உள்துறை அமைச்சகம்
அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு - தில்லியில் தொடங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும் - குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றின் செயல்பாட்டை சீர்குலைக்கக் கூடாது : திரு அமித் ஷா
Posted On:
24 AUG 2025 5:46PM by PIB Chennai
சுதந்திரப் போராட்ட வீரர் விட்டல்பாய் படேல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்திய மத்திய அவையின் முதல் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 100-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் தில்லி சட்டப் பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அகில இந்திய அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்) மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (24.08.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், டெல்லி சட்டமன்றத் தலைவர் திரு விஜேந்தர் குப்தா, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, தில்லி துணை நிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாநில/யூனியன் பிரதேச சட்டமன்ற சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், சட்டமன்ற மேலவைகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளர். இந்த நிகழ்ச்சியின்போது, தில்லி சட்டமன்ற வளாகத்தில் விட்டல்பாய் படேலின் வாழ்க்கை குறித்த கண்காட்சியையும் மத்திய உள்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்த நாளில்தான், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் விட்டல்பாய் படேல் மத்திய அவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என கூறினார். இந்தியர்கள் தலைமையிலான அவை வரலாற்றை அவர்தான் தொடங்கினார் என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார்.
தில்லி சட்டமன்றத்தில் புகழ்பெற்ற பிரமுகர்கள் ஆற்றிய உரைகளைத் தொகுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் நூலகங்களிலும் கிடைக்கச் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தில்லி சட்டமன்றத் தலைவரிடம் கேட்டுக் கொண்டார். இதன் மூலம், சட்டமன்ற உறுப்பினர்களும் இன்றைய இளைஞர்களும் தில்லி சட்டமன்றத்தில் சுதந்திர உணர்வு எவ்வாறு தூண்டப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என அவர் கூறினார். விட்டல்பாய் படேலின் வாழ்க்கை குறித்த ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியை தில்லி சட்டமன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.
இன்றைய ஜனநாயகத்தை வலுப்படுத்தி, இந்தியாவின் சட்டமன்ற மரபுகளுக்கு அடித்தளமிட்டவர் விட்டல்பாய் என்று அமைச்சர் கூறினார்.
விட்டல்பாய் படேல் அவைத் தலைவரகப் பதவியேற்றதன் 100-வது ஆண்டு நிறைவின் இந்த தருணம், நமது அவைகளில் சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை மேம்படுத்துவதற்கு நாம் அனைவரும் பாடுபட ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நியாயமான விவாதங்களை உறுதி செய்யவும், சட்டமன்றம், மக்களவை, மாநிலங்களவை ஆகியவை விதிகளின்படி அவை நடவடிக்கைகள் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா பல அதிகார மாற்றங்களைக் கண்டதாகவும், ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தப்படாமல் அமைதியான மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கு முதன்மையான காரணம், நமது அவை செயல்முறையை நாம் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம் எனவும் நமது அமைப்பில் சரியான நேரத்தில் சீர்திருத்தங்களையும் செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
அவை நடவடிக்கைகள் ஞானம், கருத்துக்கள், சட்டம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஞானம் கருத்துக்களை உருவாக்குகிறது எனவும் கருத்துக்கள் சட்டத்திற்கு வழிவகுக்கும் எனவும் இது சட்டமன்றத்தின் முதன்மை செயல்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார். எந்தவொரு சட்டத்தின் இறுதி நோக்கமும் பொது நலனாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கட்சி சார்ந்த நலன்களை விட தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே ஜனநாயகத்தின் மிக உயர்ந்த கண்ணியமான உயரங்களை அடைவதற்கான ஒரே பாதை என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறவில்லை என்றால், அந்த அவைகள் வெறும் உயிரற்ற கட்டடங்களாகவே மாறிவிடும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
மக்களவை ஜனநாயகத்தின் உந்துசக்தி என்றும், இங்கு ஆரோக்கியமான மரபுகள் நிறுவப்படும்போது, தேசியக் கொள்கைகள் வகுக்கப்படும்போது, நாட்டின் நலனுக்காக சட்டங்கள் உருவாக்கப்படும்போது, நாட்டின் பயணம் இயல்பாகவே தெளிவாக அமையும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.
***
(Release ID: 2160341)
AD/PLM/RJ
(Release ID: 2160374)