நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சென்னையில் தக்காளியின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 50 ; இது அகில இந்திய சராசரி சில்லறை விலையைவிடக் குறைவு
Posted On:
08 AUG 2025 2:36PM by PIB Chennai
நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் காணப்படும் தக்காளியின் சில்லறை விலை, அடிப்படை தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு அல்லது உற்பத்தி பற்றாக்குறையை விட, தற்காலிக உள்ளூர் காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு 2025 , ஆகஸ்ட் 4 முதல் தில்லியின் ஆசாத்பூர் மண்டியிலிருந்து தக்காளியைக் கொள்முதல் செய்து, குறைந்தபட்ச லாபத்துடன் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. இதுவரை, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, கொள்முதல் செலவைப் பொறுத்து, ஒரு கிலோவிற்கு ரூ. 47 முதல் ரூ. 60 வரையிலான சில்லறை விலையில் 27,307 கிலோ தக்காளியை விற்பனை செய்துள்ளது.
தில்லியில் தக்காளியின் தற்போதைய சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 73 ஆக உள்ளது. இதற்கு ஜூலை கடைசி வாரத்திலிருந்து நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் பெய்த கனமழையே முதன்மைக் காரணமாகும். இதற்கு நேர்மாறாக, சமீபத்திய வாரங்களில் அசாதாரண வானிலை நிலவரங்களை எதிர்கொள்ளாத சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இதுபோன்ற விலை ஏற்றம் காணப்படவில்லை. சென்னையில் தக்காளியின் தற்போதைய சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 50 ஆகவும்,மும்பையில் ரூ. 58 ஆகவும் உள்ளது. இது தில்லியில் உள்ள விலையை விட கணிசமான அளவில் குறைவாகும். தற்போது, தக்காளியின் அகில இந்திய சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.52 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.54 என இருந்தது.
முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல், இந்தப் பருவமழைக் காலத்தில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற முக்கிய காய்கறிகளின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட அதிக உற்பத்தி என்பது போதுமான விநியோகத்தையும், கடந்த ஆண்டை விட கணிசமாகக் குறைந்த சில்லறை விலையையும் உறுதி செய்கிறது. இந்த ஆண்டு, விலையை நிலையாக வைத்திருக்க அரசு 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது. இதனை விடுவிப்பது 2025 செப்டம்பர் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
****
(Release ID: 2154078)
SMB/DL
(Release ID: 2154361)