பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இந்தியாவின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவரான முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தைப் பிரதமர் வெளியிட்டார்

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமையின் சின்னமாக அறியப்படுகிறார்கள்: பிரதமர்

சோழப் பேரரசின் வரலாறும் மரபும் நமது மாபெரும் தேசத்தின் வலிமையையும் உண்மையான ஆற்றலையும் பிரதிபலிக்கின்றன: பிரதமர்

சோழர் சகாப்தம் இந்திய வரலாற்றின் பொற்காலங்களில் ஒன்றாகும்; அந்தக் காலம் வலிமைமிக்க ராணுவ ஆற்றலால் தனித்து நிற்கிறது. பிரதமர்

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை நிறுவினார்; இன்றும் கூட, இந்தக் கோயில் உலகம் முழுவதும் போற்றப்படும் ஒரு கட்டடக்கலை அதிசயமாக நிற்கிறது: பிரதமர்

சோழப் பேரரசர்கள் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை ஒரே நூலில் நெய்திருந்தனர். இன்று, இந்த அரசு சோழர் சகாப்தத்தின் அதே தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்கிறது. காசி-தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் மூலம், நூற்றாண்டுகள் பழமையான ஒற்றுமைப் பிணைப்புகளை நாங்கள் வலுப்படுத்துகிறோம்: பிரதமர்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட

Posted On: 27 JUL 2025 4:18PM by PIB Chennai

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

 

புனித சவான் (ஆடி) மாதத்தின் முக்கியத்துவத்தையும், பிரகதீஸ்வரர் சிவன் கோயில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வையும் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இத்தகைய சிறப்பான தருணத்தில் பிரகதீஸ்வரரின் பாதத்தில் அமர்ந்து வழிபாடு செய்வது தமக்கு கிடைத்த நல்வாய்ப்பு என அவர் கூறினார். 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடு செய்ததாகக் கூறிய அவர், சிவபெருமானின் ஆசீர்வாதங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

 

மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட,  1000 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் கண்காட்சியைப் பார்வையிடுமாறு திரு நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார். சின்மயா மிஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் கீதை தொகுப்பின் வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். இந்த முயற்சி நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான உறுதியை ஊக்குவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியுடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

 

சோழ ஆட்சியாளர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்கு ஆசிய பகுதிகள் என பல இடங்களில் தங்கள் ராஜதந்திர, வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தியதை பிரதமர் எடுத்துரைத்தார். நேற்று மாலத்தீவிலிருந்து திரும்பி வந்து இன்று தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது தற்செயல் நிகழ்வாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

சிவனை தியானிப்பவர்கள் அவரைப் போலவே நித்தியமானவர்கள் என்று கூறும் வேதங்களை மேற்கோள் காட்டிய பிரதமர், சிவபெருமானின் மீதான அசைக்க முடியாத பக்தியில் வேரூன்றிய இந்தியாவின் சோழ பாரம்பரியம் அழியாத நிலைத் தன்மையை அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் மரபு இந்தியாவின் தனித்தன்மைக்கும் பெருமைக்கும் ஒரு அடையாளமாகும் என்று பிரதமர் கூறினார். சோழப் பேரரசின் வரலாறும் பாரம்பரியமும் இந்தியாவின் உண்மையான ஆற்றலைப் பறைசாற்றுகிறது என்று அவர் கூறினார். இந்த பாரம்பரியம், வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான தேசிய விருப்பத்தை ஊக்குவிக்கிறது என்றும், ராஜேந்திர சோழனின் நீடித்த பாரம்பரியத்துடன் இது இணைந்துள்ளது என்றும் அவர் கூறினார். ஆடித் திருவாதிரை விழாவைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இன்றைய பிரமாண்டமான நிகழ்ச்சி அதன் நிறைவைக் குறிக்கிறது என்றும், இந்த நிகழ்வில் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

 

சோழர்களின் காலத்தை இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்றாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர் என அவர் தெரிவித்தார். இது அதன் ராணுவ வலிமையால் தனித்துவமாகத் திகழ்ந்த சகாப்தமாகும் என்று பிரதமர் கூறினார். சோழப் பேரரசு இந்தியாவின் ஜனநாயக மரபுகளை வளர்த்தது எனவும்  இது பெரும்பாலும் உலகளாவிய ரீதியில் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயகத்தின் பின்னணியில் பிரிட்டனின் மாக்னா கார்ட்டாவைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் பேசினாலும், சோழப் பேரரசு குடவோலை அமைப்பு முறை மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத் தேர்தல் நடைமுறைகளை செயல்படுத்தியதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இன்றைய உலகளாவிய பேச்சு பெரும்பாலும் நீர் மேலாண்மையையும் சூழலியல் பாதுகாப்பையும் சுற்றியே உள்ளது என்று திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இந்தியாவின் மூதாதையர்கள் இந்தப் பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை நீண்ட காலத்திற்கு முன்பே புரிந்துகொண்டனர் என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். பல மன்னர்கள் தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளை பிற பகுதிகளிலிருந்து வாங்கியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள் என்றாலும், ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரைக் கொண்டு வந்ததற்காக அங்கீகரிக்கப்படுகிறார் என்று அவர் குறிப்பிட்டார். ராஜேந்திர சோழன் வட இந்தியாவிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து தெற்கில் நிறுவியதை பிரதமர் எடுத்துரைத்தார். "கங்கா ஜலமயம் ஜெயஸ்தம்பம்" என்ற சொற்றொடரை அவர் குறிப்பிட்டார், அந்த நீர் இப்போது பொன்னேரி ஏரி என்று அழைக்கப்படும் சோழ கங்கை ஏரியில் செலுத்தப்பட்டது என்பதைப் பிரதமர் விளக்கினார்.

 

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை நிறுவினார் என்றும், இது உலக அளவில் தொடர்ந்து கட்டடக்கலை அதிசயமாக அங்கீகரிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.  காவிரி அன்னையின் நிலத்தில் கங்கையைக் கொண்டாடுவது சோழப் பேரரசின் மரபு என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த வரலாற்று நிகழ்வின் நினைவாக, கங்கை நீர் மீண்டும் காசியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் அந்த இடத்தில் முறையான சடங்கு நடத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். காசியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான தமக்குக் கங்கை அன்னையுடனான தமது ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமான தொடர்பைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார். சோழ மன்னர்களுடன் தொடர்புடைய முயற்சிகளும் திட்டங்களும் புனிதமானவை என அவர் கூறினார்.  "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்பதன் அடையாளமாக, இந்த முயற்சிகள் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கின்றன என்று அவர் கூறினார்.

 

சோழ ஆட்சியாளர்கள் இந்தியாவை கலாச்சார ஒற்றுமை எனும் நூலில் பிணைத்தனர் என்று பிரதமர் தெரிவித்தார். சோழர் காலத்தின் அதே கொள்கைகளை இப்போது இந்த அரசு முன்னெடுத்துச் செல்கிறது என்று பிரதமர் கூறினார். காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள் பல நூற்றாண்டுகள் பழமையான ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பழங்கால கோயில்கள் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி மேலும் கூறினார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவின் போது, சைவ ஆதீனத்தைச் சேர்ந்த துறவிகளின் ஆன்மீக வழிகாட்டுதலுடன் விழாவை வழிநடத்தியதைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். தமிழ் பாரம்பரியத்துடன் தொடர்புடைய புனிதமான செங்கோல், நாடாளுமன்றத்தில் சம்பிரதாய ரீதியாக நிறுவப்பட்டது என்றும், அந்த தருணத்தை தாம் இன்றும் மிகுந்த பெருமையுடன் நினைவில் கொண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து வந்த தீட்சிதர்களுடனான சந்திப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.  சிவபெருமான், நடராஜர் வடிவத்தில் வழிபடப்படும் தெய்வீக கோயிலில் இருந்து புனித பிரசாதத்தைத் தமக்கு அவர்கள் வழங்கியதாகப் பிரதமர் கூறினார். நடராஜரின் வடிவம் இந்தியாவின் தத்துவ, அறிவியல் அடித்தளங்களைக் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நடராஜரின் ஆனந்தத் தாண்டவ சிலை தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தை அலங்கரிக்கிறது என்றும் அங்கு ஜி-20 உச்சி மாநாட்டுக்காக உலகத் தலைவர்கள் ஒன்று கூடினர் என்றும் பிரதமர் கூறினார்.

 

"இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை வடிவமைப்பதில் சைவப் பாரம்பரியம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தக் கலாச்சார வளர்ச்சியில் சோழப் பேரரசர்கள் முக்கிய பங்காற்றினர், மேலும் தமிழ்நாடு துடிப்பான சைவ பாரம்பரியத்தின் முக்கிய மையமாகத் தொடர்கிறது" என்று பாராட்டிய பிரதமர், மதிப்பிற்குரிய நாயன்மார் துறவிகளின் மரபு, அவர்களின் பக்தி இலக்கியம், தமிழ் இலக்கிய பங்களிப்புகள் மற்றும் ஆதீனங்களின் ஆன்மீக செல்வாக்கு ஆகியவற்றை எடுத்துரைத்தார். இந்தக் கூறுகள் சமூக மற்றும் ஆன்மீகத் துறைகளில் ஒரு புதிய சகாப்தத்தை ஊக்குவித்ததாக அவர் கூறினார்.

 

இன்றைய உலகம் நிலையற்ற தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதைக் குறிப்பிட்ட திரு மோடி, சைவ தத்துவம் அர்த்தமுள்ள தீர்வுகளுக்கான பாதைகளை வழங்குகிறது என்பதை வலியுறுத்தினார்.  "அன்பே சிவம்" என்று எழுதிய திருமூலரின் போதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். உலகம் இந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டால், பல நெருக்கடிகள் தாமாகவே தீர்க்கப்பட்டுவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார், இந்தியா இந்த தத்துவத்தை 'ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற குறிக்கோளின் மூலம் முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

 

"இன்று, இந்தியா ‘வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்தால் வழிநடத்தப்படுகிறது, மேலும் நவீன இந்தியா அதன் வரலாற்றில் பெருமை கொள்கிறது" என்று திரு மோடி கூறினார், கடந்த பத்தாண்டுகளில், நாடு அதன் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் திருடப்பட்டு விற்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 2014 முதல், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, குறிப்பாக, அவற்றில் 36 கலைப்பொருட்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நடராஜர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நந்திகேஸ்வரர், உமா பரமேஸ்வரி, பார்வதி மற்றும் சம்பந்தர் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பாரம்பரியச் சிலைகள் மீண்டும் இந்த நிலத்தை அலங்கரிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

 

இந்தியாவின் பாரம்பரியமும், சைவ தத்துவத்தின் தாக்கமும் இனி அதன் புவியியல் எல்லைகளுக்குள் மட்டும் இல்லை என்பதை வலியுறுத்திய திரு. மோடி, சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்ந்தது என்றார். சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு "சிவ-சக்தி" என்று பெயரிடப்பட்டதுடன், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார்.

 

"சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளாதார மற்றும் உத்திசார் முன்னேற்றங்கள் நவீன இந்தியாவிற்கு உத்வேகமாக உள்ளன; ராஜராஜ சோழன், ஒரு சக்திவாய்ந்த கடற்படையை நிறுவினார், இது ராஜேந்திர சோழனால் மேலும் வலுப்படுத்தப்பட்டது" என்று குறிப்பிட்டு, சோழர் காலத்தில் உள்ளூர் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வலுவான வருவாய் கட்டமைப்பை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக சீர்திருத்தங்கள் எட்டப்பட்டன என்று பிரதமர் கூறினார். வணிக முன்னேற்றம், கடல் வழிகளைப் பயன்படுத்துதல் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் மூலம் இந்தியா அனைத்து திசைகளிலும் வேகமாக முன்னேறியது என்றும், சோழப் பேரரசு, ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பண்டைய பாதையாக செயல்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். வளர்ந்த நாடாக மாற, இந்தியா ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதன் கடற்படை மற்றும் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டும், புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும், அதன் முக்கிய மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் திரு மோடி மேலும் கூறினார். இந்த தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு நாடு முன்னேறி வருவதில் அவர் திருப்தி தெரிவித்தார்.

 

 

இன்றைய இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஆபரேஷன் சிந்தூரை மேற்கோள் காட்டி, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இந்தியாவின் உறுதியான மற்றும் தீர்க்கமான பதிலை உலகம் கண்டதாகக் கூறினார். பயங்கரவாதிகள் மற்றும் நாட்டின் எதிரிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் இல்லை என்ற  ஒரு தெளிவான செய்தியை இந்த நடவடிக்கை வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்,  இந்திய மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஒட்டுமொத்த உலகமும் அதைக் காண்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். பின்னர், கங்கைகொண்ட சோழபுரம் கட்டுமானத்தை எடுத்துரைத்து, ராஜேந்திர சோழனின் மரபுக்கு இணையான சிந்தனையுடன் கூடிய ஒப்பீட்டை திரு. மோடி சுட்டிக்காட்டினார். ஆழ்ந்த மரியாதை அளிக்கும் வகையில், இக்கோயில் கோபுரம், தஞ்சாவூரில் அவரது தந்தை எழுப்பிய  பிரகதீஸ்வரர் கோயில் கோபுரத்தைவிட தாழ்வாகக் கட்டப்பட்டது. சாதனைகள்  மட்டுமல்லாமல், ராஜேந்திர சோழனின்  பணிவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.. "வலுவாக மாறும் அதே வேளையில், உலகளாவிய நலன் மற்றும் ஒற்றுமையின் மதிப்புகளில் வேரூன்றியிருக்கும் உணர்வையே இன்றைய புதிய இந்தியா  உள்ளடக்கியிருக்கிறது" என்று பிரதமர் கூறினார்.

 

இந்தியாவின் பாரம்பரியத்தின் பெருமையை மேம்படுத்துவதற்கான தனது உறுதியை வலியுறுத்திய திரு. மோடி, ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகனும் புகழ்பெற்ற ஆட்சியாளருமான முதலாம் ராஜேந்திர சோழனின் பிரமாண்டமான சிலைகள் வரும் காலங்களில் தமிழ்நாட்டில் நிறுவப்படும் என்று அறிவித்தார். இந்த சிலைகள், இந்தியாவின் வரலாற்று உணர்வின் நவீன தூண்களாக செயல்படும் என்று அவர் கூறினார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினமான இன்று, வளர்ந்த இந்தியாவை வழிநடத்த, டாக்டர் கலாம் மற்றும் சோழ மன்னர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டிற்கு தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார். வலிமையும் அர்ப்பணிப்பும் நிறைந்த அத்தகைய இளைஞர்கள் 140 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று வலியுறுத்தி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். ஒன்றாக, நாம் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உறுதியை முன்னெடுப்போம் என்று கூறிய அவர், இந்த நிகழ்வை முன்னிட்டு  நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளையம் தெரிவித்துக் கொண்டார். மதிப்பிற்குரிய துறவிகள், தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி:

 

இந்தியாவின் மிகச்சிறந்த பேரரசர்களில் ஒருவரான முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் திரு நரேந்திர மோடி ஆடித் திருவாதிரை விழாவைக் கொண்டாடினார்.

 

இந்தியாவின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவரான முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவிற்கான புகழ்பெற்ற கடல் பயணம் மற்றும் சோழக் கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்கும் சின்னமான கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தின் 1000 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் இந்தச் சிறப்பு கொண்டாட்டம் நினைவுகூர்ந்தது.

 

இந்திய வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியாளர்களில் ஒருவராக முதலாம் ராஜேந்திர சோழன் (கிபி 1014–1044) திகழ்ந்தார். அவரது தலைமையில், சோழப் பேரரசு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியது. தனது வெற்றிகரமான படையெடுப்புகளுக்குப் பிறகு அவர் கங்கைகொண்ட சோழபுரத்தை பேரரசின் தலைநகராக நிறுவினார், மேலும் அவர் அங்கு கட்டிய கோயில் 250 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ பக்தி, நினைவுச்சின்ன கட்டிடக்கலை மற்றும் நிர்வாகத் திறமையின் ஒரு கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. இன்று, இந்தக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக உள்ளது, அதன் அரிய சிற்பங்கள், சோழ வெண்கலப் பட்டயங்கள் மற்றும் பண்டைய கல்வெட்டுகளுக்குப் பெயர் பெற்றது.

 

ஆடித் திருவாதிரை விழா, தமிழ் சைவ மதத்தின் துறவிகளான 63 நாயன்மார்களால் அழியாத, சோழர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படும் வளமான தமிழ் சைவ பக்தி பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. குறிப்பாக, ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான திருவாதிரை (ஆருத்ரா) ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது. இது இந்த ஆண்டு விழாவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது.

*****

(Release ID: 2149075)

AD/PLM/RB/RJ


(Release ID: 2149106)