்டை வாக்கு வங்கி அரசியலில் சிக்க வைத்திருந்ததாகவும், தேர்தல்களுக்கு அப்பால் சிந்திக்கும் தொலைநோக்குப் பார்வை அவர்களிடம் இல்லை என்றும் பிரதமர் கூறினார். அதிநவீன தொழில்நுட்பத்தை வளர்ப்பது முன்னேறிய நாடுகளின் களம் என்றும், தேவைப்படும்போது இந்தியா அதை இறக்குமதி செய்யலாம் என்றும் அந்த அரசுகள் நம்பியதாக அவர் குறிப்பிட்டார். இந்த மனநிலையால் இந்தியா பல ஆண்டுகளாக பல நாடுகளை விட பின்தங்கியதாக அவர் குறிப்பிட்டார். உலகளவில் இணைய சகாப்தம் தொடங்கியபோது, அப்போதைய அரசு முடிவெடுக்காமல் இருந்தது என்றும் குறிப்பிட்டார். 2ஜி சகாப்தத்தில், நடந்த நிகழ்வுகள் அனைவருக்கும் நன்கு தெரியும் என்றும் 3ஜி, 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்தது என்றும் அவர் எடுத்துரைத்தார். 2014க்குப் பிறகு, இந்தியா தனது அணுகுமுறையை மாற்றி, எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் முன்னேறத் தீர்மானித்ததாக அவர் கூறினார். இந்தியா தனது முழு 5ஜி சேவையையும் உள்நாட்டிலேயே உருவாக்கியதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியா இப்போது 6ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்தியா 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பே செமிகண்டக்டர் உற்பத்தியைத் தொடங்கியிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவும் அந்த வாய்ப்பைத் தவறவிட்டதாகவும், பல ஆண்டுகளாக அதுவே தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது என்றும், செமிகண்டக்டர் தொடர்பான தொழிற்சாலைகள் இந்தியாவில் வரத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்தியாவின் விண்வெளித் துறையின் முன்னேற்றங்கள் குறித்து உரையாற்றிய பிரதமர், 2014 க்கு முன்பு இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் எண்ணிக்கையிலும் நோக்கத்திலும் குறைவாகவே இருந்தன என்று கூறினார். 1979 முதல் 2014 வரை, முப்பத்தைந்து ஆண்டுகளில் இந்தியா நாற்பத்திரண்டு செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணுக்கு ஏவியது என்பதை அவர் குறிப்பிட்டார். கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியா அறுபதுக்கும் மேற்பட்ட ஏவுதல்களை முடித்துள்ளது என்பதை அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். வரும் காலத்தில் இன்னும் பல பயணங்கள் வரிசையாக உள்ளன என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவில் சீர்திருத்தங்கள் கட்டாயத்தினாலோ அல்லது நெருக்கடியினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதை அவர் எடுத்துரைத்தார். சீர்திருத்தங்கள் இந்தியாவின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும் என்பதை அவர் விளக்கினார்.
அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், எதிர்க்கட்சிகளின் ஏராளமான இடையூறுகள் இருந்தபோதிலும், சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
கப்பல் போக்குவரத்து, துறைமுகங்களை நிர்வகிக்கும் சட்டங்கள் திருத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார். விளையாட்டுத் துறையிலும் புதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார். தேவையற்ற சட்டங்களை ரத்து செய்தல், விதிகள், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், வளர்ந்த இந்தியாவின் அடித்தளம் சுயசார்பு இந்தியா என்று குறிப்பிட்டார். அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
எரிசக்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலகம் கண்டு வருகிறது என்பதை விளக்கிய திரு நரேந்திர மோடி, 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது மொத்த மின் திறனில் 50 சதவீதத்தை புதைபடிவமற்ற எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது என்பதை சுட்டிக் காட்டினார். ஆனால் இந்த இலக்கு ஏற்கெனவே 2025-ம் ஆண்டிலேயே எட்டப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
முந்தைய அரசுகளின் கொள்கைகள் இறக்குமதியில் அதிக கவனம் செலுத்தி வந்தன எனவும், இப்போது தற்சார்பு கொண்ட இந்தியா ஏற்றுமதியில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டில், இந்தியா ₹4 லட்சம் கோடி மதிப்புள்ள விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ததாக அவர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் ₹50,000 கோடியாக இருந்ததை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, இப்போது ஒரே ஆண்டில் ₹1.2 லட்சம் கோடி மதிப்புள்ள ஆட்டோமொபைல் பாகங்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்பதை எடுத்துரைத்தார். இந்தியா தற்போது மெட்ரோ ரயில் பெட்டிகள், ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சி ஒரு முக்கிய தூண் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், ஆராய்ச்சியை ஊக்குவிக்க அரசு விரைவாக செயல்பட்டு வருவதாகவும், தேவையான கொள்கைகள் மற்றும் தளங்களை தொடர்ந்து உருவாக்கி வருவதாகவும் எடுத்துரைத்தார்.
சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தால் இந்தியா வழிநடத்தப்படுவதாக கூறிய பிரதமர் இந்தியா இப்போது காலத்தின் போக்கை கூட மாற்றியமைக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று கூறித் தமது உரையை நிறைவு செய்தார்.
****
(Release ID: 2160243)
AD/PLM/RJ
(Release ID: 2160381)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam