ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் “இந்திய கைத்தறித் தொழிலில் கார்பன் தட மதிப்பீடு” புத்தகத்தை வெளியிட்டார்

Posted On: 06 AUG 2025 1:32PM by PIB Chennai

ஜவுளி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கைத்தறிக்கான வளர்ச்ச்சி ஆணையர் அலுவலகமும் தில்லி ஐ.ஐ.டி.யின் ஜவுளி மற்றும் துணியிழை பொறியியல் துறையும் இணைந்து தயாரித்துள்ள “இந்திய கைத்தறித் தொழிலில் கார்பன் தட மதிப்பீடு” என்ற புத்தகத்தை இன்று ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்.

இந்த குறிப்பிடத்தக்க ஆவணமானது சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கைத்தறி உற்பத்தி மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்கான இந்திய அரசின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. சமூக பொருளாதாரப் பிரிவின் முக்கிய அங்கமாகவும் இந்தியாவின் செறிவான கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் உள்ள கைத்தறித் தொழிலில் கார்பன் தடத்தை அளவிடவும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் தெளிவான நடைமுறை சார்ந்த முறையியல்களை இந்த ஆவணம் வழங்குகின்றது.

கைத்தறி தொழில் பிரிவானது சுமார் 35 லட்சம் நபர்களின் ஊரக மற்றும் பகுதியளவு ஊரக வாழ்வாதாரத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது. இந்தத் தொழில் பிரிவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் நெசவாளர்களும் அது தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களும் உள்ளனர். ஆகவே இந்தத் தொழில்பிரிவானது பெண்களின் பொருளாதார தன்னுரிமைக்கான இன்றியமையாத ஆதாரமாக உள்ளது. கைத்தறித் தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் அதிகளவிலான தேவை ஏற்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் நிகழ்நேர ஆய்வுகளின் மூலம் கார்பன் தடத்தை அளவீடு செய்வதற்கான எளிய வழிமுறைகளையும் அதேபோன்று, குறைந்த செலவில் தரவு சேகரிப்பு மற்றும் கார்பன் உமிழ்வு அளவீட்டு முறைகளையும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், நெசவாளர் சேவை மையங்கள், அடித்தட்டு நெசவாளர் குழுக்கள், கிரீன்ஸ்டிச் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் முக்கியமான அரசு முகமைகள் ஆகியவற்றின் நிபுணர்களுடன் விரிவாக மேற்கொண்ட கலந்தாலோசனைகளையும் இந்த அறிக்கை / புத்தகம் கொண்டுள்ளது.

ஜவுளி அமைச்சகமானது ஊடகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களையும் இந்த மதிப்புமிகுந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளை நடைமுறையில் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2152924)

AD/TS/DL


(Release ID: 2153265)