பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 27 JUN 2025 10:03PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். தனது பயணத்தின் முதல் கட்டமாக 2025 ஜூலை 2-ம் தேதி கானா செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் கானா செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் போது அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்க உள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதார அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை குறித்தும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இருதரப்பு நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும் இருதலைவர்களும் பரஸ்பரம் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக டிரினிடாட் & டொபாகோ அதிபர் திருமதி கம்லா பெர்சத் பிசிசரின் அழைப்பை ஏற்று பிரதமர் அங்கு செல்கிறார். முதல்முறையாக இந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது கட்டமாக அர்ஜென்டினா செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா – அர்ஜென்டினா நாடுகளிடையே பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய், எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க உள்ளார்.

4-வது கட்டமாக பிரேசில் செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விவகாரங்கள் உட்பட சர்வதேச அளவிலான நிர்வாக நடைமுறைகள், அமைதி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப பயன்பாடு, பருவநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகள், சுகாதாரம், பொருளாதாரம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பின்னர் பிரேசில் தலைநகர் பிரேசிலியா செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபருடன் பரஸ்பரம் இருநாடுகளிடையேயான வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கிறார்.

தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக நமீபியா செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர்  டாக்டர் நெடும்போ நாண்டி டெய்ட்வா-வைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பயணத்தின் போது அவர் அந்நாட்டு முதல் அதிபரான மறைந்த டாக்டர் சாம் நுஜோமாவிற்கு மரியாதை செலுத்துகிறார்.  பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

***

(Release ID: 2140314   )

AD/SV/KPG/KR

 


(Release ID: 2159005) Visitor Counter : 8