தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
புதிய சோட்டா பீம் காமிக் தொடர் புது தில்லியில் வெளியிடப்பட்டது
Posted On:
08 AUG 2025 3:22PM by PIB Chennai
தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு, புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் புதிய சோட்டா பீம் காமிக் தொடரை இன்று வெளியிட்டது. இது இந்திய உள்ளடக்க உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் கலாச்சார ரீதியாக வேரூன்றிய கதைகளை இளம் வாசகர்களுக்குக் கொண்டு செல்வதற்கும் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துகிறது. வெளியீட்டு நிகழ்வில் இந்தியாவின் பிரபலமான குழந்தை கதாபாத்திரங்களில் ஒன்றான சோட்டா பீமின் படைப்புப் பயணம் மற்றும் கருப்பொருள் குறித்த விவாதம் இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய வெளியீட்டுப் பிரிவின் முதன்மைத் தலைமை இயக்குநர் திரு பூபேந்திர கைந்தோலா, “நாம் சொல்லும் கதைகள், குறிப்பாக நம் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள், இந்தியத் தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியக் கதாபாத்திரங்களுடன் நமது தாத்தா பாட்டி படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கதை சொன்ன நாட்டில், அந்தக் கதை சொல்லும் மரபுகளை வெளியீட்டுப் பிரிவு பார்க்காமல் இருக்க முடியாது. தாய்மொழியில் அவற்றைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறோமோ, அவ்வளவுக்கு நமது புதிய தலைமுறையின் வளர்ச்சிக் கதை வேரூன்றி இருக்கும். மனித மாண்புகள் மற்றும் தைரியத்தின் செய்தியை இந்தியக் கதைகள் விட்டுச் செல்லும்போது, அவை எல்லா மூலைகளையும் சென்றடைய வேண்டும்” என்றார்.
கிரீன் கோல்ட் அனிமேஷன் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த காமிக் தொடர், டோலக்பூர் என்ற கற்பனை ராஜ்யத்தில் துணிச்சலான, கருணையுள்ள சிறுவனான பீமின் சாகசங்களைக் கூறுகிறது. அசாதாரண வலிமைக்குப் பெயர் பெற்ற பீம் பாத்திரம், இந்தியக் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்ட நட்பு, தைரியம், குழுப்பணி மற்றும் தார்மீக மதிப்புகளை உள்ளடக்கியிருக்கிறது.
சோட்டா பீம் காமிக் தொடர் வெளியீடு, அண்மையில் மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சிமாநாட்டில் வலியுறுத்தப்பட்ட தொலைநோக்குப் பார்வையை எதிரொலிக்கிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உள்ளடக்கம் மூலம் இந்தியாவின் படைப்புப் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த உச்சிமாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.
*****
(Release ID: 2154100)
SMB/SG
(Release ID: 2154289)
Visitor Counter : 4
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam