உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாட்டினரின் இந்தியப் பயணத்தை எளிதாக்க இ-விசா வசதி

Posted On: 05 AUG 2025 3:35PM by PIB Chennai

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் திறன் மிகு பணியாளர்கள், வணிகர்கள், மாணவர்கள் போன்ற வெளிநாட்டினரின் சட்டப்பூர்வமான உள்நாட்டுப் பயணத்தை முறைப்படுத்த இந்தியாவில்  வலுவான விசா அமைப்பு உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்த தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதே வேளையில், வெளிநாட்டு பயணிகளின் முறையான பயணத்தை எளிதாக்கும் நோக்கில் விசா அமைப்பை தாராளமயமாக்க, நெறிப்படுத்த மற்றும் எளிமைப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்திய விசா அமைப்பை, குறிப்பாக சுற்றுலா விசா அமைப்பை, தாராளமயமாக்க மற்றும் எளிமைப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை, இ-விசா வசதியை அறிமுகப்படுத்துவதாகும். 43 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு நவம்பர் 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு பயண அங்கீகாரத்துடன் இந்த வசதி, தற்போது 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு 32 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 06 முக்கிய துறைமுகங்கள் வழியாக நாட்டிற்குள் வருவதற்கு கிடைக்கிறது. இ-சுற்றுலா விசா, இ-வணிக விசா, இ-மருத்துவ விசா, இ-மருத்துவ உதவியாளர் விசா, இ-மாநாட்டு விசா, இ-ஆயுஷ் விசா, இ-ஆயுஷ் உதவியாளர் விசா, இ-மாணவர் விசா, இ-மாணவர் எக்ஸ் விசா, இ-டிரான்சிட் விசா, இ-மலையேறுதல் விசா, இ-ஃபிலிம் விசா மற்றும் இ-நுழைவு (X-1) விசா போன்ற 13 துணைப் பிரிவுகளின் கீழ் மின்-விசா தற்போது கிடைக்கிறது.

மின்-விசாவின் செயலாக்கம் முற்றிலும் ஆன்லைன் தளத்தில் உள்ளது. வெளிநாட்டவர் ஒருவர் எங்கிருந்தும் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். சுற்றுலா, வணிகம் மற்றும் மருத்துவ நோக்கங்கள் போன்ற சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்குள் சிக்கல் இல்லாத நுழைவை வழங்க இ-விசா அறிமுகம் உதவி செய்கிறது.

2019-ல் 30 நாட்களுக்கான இரட்டை நுழைவு மின்-சுற்றுலா விசா 25 அமெரிக்க டாலர் விசா கட்டணத்துடன் தொடங்கப்பட்டது. பயணிகள் வருகை குறைவாக இருக்கும் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க, 25 அமெரிக்க டாலர் விசா கட்டணம் 10 அமெரிக்க டாலர்களாகக் குறைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

---- 

(Release ID: 2152493)

AD/SM/KR


(Release ID: 2152648)